Advertisement

தமிழ்நாடு குழந்தைகள் ஆணையத்தை (கமிஷனை) அமைக்க தடை நீங்கியது – வலுவான ஆணையம் அமைய டாக்டர் வீ.ராமராஜ் கமிட்டியின் விதிகள் அமல்படுத்தப்படுமா?

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டம் (2005)   தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தையும்  ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தையும் அமைக்க வழி செய்தது. சில மாநில அரசுகள் மாநில ஆணையங்களை அமைக்க கால தாமதம் செய்ததால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு காலக்கெடு நிர்ணயம்  செய்ததன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் மாநில ஆணையங்கள் அமைக்கப்பட்டன.

பணிகள்

மாநில குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையங்கள் (State Commission for Protection of Child Rights) இளையோர் நீதி சட்டப்படி உருவாக்கப்பட்டு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் குழந்தை பாதுகாப்பு அலகுகள் (District Child Protection Units),  குழந்தை பாதுகாப்பு குழுக்கள் (Child Welfare Commitees), இளையோர் நீதி குழுமம் (Juvenile Justice Board), பதிவு செய்யப்பட்ட குழந்தை பாதுகாப்பு இல்லங்கள் (Children’s Homes) மற்றும் தத்தெடுப்பு மையங்கள் (Adoption Centres) உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் பணியை பிரதானமாக செய்து வருகின்றன.  

கல்வி உரிமை பாதுகாப்பு சட்டம் (ஆர்.டி.ஐ), குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம்( போக்சோ), குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம், குழந்தை திருமண ஒழிப்புச் சட்டம் ஆகியவை செயல்படுவதை கண்காணிக்கும் அமைப்பாகவும் மாநில குழந்தை ஆணையங்கள் செயல்படுகின்றன. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து வரும் புகார்கள் மீது விசாரணை நடத்துவதற்கும் இத்தகைய குற்றங்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரியவந்தால் ஆணையமே தானாக முன்வந்து விசாரணை நடத்துவதற்கும் அதிகாரம் பெற்ற அமைப்பாக குழந்தை உரிமைகள் ஆணையங்கள் உள்ளன.

குழந்தைகள் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆய்வுகளை மீட்பது மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளையும் செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ள   மாநில குழந்தைகள் ஆணையம் மாநிலத்தில் உள்ள அனைத்து குழந்தைகளின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த   காவலனாக இருக்க வேண்டிய அமைப்பாகும். 

முடக்கம்

இறுதியாக, கடந்த 2021 ஜனவரி மாதத்தில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு தலைவர் மற்றும் ஆறு உறுப்பினர்கள் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டனர். இதில் ஒரு உறுப்பினர் பதவியேற்காமல் இருந்த நிலையில் மற்றொரு உறுப்பினரான டாக்டர் வீ. ராமராஜ் கடந்த 2022 மார்ச் மாதத்தில் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இந்நிலையில், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்கி ஆணையத்தை கலைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நியமிப்பதற்கான விண்ணப்பங்களை தமிழக அரசு விளம்பரம் மூலம் பெற்றது. ஆணையத்தை கலைத்தது சட்டவிரோதம் என அப்போதைய தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்கள் தாக்கல் செய்த வழக்கில் புதிய நியமனங்களுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

இதன் காரணமாக, குழந்தைகள் உரிமைகளின் காவலனான தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த 32 மாதங்களாக தமிழகத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இல்லாமல் செயலிழந்து உள்ளது. இதனால், குழந்தையின் உரிமைகள் தொடர்பாகவும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாகவும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் செய்து வந்த அனைத்து பணிகளும் முடங்கிப் போயின. 

தடை நீங்கியது

இந்நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன்னர் நிலுவையில் இருந்த வழக்கை முடித்து வைத்து தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால், தமிழக அரசு தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை உடனடியாக நியமித்து முடங்கிப் போன ஆணையத்தை விரைவில் புதுப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும், ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கு முன்னதாக ஆணையத்தின் வலுவற்ற தன்மையை மாற்றி அமைப்பது தமிழக அரசின் கடமையாகும்.

டாக்டர் வீ. ராமராஜ் மாதிரி விதிகள்

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள பணிகளை தமிழ்நாடு மாநில குழந்தைகள் ஆணையம் செய்வதற்கு ஏற்றவாறு உள்கட்டமைப்பு வசதிகளும் 2012 ஆம் ஆண்டில் மாநில அரசால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு குழந்தைகள் ஆணைய விதிகளும் இல்லை என்பதாகும்.  தமிழ்நாடு குழந்தைகள் ஆணையத்துக்கு புதிய விதிகளை உருவாக்க அரசுக்கு பரிந்துரை செய்யும் வகையில் மாதிரி வரைவு விதிகளை தயாரிக்கும் பணிக்கு தமிழ்நாடு குழந்தைகள் ஆணையத்தின் தீர்மானம் மூலம் கடந்த 2021 ஆம் ஆண்டு அப்போதைய உறுப்பினர் டாக்டர்   வீ. ராமராஜ் (Dr. V. Ramaraj One Man Committee) நியமனம் செய்யப்பட்டார்.  ஒன்பது அத்தியாயங்களில் 27 விதிகளை கொண்ட 28 பக்கங்கள் அடங்கிய மாதிரி   விதிகளை (Model Rules) அவர் சமர்ப்பித்த போதிலும் அதனை ஆணைய கூட்டத்தில் அங்கீகரித்து அரசுக்கு மாநில குழந்தைகள் ஆணையம் சமர்ப்பிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து  மாதிரி விதிகளை தாக்கல் செய்த உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா  செய்து விட்டார். 

இந்த விதிகள் மூலம் சுதந்திரமான, சிறந்த உட்கட்டமைப்பு உள்ள, வலுவான செயல்பாட்டிற்கு தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தை கொண்டு செல்லவும் இந்தியாவிலேயே மிகச்சிறந்த ஆணையமாக மாற்றவும் வழி ஏற்படும் என்று கருதப்படுகிறது. இதனால் டாக்டர் வீ. ராமராஜ் சமர்ப்பித்த மாதிரி விதிகள் (Dr. V. Ramaraj’s Model Rule for SCPCR) அடங்கிய அறிக்கையை உடனடியாக தமிழக அரசு அங்கீகரித்து அரசிதழில் வெளியிட வேண்டும் என்பது குழந்தை பாதுகாப்பு ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது. இதுகுறித்து தமிழ் இந்து, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய நாளிதழ்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்துக்கு டாக்டர் வீ. ராமராஜ் ஒரு நபர் கமிட்டியின் மாதிரி விதிகளை அமல்படுத்தி குழந்தைகள் ஆணையத்துக்கு புத்துயிர் அளிக்காவிட்டால் குழந்தைகளின்  உரிமைகளும் பாதுகாப்பும் கேள்விக்குரியதாகவே தொடரும் என்பதில் ஐயமில்லை. தமிழ்நாடு அரசின் முன்புள்ள முதலாவது பணி – மாதிரி விதிகளை அமல்படுத்தி குழந்தைகள் ஆணையத்துக்கு வலுவான அமைப்பை ஏற்படுத்துவது. இரண்டாவது பணி – தகுந்த நபர்களை தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிப்பதாகும். தடையை நீக்கி ஆணையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர சட்டப் போராட்டத்தை மேற்கொண்ட தமிழக அரசு விரைவில் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதில் ஐயமில்லை. 

பத்திரிக்கை செய்திகள்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles