தமிழக சட்டமன்றத்தில் ஓரிரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டத்துறை மானிய கோரிக்கையின் போது பேசிய சட்ட அமைச்சர் தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் சட்ட தமிழ் என்ற புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும்.
தற்போதைய சட்ட மாணவர்கள் வருங்காலத்தில் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட பல்வேறு சட்ட துறை பொறுப்புகளில் பணியாற்ற வேண்டிய நிலையில் மாணவர்களின் மொழி திறமையை வளப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது. மிகுந்த சட்ட அறிவு இருப்பினும் சிறந்த மொழி திறமை இல்லாவிட்டால் சட்ட வரைவுகளை எழுதுவதற்கும் சிறந்த முறையில் பேசி வாதிடுவதற்கும் மிகுந்த சிரமம் ஏற்படும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
தமிழக நீதிமன்றங்களில் வழக்கறிஞராகவும் நீதிபதிகளாகவும் பணியாற்ற தமிழ் போதுமானது என்றாலும் கூட உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகள் ஆங்கிலத்தில் வெளியாகும் நிலையிலும் சட்டப் புத்தகங்கள் பல ஆங்கிலத்தில் வெளியிடப்படும் நிலையிலும் ஆங்கில மொழி புலமையும் சட்ட மாணவர்கள் திறம்பட அறிந்து கொள்வது அவசியமானதாகும். ஆங்கில இலக்கணம், சரளமாக ஆங்கிலத்தில் பேசுதல், சிறப்பாக ஆங்கிலத்தில் எழுதுதல் போன்ற திறன்களை சட்ட மாணவர்கள் மேம்படுத்திக் கொண்டால் மட்டுமே வருங்காலத்தில் சட்டத்துறையில் அவர்கள் காலூன்றி நிலைத்து நிற்க முடியும்.
எனவே, தமிழக அரசின் சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மிகுந்த மொழி திறன் உடையவர்களாக, குறிப்பாக இரண்டு மொழிகளிலும் சிறப்பாக எழுதுவதிலும் சரளமாக பேசுவதிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக, உருவாக தகுந்த பயிற்சியை தமிழக அரசு வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். சட்டக் கல்லூரி மாணவர்களும் தங்களது மொழி திறனை வளர்த்துக் கொள்ள நேரத்தை செலவிட்டு பயிற்சி பெற்றுக் கொள்வது மிக அவசியமானதாகும். சட்டக் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே சட்டம் தொடர்பான கட்டுரைகளை நாளிதழ்களிலும் வார மற்றும் மாத இதழ்களிலும் எழுதவும் சட்ட ஆய்வுக் கட்டுரைகளை சட்ட ஆய்வு இதழ்களில் எழுதவும் சட்ட ஆய்வு கட்டுரைகளை சட்ட ஆய்வு மாநாடுகளை சமர்ப்பிக்கவும் மாணவர்கள் முயற்சிக்க வேண்டும்.
சட்டக் கல்லூரி மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சிறந்த புலமையை கற்றுத் தர வேண்டியது கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தமிழக அரசின் கடமையாகும்.