ஒரு உயிர் வாழ்ந்தது போதும் என்று நிர்ணயிக்கும் உரிமை யாருக்கு உண்டு? இயற்கைக்கா? கடவுளுக்கா? அல்லது படைத்த ஏதோ ஒரு சக்திக்கா? கருணைக்கொலை என்பது ஒரு மனிதனின் நீண்டகால வேதனை மற்றும் வலியை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு நடைமுறை. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், மருத்துவ சிகிச்சைகள் மூலமாக சரி செய்யப்பட முடியாத ஒரு கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு, அந்நோயினால் மிகவும் துன்பப்படுகிற ஒருவரை கொலை செய்யும் நடைமுறையாகும். கருணை கொலை என்பது ஆங்கிலத்தில் ‘EUTHANASIA’ அல்லது ‘MERCY KILLING’ என்று அழைக்கப்படுகிறது.
ஒரு மனிதனின் நிலையை மனிதாபிமானமாக எண்ணி அல்லது நிம்மதியான இறப்பை கொடுத்து கௌரவிக்க வேண்டும் எண்ணி ‘கருணைக்கொலையை’ வலியுறுத்துகின்றனர். அதே வேளையில் சிலர் கருணைக்கொலைக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். ஒருபுறம், கருணைக்கொலை மனித வாழ்க்கையின் புனிதத்தை நீர்த்துப்போகச் செய்கிறது எனவும், ஒருவரின் உயிரை அகற்றும் சக்தி யாருக்கும் இல்லை என்றும் மனித உயிரைப் பாதுகாப்பது மிக முக்கியமானது என்றும் சிலர் கருதுகின்றனர். மறுப்புறம், அரசியலமைப்பு சட்டத்தின் கோட்பாடு 21 – கீழ் வாழ்வதற்கான உரிமையை வழங்கும்போது, துன்பத்தையும் வலியையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஒரு தனிநபருக்கு கண்ணியத்துடன் இறப்பதற்கும் உரிமை உண்டு என்று சிலர் வாதிடுகின்றனர்.
2002 ஆம் ஆண்டில் கருணைக்கொலை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடாக நெதர்லாந்து உள்ளது, அதனை தொடர்ந்து பல நாடுகள் இதனை அங்கீகரித்தன. சமீபத்தில் கருணை மரணத்திற்கு பிரிட்டன் நாடாளுமன்றம் சட்டம் இயற்றி உள்ளது. அதில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பிராந்தியங்களில் வசிக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட நபருக்கு நிச்சய மரணம் தரும் நோய் உறுதி செய்யப்பட்டு, இன்னும் ஆறு மாதங்களில் இறப்பார் என்று சூழல் நிலவினால், அவர் செயற்கை முறையில் மரணத்தை தழுவ விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆரம்பத்தில், ஒரு நபரின் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உரிமையை நீதிமன்றங்கள் அங்கீகரிக்கவில்லை. மும்பை நகரின் பிரபல மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்த பெண் அருணா ராமச்சந்திரா ஷான்பாக்கை அங்கு பணிபுரிந்த துப்புரவுப் பணியாளரில் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்துடன் அருணாவை நெருங்கினான். அந்த மிருகம் கையில் இருந்த நாய் சங்கிலியால் அருணாவின் கழுத்தை நெரித்து, மாதவிலக்கு காலத்தில் இருந்த அருணாவை துன்புறுத்தி உடலுறவு கொண்டது. இதன் விளைவாக அருணாவின் மூளை பாதிப்படைந்து சுய நினைவு இல்லாமல் சுமார் 36 ஆண்டுகளாக கோமா நிலையில் அதே மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வந்தார். அருணாவின் தோழி ஒருவரால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கோட்பாடு 32 – கீழ் அருணா மிக பலவீனமாக உள்ளதால் அவரைக் கருணைக்கொலை செய்ய வேண்டும் என வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அருணாவின் கருணைக்கொலை மனு நிராகரிக்கப்பட்டது. அதே மருத்துவமனையிலேயே அருணா தன் உயிரை பிரிந்தார். இருப்பினும் “அருணா ஷான்பாக் வழக்கு” என்ற வரலாற்று வழக்கு இந்தியாவில் செயலற்ற கருணைக்கொலையை சட்டப்பூர்வமாக்குவதற்கான அடித்தளத்தை உருவாக்கியது.
தற்போது, மருத்துவர்களின் நேரடி தலையீட்டின் மூலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு விஷ ஊசி போன்றவற்றை செலுத்தி திட்டமிட்டு செய்யும் கருணைக் கொலை இந்தியாவில் சட்டவிரோதமாகும். காமன் காஸ் என்ற நிறுவனம் மத்திய அரசு மீது தாக்கல் செய்த ஒரு வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு கருணை குறைக்கு கொலைக்கு அனுமதி வழங்கியதாக அமைந்தது. “செயலற்ற நிலையில் படுத்த படுக்கையாக உள்ளவர், தீராத நோய் உடையவர்கள், கோமா நிலையில் உள்ளவர்களை அவர்களுக்கு வழங்கப்படும் செயற்கை சுவாச கருவிகள் போன்ற உயிர் காக்கும் கருவிகள், குழாய் மூலம் வழங்கப்படும் உணவு, மருந்துகள் உள்ளிட்டவற்றை நிறுத்தி, அவா்கள் இயற்கையாக மரணம் அடைய வழிவகுப்பது கருணை கொலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்” என்று இந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பின் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தின் கோட்பாடு 21- கீழ் வாழும் உரிமையின் ஒரு பகுதியாக கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமையையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது எனலாம்.
நோய்வாய்பட்ட ஒருவரை கருணைக்கொலை செய்ய வேண்டும் என்ற ஒரு கடினமான முடிவுக்கு வரும் அந்த தருணம் குடும்பத்தருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எவ்வாறாக இருக்கும் என்பதை வார்த்தையாக விவரிக்க முடியாது. சில சமயம் இந்த மரணமே அவருக்கு துன்பங்களில் இருந்து விடுதலை அழிக்கும் என கருதியிருக்க கூடும். ஒரு உயிருக்கு ஒரு முறை மட்டும்தான் மரணம் ஆனால் அந்த உயிரை நேசிப்பவர்களுக்கு தினம் தினம் மரணம் என்பதை நாம் உணராமல் இல்லை.
கட்டுரையாளர் மு. பல்கீஸ் டிவி – நாமக்கல் சட்டக் கல்லூரி மாணவி. இவரது கட்டுரைகள் பூங்கா இதழ் நுகர்வோர் பூங்காவில் வெளிவந்துள்ளன.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: கருணை கொலை குறித்த தெளிவான பார்வையும் துல்லியமான சட்டமும் காலத்தின் கட்டாயமாகும்.