நம்மில் பலரும் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சங்கங்களில் உறுப்பினராக இருக்கிறோம். ஒவ்வொரு சங்கத்திற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. உதாரணமாக, ஒருவர் ஒரு கோவில் நற்பணி மன்றத்தில் உறுப்பினராக இருப்பார். அவரே கிராம மேம்பாட்டு சங்கத்திலும் உறுப்பினராக இருப்பார் அல்லது ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்திலும் இருப்பார். இவ்வாறு, பொதுவான நோக்கங்களை கொண்ட சங்கங்களில் உறுப்பினராவதற்கு தனி மனிதர்களுக்கு எவ்வாறு உரிமை உள்ளதோ, அதைப்போலவே நாடுகளும் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக பல்வேறு சங்கங்களை அமைத்துக் கொள்கின்றன.
உலகில் அனைத்து நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக உள்ளன. சில நாடுகள் பாதுகாப்பு காரணமாக ஒருங்கிணைந்து ராணுவ கூட்டணிகளை (சங்கங்களை) அமைத்துள்ளன. உதாரணமாக, அமெரிக்கா இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அமைத்துள்ள நேட்டோ அமைப்பை கூறலாம். தொழில் ரீதியாக வளைகுடா நாடுகள் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சங்கத்தை (Opec) அமைத்து செயல்படுகின்றன. பூகோள அடிப்படையில் பிராந்திய ரீதியாக சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகள் சங்கம், ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம் போன்றவைகளும் செயல்படுகின்றன. இவ்வாறு ஏதாவது ஒரு பொது நோக்கத்துக்காக நாடுகள் சில இணைந்து அமைத்துள்ள சங்கங்களில் ஒன்றுதான் ஷாங்காய் ஒப்பந்த நாடுகள் என்பதாகும்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது கஜகஸ்தான் குடியரசு, சீன மக்கள் குடியரசு, கிர்கிஸ் குடியரசு, ரஷ்ய கூட்டமைப்பு, தஜிகிஸ்தான் குடியரசு மற்றும் உஸ்பெகிஸ்தான் குடியரசு ஆகியவற்றால் ஷாங்காயில் ஜூன் 15, 2001 அன்று நிறுவப்பட்ட ஒரு அரசுகளுக்கிடையேயான சங்கமாகும். பின்னர், இந்த அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளும் இணைந்தன. உறுப்பு நாடுகளுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கை, நட்பு மற்றும் நல்ல அண்டை நாடுகளை வலுப்படுத்துதல், அரசியல், வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கலாச்சாரம், கல்வி, ஆற்றல், போக்குவரத்து, சுற்றுலா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற துறைகளில் உறுப்பு நாடுகளுக்கு இடையே பயனுள்ள ஒத்துழைப்பை ஊக்குவித்தல், பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை கூட்டாக உறுதிசெய்து பேணுதல் மற்றும் ஒரு புதிய ஜனநாயக, நியாயமான மற்றும் பகுத்தறிவு சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார சர்வதேச ஒழுங்கை மேம்படுத்துதல் ஆகியன ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் நோக்கங்கள் ஆகும்.
இந்த அமைப்பின் தலைவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை நடத்துவது வழக்கமாகும். ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் அடுத்த மாநாடு வரும் அக்டோபர் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டை நடத்தும் நாடு என்ற முறையில் பாகிஸ்தான் அரசாங்கம் இந்திய பிரதமரை இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது. மக்களவைத் தேர்தல் காரணமாக கடந்த முறையில் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும் பிரதமர் பங்கேற்கவில்லை இந்த நிலையில் பாகிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்வாரா? என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதயம் கவரும் கொல்லிமலை பற்றிய கட்டுரையை படிக்க