Advertisement

இந்திய மனித உரிமைகள் ஆணையம் சர்வதேச அங்கீகாரத்தை இழந்து விட்டதா? விரிவான அலசல்

தேசிய மனித உரிமைகள் ஆணையம்

ஐக்கிய நாடுகள் சபையால் கடந்த 1948 டிசம்பர் 10 அன்று உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் (Universal Declaration of Human Rights) வெளியிடப்பட்டது.  ஐக்கிய நாடுகள் சபையின் தேசிய மனித உரிமைகள் மேம்பாடு மற்றும் பாதுகாப்புக்கான அமைப்புகள் குறித்த கூட்டம் (UN International Workshop on National Institutions for the Promotion and Protection of Human Rights) கடந்த 1991 ஆம் ஆண்டில்   பிரான்சின் தலைநகரான பாரிஸில் நடைபெற்றது.      இக்கூட்டத்தில் மனித உரிமைகளுக்காக பிரத்யோகமான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தாத நாடுகள் ஓராண்டு காலத்துக்குள் அதனை உருவாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தில் இந்தியாவும் கையொப்பம்   செய்ததன் விளைவாக கடந்த 1993 ஆம் ஆண்டு இந்தியாவில் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்  இயற்றப்பட்டது.  இதன் தொடர்ச்சியாகவே இந்தியாவில் தேசிய மனித உரிமைகள் ஆணையமும் இந்திய மாநிலங்களில் மாநில மனித உரிமைகள் ஆணையங்களும் ஏற்படுத்தப்பட்டன.

பாரிஸ் கோட்பாடுகள்

பாரிஸில் நடைபெற்ற கூட்டத்தில் ஒவ்வொரு நாட்டிலும்  தேசிய மனித உரிமைகள் ஆணையங்கள் எவ்வாறு இருக்க வேண்டும்? என்ற வழிமுறைகள் வகுக்கப்பட்டன. இதனையே மனித உரிமைகளுக்கான பாரிஸ் கோட்பாடுகள் என அழைக்கின்றனர்.  பாரிஸ் கோட்பாடுகளின்படி ஒவ்வொரு நாட்டின் தேசிய மனித உரிமைகள் ஆணையங்கள் கீழ்கண்ட அம்சங்களை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

  • மனித உரிமைகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் உரிய சட்டம் இயற்றப்பட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.
  • மனித உரிமைகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்குதல், மனித உரிமைகளை கண்காணித்தல், மனித உரிமை மீறல் குறித்த புகார்களை விசாரித்தல், மனித உரிமை கல்வியை பரப்புதல் போன்ற பணிகளை செய்யும் சுதந்திரம் மனித உரிமை ஆணையங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
  • தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகளில் அரசாங்கம் தலையிடாமல் இருக்கும் வகையில் சுதந்திரமானதாக மனித உரிமை ஆணையம் இருக்க வேண்டும். 
  • மனித உரிமைகள் ஆணையம் அனைவருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் பன்முகத்தன்மை படைத்ததாக விளங்க வேண்டும்.
  • மனித உரிமை மீறல்கள் குறித்த புகார்களை விசாரிக்கவும், உரிய ஆலோசனைகளை நடத்தவும், பரிந்துரை வழங்கவும் மனித உரிமைகள் ஆணையத்துக்கு முழுமையான அதிகாரம் இருக்க வேண்டும்.
  • மனித உரிமைகள் ஆணையங்களுக்கு போதுமான நிதி உதவி, உள்கட்டமைப்பு வசதிகள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட வேண்டும்.

சர்வதேச அமைப்பு

கடந்த 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் தேசிய மனித உரிமைகள் மேம்பாடு மற்றும் பாதுகாப்புக்கான அமைப்புகள் தொடர்பான இரண்டாவது கூட்டத்தில் மனித உரிமைகள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களின் சர்வதேச ஒருங்கிணைப்பு குழு International (Coordinating Committee of institutions for the promotion and protection of human rights) ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பானது தேசிய மனித உரிமை நிறுவனங்களின் உலகளாவிய கூட்டணி (Global Alliance of National Human Rights Institutions – GANHRI) என பெயர் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. 

தேசிய மனித உரிமை நிறுவனங்களின் உலகளாவிய கூட்டணியில் 120 நாடுகளின் தேசிய மனித உரிமைகள் நிறுவனங்கள் உறுப்பினராக உள்ளன.  பாரிஸ் கோட்பாடுகளில் சொல்லப்பட்டுள்ளவற்றை முழுமையாக கடைபிடிக்கும் நாடுகளுக்கு “ஏ”   நிலை அங்கீகாரமும் (“A” grade accreditation) கோட்பாடுகளை சரிவர கடைபிடிக்காத நாடுகளுக்கு  “பி“ நிலை அங்கீகாரமும் (“B” grade accreditation)  வழங்கப்படுகிறது. “ஏ”  நிலை அங்கீகாரம் பெறாத நாடுகள் தேசிய மனித உரிமை நிறுவனங்களின் உலகளாவிய கூட்டணியின் கூட்டங்களில் பங்கெடுக்க முடியுமே தவிர விவாதத்தில் பேசவும் வாக்களிக்கவும் உரிமை இல்லை. தற்போது 88 நாடுகளுக்கு “ஏ” நிலை அங்கீகாரமும் 32 நாடுகளுக்கு “பி“ நிலை அங்கீகாரமும்   வழங்கப்பட்டுள்ளது.

அங்கீகாரக் குழு

தேசிய மனித உரிமை நிறுவனங்களின் உலகளாவிய கூட்டணியில் உள்ள நாடுகள் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா பசிபிக் மற்றும் ஐரோப்பா என நான்கு பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிராந்தியத்திலும் செயல்படும் தேசிய மனித உரிமைகள் ஆணையங்களின் மூலம் ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் ஒரு பிரதிநிதி தேர்வு செய்யப்பட்டு தேசிய மனித உரிமை நிறுவனங்களுக்கான அங்கீகார குழுவானது அமைக்கப்படுகிறது. இந்த அங்கீகார குழுவின் கூட்டம் ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாட்டின் தேசிய மனித உரிமைகள் நிறுவனத்தின் அங்கீகாரம்  ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்த குழுவால் பரிசீலிக்கப்பட்டு முடிவு செய்யப்படுகிறது.

தற்போது அங்கீகார குழுவின் தலைமை பொறுப்பை ஆசியா பசுபிக் பிராந்தியத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நியூசிலாந்து மனித உரிமைகள் ஆணையம் வகிக்கிறது. இந்தக் குழுவின் உறுப்பினர்களாக ஆப்பிரிக்கா, பிராந்தியத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட தென்னாப்பிரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையமும் அமெரிக்கா பிராந்தியத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஹோண்டுராஸ் தேசிய மனித உரிமைகள் ஆணையமும் ஐரோப்பா பிராந்தியத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கிரேக்க தேசிய மனித உரிமைகள் ஆணையமும் உள்ளன.

இந்தியாவின் அங்கீகாரம்

இந்தியாவில் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட தேசிய மனித உரிமைகள்  ஆணையம் அமைக்கப்பட்டது முதலே “ஏ” நிலை அங்கீகாரத்தை பெற்றிருந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு “ஏ” நிலை அங்கீகாரம் வழங்காமல் முடிவை ஓராண்டு காலத்திற்கு அங்கீகார குழு ஒத்தி வைத்தது. இதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மீண்டும் இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு நிலை அங்கீகாரம் வழங்கப்பட்டது. 

கடந்த 2022 ஆம் ஆண்டு அங்கீகாரத்தை  புதுப்பிப்பதற்காக இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் விண்ணப்பித்ததில் 2023 மார்ச் மாதத்தில் நடைபெற்ற அங்கீகார குழுவின் கூட்டத்தில் “ஏ”  நிலை அங்கீகாரம் வழங்கப்படாமல் முடிவு ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற அங்கீகாரக் குழுவின் கூட்டத்திலும் இந்திய ஆணையத்திற்கு “ஏ” நிலை அங்கீகாரம் வழங்கப்படாமல் முடிவு மீண்டும் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் தலைவர் மற்றும் ஐந்து உறுப்பினர்கள் இருக்க வேண்டிய நிலையில் மூவர் மட்டுமே இருக்கிறார்கள் என்றும் மூன்று காலியிடங்கள் உடனடியாக பூர்த்தி செய்யவில்லை என்றும் அங்கீகார குழு அறிக்கையில் (2023 மார்ச்) தெரிவித்துள்ளது. மேலும், தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்வதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் விளம்பரம் செய்து விண்ணப்பங்களை பெற்று நியமனம் செய்யப்படுவதில்லை என்றும் ஆணையத்தில் பன்முகத்தன்மை இல்லை என்றும் இந்த அறிக்கையில் (2023 மார்ச்) கூறப்பட்டுள்ளது.

ஆணையத்தின் பொதுச்செயலாளர் (Gernaral Secretary of NHRC) அரசு நியமிக்க கூடாது என்றும் ஆணையத்துக்கான புலனாய்வு பிரிவில் (Investigation wing) காவல் அதிகாரிகளை (Police officers) அரசு நியமிக்க கூடாது என்றும் ஆணையமே பொதுச் செயலாளர், காவல் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களையும் நேரடியாக தேர்வு செய்ய வேண்டும் என்றும் இதன் மூலம் அரசின் தலையீடு தவிர்க்கப்படும் என்றும் அங்கீகார குழுவின் அறிக்கை (2023 மார்ச்)  தெரிவிக்கிறது. (2023 ஆம் ஆண்டில் அங்கீகார குழுவின் முழுமையான அறிக்கை: https://ganhri.org/wp-content/uploads/2023/04/SCA-Report-First-Session-2023-EN.pdf 

அங்கீகாரக் குழுவின் 2024 ஆம் ஆண்டு கூட்டத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அங்கீகாரம் வழங்காமல் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணங்கள் குழுவின் முழு அறிக்கையை கிடைக்கப்பெற்ற பின்பு தெரியவரும். எவ்வாறு இருப்பினும் கடந்த  பத்தாண்டுகளில் மூன்றாவது ஆண்டாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு சர்வதேச அங்கீகாரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 

தேர்தலுக்குப் பின்னர் அமையும் அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு அடுத்த ஆண்டு நடைபெறும் அங்கீகார குழுவில் தேவையான அறிக்கைகளை சமர்ப்பித்து இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு “ஏ” நிலை அங்கீகாரத்தை பெற வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles