பெரும்பாலான தமிழக நகரங்களில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நாம் பேருந்து அல்லது வேறு வாகனங்களில் பயணித்தால் இடையே குறைந்தது இரண்டு முதல் ஐந்து நபர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டிக்கொண்டு செல்போனில் பேசுவதை பார்க்கலாம். இன்னும் சொல்லப்போனால், கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் வேகமாக வரக்கூடிய தேசிய நெடுஞ்சாலைகளில் கூட இருசக்கர வாகன ஓட்டிகள் செல்போன் பேசிக்கொண்டே ஓட்டுவதை காண நேரிடுகிறது.
இன்னும் அதிர்ச்சிகரமான தகவல் என்னவெனில், வெகு தொலைவிற்கு லாரிகளை ஓட்டிச் சொல்லும் போது பல ஓட்டுனர்கள் செல்போன் ஸ்டாண்டில் செல்போனை வைத்து செல்போனில் திரைப்படம் போன்றவற்றை ஓடச் செய்து காதுகளில் இயர் போன் மாட்டிக் கொண்டு வாகனத்தை ஓட்டிச் செல்கிறார்கள். சாலைகளில் நடந்து செல்பவர்களின் பலர் செல்போனில் பேசிக்கொண்டு சாலையில் போக்குவரத்தை கவனிக்காமல் நடக்கிறார்கள் மற்றும் சாலைகளை குறுக்காக கடக்கிறார்கள்.
பலருக்கு செல்பி மோகம் மிக அதிகமாக உருவாகியுள்ளது. செல்பி எடுக்கும்போது ஏற்படும் ஆபத்துக்களால் அவர்கள் பிரச்சனைகளை தேடிக்கொள்ளுகிறார்கள். தினமும் தமது புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களின் பரப்புவதால் குற்றம் புரிபவர்களால் தவறாக அந்த படங்கள் பயன்படுத்தப்பட்டு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
செல்போனில் உள்ள விளையாட்டு அப்ளிகேஷன்களை பயன்படுத்தி விளையாடும் குழந்தைகள், இளைஞர் உள்ளிட்டோர் அதற்கு அடிமையாகி வாழ்க்கையை மறந்து விடுகின்றனர். இன்னும் சிலரோ செல்போன்களில் உள்ள அப்ளிகேஷன்களில் ரம்மி போன்ற பணம் வைத்து விளையாடும் விளையாட்டுக்களில் ஈடுபட்டு வாழ்க்கையை தொலைகின்றனர். குடும்பத்தாரின் நிம்மதியை அழிக்கின்றனர்.
இன்னும் சிலருக்கு செல்போன்களில் ரீல்ஸ், யூ ட்யூப் போன்ற சமூக ஊடகங்களின் மோகமும் மிகவும் அதிகரித்து விட்டது. இதனால், குழந்தைகளும் இளைஞர்களும் படிப்பை தொலைக்கிறார்கள். வேலை பார்க்கும் மக்கள் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தொலைக்கிறார்கள். இவ்வாறு செல்போனால் வாழ்க்கை பலருக்கு தொலைந்து போய்க் கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் அவர்கள் இதனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
பேருந்துகளில் செல்போனால் நடத்துனர்கள் படும்பாடு சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. பலர் வீட்டில் சாப்பிடும் போதும் செல்போனை பார்த்து கொண்டே சாப்பிடுகிறார்கள். கடைக்கு சென்று சாப்பிடுபவர்கள் அங்கு மற்றவர்களின் நிலையை அறிந்து கொள்ளாமல் செல்போனில் மூழ்கி விடுகிறார்கள். இன்னும் சிலரோ வீட்டில் கழிப்பறைக்கு செல்லும் போது கூட செல்போனை கையில் வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
கார் ஓட்டுநர்களும் பேருந்து ஓட்டுனர்களும் செல்போன் பேசிக்கொண்டே கவனத்தை சாலையில் செலுத்தாமல் இருப்பதும் இருந்து கொண்டே இருக்கிறது. பெரும்பாலான வாகன ஓட்டிகள் செல்போன் மணி ஒலித்ததும் அதனை உடனே எடுப்பதற்கு காட்டும் ஆர்வமும் வாகனத்தை ஓட்டுவதில் ஏற்படும் அலட்சியமும் பல்வேறு விபத்துகளுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது. தவறு செய்யும் செல்போன்வாசிகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது என்பதை விட எவ்வித தவறும் செய்யாமல் சாலையில் சென்று கொண்டிருக்கும் பிற வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படும் இவர்களால் ஏற்படும் ஆபத்துக்கள் எண்ணிலடங்கா.
இரவு பயணங்களில் ரயிலில் சிலர் சப்தத்துடன் செல்போனில் பாடல்களை கேட்டுக் கொண்டும் சமூக வலைத்தள நிகழ்வுகளை ரசித்துக் கொண்டும் செல்வதால் மற்ற பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்கள் ஏராளம். அதனை தட்டிக் கேட்கும் பயணிகளை திட்டுவதும் தாக்குவதும் ஆங்காங்கே நிகழ்கின்றன.
போதைக்கு அடிமையானவர்களை கூட திருத்தி விடலாம். ஆனால், செல்போனுக்கு அடிமையானவர்களை திருத்த முடியாது என்ற நிலைமை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மனநலத்தையும் உடல் நலத்தையும் மட்டும் செல்போன் பாதிப்பில்லை. வாழ்க்கையின் நேரத்தையே கொன்று வாழ்க்கையை தொலைக்கும் கருவியாகவும் செல்போன் மாறிவிட்டது. எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு நன்மைகளுக்காக ஏற்பட்டது எனினும், அதில் உள்ள தீமைகளில் மக்கள் முழுகி போவது வேதனையாக உள்ளது.
வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வந்து உறவினர்களுடன் நண்பர்களுடன் பொழுது போக்கிய காலமும் குழந்தைகளும் இளைஞர்களும் தெருவில் விளையாடிய காலமும் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. இவர்கள் செல்போனிலும் லேப்டாப்பிலும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையான உறவுகள் மறைந்து போலியான கற்பனை பாத்திரங்கள் இவர்களுக்கு நண்பர்களாக உருவெடுத்து இருக்கிறார்கள் இத்தகைய போக்கு மனித உறவுகளை மறக்கச் செய்து கொண்டுள்ளது.
அழுகின்ற குழந்தையை பாசத்துடன் தாலாட்டி தூங்க வைக்கும் காலம் மலையேறி செல்போனை கையில் கொடுத்து விட்டு பல தாய்மார்கள் வேறு ஒரு செல்போனில் நேரத்தை பொழுது போக்கிக் கொண்டு சென்றனர். குழந்தைகள் கண்களின் வலிமையை இழந்து விடுவதோடு தாயின் பாசத்தையும் இழந்து விடுகிறார்கள். குடும்பத்தில் தந்தையும் மகனும் தாயும் மகளும் செல்போனை வைத்துக்கொண்டு நேரத்தை செலவழித்துக் கொண்டு இருப்பதால் குடும்பத்துக்குள் ஒட்டிக் கொண்டிருக்கும் பாசம் அறுபட்டுக் கொண்டிருக்கிறது.
ஒரு காலத்தில் வாங்கிய பழைய பொருட்களில் பழுது ஏற்பட்டால் சரி செய்யும் செய்து பயன்படுத்தும் கலாச்சாரம் அடியோடு மறைந்து உபயோகிக்கும் செல்போன் பழுது ஏற்படாவிட்டாலும் கூட புதிய வடிவ செல்போன் (new model) வந்தால் உபயோகிக்கும் செல்போனை தூக்கி எறிந்து விட்டு புதிய செல்போன் வாங்கும் கலாச்சாரமும் அதிகரித்து உள்ளது. அதற்கு இணையாக பெருநகரங்களில் செல்போன் பேசிக்கொண்டு செல்லும்போது அதனை பறித்துச் செல்லும் திருடர்கள் கூட்டமும் அதிகரித்துவிட்டது.
ஆஸ்திரேலியா, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் செல்போன் உபயோகத்தை குழந்தைகளும் இளைஞர்களும் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை அமல்படுத்த தொடங்கி விட்டார்கள். செல்போனின் தேவையற்ற உபயோகத்துக்கு எதிரான யுத்தம் தொடங்க வேண்டிய நிலையில் உலகம் இருக்கிறது. இந்தியாவும் விழித்துக் கொள்ளட்டும்! செல்போன் உபயோகத்துக்கு நெறிமுறைகளை வகுத்து சட்டம் இயற்றட்டும்! கட்டுப்பாடுகளுடன் செல்போனுக்கு தடை விதிப்போம்! சில நிபந்தனைகளுடன் மீண்டும் சமூகத்தை மக்களோடு இயங்கச் செய்வோம்!