Advertisement

புரியாத வயசு… … அறியாத நண்பர்கள்… … ஆபத்தை ஏற்படுத்தும் ஈர்ப்பு… … மாணவிகளே உஷார்! இதை படிக்கும் ஒவ்வொருவரும் வளர் பருவ பெண்களை காப்பாற்றுங்கள். இந்த கட்டுரையை அனைவருக்கும் அனுப்புங்கள்!

தற்போது எட்டாம் வகுப்பு முதல் கல்லூரி இறுதி ஆண்டு வரை படிக்கும் வளர் பருவ (teen age) மாணவ, மாணவியரிடையே ஏற்பட்டிருக்கும் ஆபத்தான குணம் என்னவென்றால் ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் அதிக நேரத்தை செலவிடுதலாகும். புதியவற்றை அறிந்து கொள்வதற்கும் படிப்பை மேம்படுத்துவதற்கும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது தவிர்க்க இயலாத காலம் இது. ஸ்மார்ட் போன் மூலமாக கிடைக்கும் நன்மைகளை போலவே ஏராளமான தீமைகளும் அதன் மூலம் உருவாகின்றன என்பதை மறுக்க இயலாது.

வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலகிராம் போன்ற சமூக இணையதளங்களை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கையில் பெரும்பகுதியினர் மாணவ – மாணவியர்கள் என்பது அனைவரும் அறிந்தது. வளர் பருவ வயதில் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் தெருவில் உள்ளவர்களிடமும் உடன்படிக்கும் மாணவ மாணவியரிடமும் உறவினர்களிடமும் பேசி பழகி உறவாடிக் கொண்டு பொதுவெளியில் விளையாடிக் கொண்டும் இருக்க வேண்டிய வளர் பருவ வயதில் இந்த சமூக ஊடக இணையதளங்கள் மாணவ, மாணவியரை வீட்டுக்குள்ளும் தனிமையிலும் கட்டி போட்டு விடுகிறது.

எட்டாம் வகுப்பு முதல் கல்லூரி வரை படிக்கும் காலம் என்பது ஆங்கிலத்தில் டீன் ஏஜ் (thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen and nineteen) என்று சொல்லக்கூடிய வளர் பருவ காலம். இந்த காலகட்டத்தில் உள்ளவர்களுக்கு புரியாத வயதாக உள்ள நிலையில் எதையும் அடையாளம் காணும் திறனை பெறுவதற்கு குழப்பமாக உள்ள மனநிலை (confused state of mind) நீடிக்கிறது. இந்தப் புரியாத வயதில் சமூக வலைத்தளங்களில் அறியாத நண்பர்களிடம் நட்பை ஏற்படுத்திக் கொள்ளும் மாணவிகளுக்கு   எமனாக இருக்கக்கூடிய மோகம் (காதல் அல்ல) அவர்களை மோசமான பாதைக்கு அழைத்துச் செல்வதோடு அவர்களின் வாழ்க்கையை சீரழித்து விடுகிறது. வளர் பருவ வயதில் உள்ள மாணவிகளை சீரழிக்க மோசமான மனிதர்களும் (individuals) குற்றவாளி  குழுக்களும் (criminal gangs) வேகமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். 

சமூக வலைத்தளங்களில் அறிமுகமில்லாத நபர்களிடம் நண்பர்களாகி கொண்டு அவர்களின் ஆட்டுவித்தலுக்கு ஆளாகி அவர்கள் அழைக்கும் இடங்களுக்கு செல்வதும் அவர்கள் வழங்கும் காதல் உத்தரவாதத்தை எடுத்துக் கொண்டு அவர்களது ஆசைக்கு உடன்படுவதும் இத்தகைய தனி மனிதர்கள் தங்களது ஆசை நிறைவேறியதும் பழகிய பெண்களை விட்டு விலகி விடுவதும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நிலை கேட்டு போவதும் இதனால் சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பமே நடுத்தெருவுக்கு வருவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

பள்ளி, கல்லூரி மாணவிகளை குறிவைத்து சமூக வலைத்தளங்களில் ஒரே நேரத்தில் பலரிடம் நண்பர்களாகி கொண்டு அவர்களை மிரட்டி ஆபாச படங்களை எடுத்து அல்லது அவர்களை மயக்கி காதல் வலையில் விழுகுமாறு செய்து பின்னர் இளம் பருவ மாணவிகளை அழைத்துச் சென்று பாலியல் தொழிலுக்கு விற்று விடும் கூட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது (trafficking) என்பது பல மாணவ – மாணவிகள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

மாணவிகளே! வளர் பருவ வயதில் வேண்டாம் சமூக வலைத்தள நட்பு! உங்கள் வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்ளவும் உங்கள்  குடும்பத்தினரின் சமூக மரியாதையை பாதுகாத்துக் கொள்ளவும் அறிமுகமில்லாத  நபரிடம்  சமூக வலைத்தளங்களில் நண்பர்களாக மாறாதீர்! அறிமுகம் இல்லாத எந்த ஒருவரிடமும் எந்த ஒரு ஊடகத்தின் வாயிலாகவும் வீடியோ காலில் பேசாதீர்கள் மாணவிகளே! உங்கள் புகைப்படங்கள் மார்பிங் செய்யப்படலாம், ஆபாச படங்களாக! பின்னர் தாங்கள் மிரட்டப்படலாம் என்பதை மனதில் கொள்ளுங்கள்!

சமூக வலைத்தளங்கள் மூலமாக வளர்பருவ மாணவிகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து இருந்தாலும் காவல் நிலையத்தில் புகார் செய்யும் மாணவிகள் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உள்ளது.  இதற்குக் காரணம் தமக்கு ஏற்பட்ட பிரச்சினை பெற்றோருக்கு தெரிந்து விடுமோ? உறவினர்களுக்கு தெரிந்து விடுமோ? உடன் படிக்கும் மாணவர்களுக்கு தெரிந்து விடுமோ? என்ற மனநிலை. இதை தாமே சரி செய்து கொள்ளலாம் என்று தன்னை மிரட்டும் நபர்களிடம் ஏமாந்து விட்டு காவல் நிலையம் சென்று இருக்கலாம் என்று எண்ணம் எண்ணத்திற்கு திரும்பும் சிலரும் உண்டு.  இத்தகைய பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டால் அவற்றில் இருந்து விடுபடுவதற்கு ஒரே வழி – பெற்றோரிடம் பேசுங்கள் அல்லது உண்மையான நண்பர்களிடம் பேசுங்கள், காவல் நிலையத்துக்கு செல்லுங்கள். இதனை செய்யாமல் பலர் தற்கொலைக்கும் பிரச்சனைகளை அதிகரித்துக் கொள்வதற்கும் வழி தேடுகிறார்கள் என்பதே உண்மை.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இது குறித்த வகுப்புகளை கட்டாயமாக்குவது அவசியமாகும். உரிய வழிகாட்டுதல்களை கல்வித் துறையும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். சமூக வலைத்தளங்கள் மூலமாக மாணவிகள் மீதான தாக்குதல்கள் யாரோ ஒருவருக்கு ஏற்படுகிறது என்று நினைக்காதீர்கள். நாளை நமக்குத் தெரிந்தவருக்கும் இந்த பாதிப்பு நிகழலாம். இத்தகைய குற்றங்களை தடுக்க நாம் ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற பங்களிப்பை செய்ய வேண்டும் என்பதை மறவாதீர்கள்.

பெற்றோர்களே! மாணவிகளின் அண்ணன்மார்களே! வளர்பருவ பிள்ளைகளுக்கு புரியாத வயதை எடுத்துச் சொல்லுங்கள்! அறியாத நண்பர்களின் ஆபத்தை பற்றி விளக்குங்கள்! சமூக வலைத்தளங்களில் 20 வயது வரை ஈடுபடாமல் இருக்குமாறு அறிவுறுத்துங்கள்!

பல்கீஸ் பீவி. மு, சட்டக் கல்லூரி மாணவி

வாழ்வின் தேடலே மகிழ்ச்சியான வாழ்க்கைதான். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒன்றின் மீது போதை. ஒவ்வொரு போதையும் ஒருவருக்கு மகிழ்ச்சி தருவதாகவே அறிமுகமாகிறது. காலம் செல்லச் செல்ல அதை நாம் கட்டுக்குள் வைக்க தவறும் போது அது நம்மை கட்டுப்படுத்தி விடுகிறது. இவற்றில் சமூக வலைத்தளங்களும் ஒன்று. எப்போது ‘ஆப்பிள்’ என்றதும் பழமும், ’வின்டோ’ என்றதும் ஜன்னலும் நினைவிற்கு வராமல் எந்திரங்கள் நினைவிற்கு வந்ததோ அப்போதே நாம் டிஜிட்டல் போதைக்கு ( Social Media addictions) ஆளாகிவிட்டோம்.

சமூக வலைத்தளங்களில் மாணவிகளிடம் நண்பர்களாகி அவர்களை ஏமாற்றும் போக்கு தற்போது அதிகரித்துள்ளது. நாள்தோரும் செய்திகளின் மூலமாக அறிவது என்னவென்றால், முகநூல், இன்ஸ்டாகிராம் மூலமாக காதலித்து ஏமாற்றப்பட்ட பெண்கள், சமூக வலைத்தளங்களில் மூலம் நண்பர்களாகி பின் துன்புறுத்தலுக்கு உள்ளாகி, தங்களின் ஆசைக்கு பயண்படுத்தப்பட்ட பெண்கள், சமூக வலைத்தளத்தின் மூலமாக ஏமாற்றப்பட்டு பல லட்சத்தை இழந்தவர்கள் என இன்னும் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். மாணவிகளின் பக்குவமின்மை, சமூக வலைத்தளங்களை கையாளும் திறன் குறைவு, சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி அளவிற்கு அதிகமான நேரத்தை பொழுதுபோக்கிற்காக செலவு செய்து அதில் வரும் ரீல்ஸ் போன்றவற்றை செய்து லைக் வாங்கி பிரபலமாக (Trend) வேண்டுமென்ற எண்ணம் அதற்காக அறிமுகம் இல்லாதவர்களிடம் பழக்கம், மற்றும் பெற்றேர்களின் அலட்சியம் என பல காரணிகள் மாணவிகளை ஆபத்தில் ஆழ்த்துகிறது.  

முகம் பாராதவர்களின் பாசமும், அன்பும் ஆதரவும், சில சமயங்களில் மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும், பல  சமயங்களில் அது ஆபத்தாகவே முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.இவற்றை மாணவிகள் புரிந்து செயல்பட வேண்டியது அவசியம். சில பெற்றேர்களும் பிள்ளைகளுக்கு நிகராக சமூக வலைத்தளங்களில் அடிமை ஆகுகிறார்கள் .அவற்றை அவர்களும் சரி செய்து சமூக வலைத்தளங்களை ஆக்கப்பூர்வமாக மற்றும் அறிவுப்பூர்வமாக பின்பற்றி தங்களைச் சார்ந்தவர்களையும் நல்வழிப்படுத்த வேண்டும்.

டி. கீர்த்தனா, சட்டக்கல்லூரி மாணவி

சமூக வலைத்தளங்களும், தொலைபேசியும் மனித வாழ்வில் இன்றியமையாததாக மாறிவிட்டன. சமூக வலைத்தளங்களில் மணிக்கணக்கில் நேரம் செலவழித்து இளம் தலைமுறையினர் எதிர்காலத்தை வீணடிக்கின்றனர் என்பது பொதுவான ஒரு குற்றச்சாட்டு.  சமூக வலைத்தளங்களில் மாணவிகளிடம் நண்பர்களாகி அவர்களை ஏமாற்றும் போக்கு அதிகரித்துள்ளது.

இவற்றை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் தவறான செயல்களிலும் ஈடுபடுகின்றனர். ஆபாசமான புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் வெளியிடுகின்றனர். இதனால் இளம் வயதினர்கள் மனதில் சலனம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அது மட்டுமின்றி, இணைய தொடர்பில் ஈடுபட்டு சில மாணவிகளை ஏமாற்றி திருமணம் செய்கின்றனர். 

இது போன்ற செயல்களால் சில மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி வெளியில் சொல்ல முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை ஒழிக்க மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், மாணவர்கள் வாழ்க்கை நெறிமுறைகளை மீறாமல் கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும்.

இறந்தவரின் மகனுக்கு தந்தை செலுத்திய ரூ 1,69,529/- மட்டும் வழங்கிய இன்சூரன்ஸ் நிறுவனம் – நான்கு வாரங்களுக்குள் ரூபாய் 37 லட்சம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு: https://theconsumerpark.com/insurance-claim-refusal-dr-v-ramaraj-order-consumer-court

Related Articles

2 COMMENTS

  1. இளம் பெண்கள் ஏமாறும் சூழல் குறித்த கட்டுரை முக்கியமானது…பயனுள்ளது

    விமலா வித்யா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles