மனித உரிமைகள் ஆணையத்தின் (state human rights commission) தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாநில முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், சட்டப்பேரவை தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவால் தேர்வு செய்யப்பட்டு, அக்குழு பரிந்துரைப்பவரை ஆளுநர் நியமனம் செய்கிறார். தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக பணியாற்றி வந்தவர் கடந்த டிசம்பர் 2023 -ல் ஓய்வு பெற்றார். மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளே மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக பதவி வைக்க தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். கடந்த ஐந்து மாதங்களாக ஆணையத்துக்கு புதிய தலைவர் நியமிக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், முதல்வர் தலைமையிலான தேர்வு குழு, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக கேரள மாநில முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.மணிகுமாரை நியமிக்க ஆளுநருக்கு பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் மனித உரிமைகள் ஆணைய தலைவர் நியமனத்துக்கான ஆணை ஆளுநரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2006 ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக எஸ்.மணிக்குமார் பணியாற்றினார். 2019 ஆண்டு அக்டோபர் மாதம் கேரளா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2023 ஏப்ரல் 23 அன்று அவர் ஓய்வு பெற்றார். பதவியை ஏற்றுக்கொள்ளும் நாளிலிருந்து மூன்றாண்டுகளுக்கு நீதிபதி எஸ். மணிக்குமார் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக பணியாற்றுவார்.
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் வரும் காலத்தில் மாநிலம் முழுவதும் மனித உரிமைகள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதும் மனித உரிமைகள் தொடர்பான புகார்களை விரைவில் விசாரித்து தகுந்த பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் இணையதளம் வாயிலாகவே புகார்களை சமர்ப்பிக்கவும் சமர்ப்பிக்கப்பட்ட புகார்களின் நிலையை அறியவும் தேவையான வசதிகளை புதிய தலைவர் ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணையில் சென்னையில் மட்டும் நடைபெறாமல் மாவட்ட தலைநகரங்களில் முகாம் விசாரணை மன்றங்களை (camp trial) அமைத்து விசாரணை நடத்தினால் பொதுமக்களுக்கு மனித உரிமைகளுக்கான நீதியை அணுகுவதில் சிரமம் இல்லாமல் இருக்கும் என்பதே மனித உரிமை ஆர்வலர்களின் கருத்தாகும்.