இன்னொரு புதிய இலக்கையும் நிர்ணயிக்கலாம், புதியதொரு கனவையும் காணலாம். ஏனென்றால், இன்னும் நமக்கு வயதாகிவிடவில்லை ……லெஸ் பிரவுன். We are never too old to set another goal or to dream a new dream…. Les Brown. புதிய பயணத்தை தொடங்கும் நமக்குள்ளும் நம்மைச் சுற்றியுள்ளும் உள்ள சூழல்களை அறிந்து கொள்ள வேண்டும்.
1. நம் வெளிமனம்: இவன் எதுக்கு எங்க அலைகிறான் என்று தெரியாமல் எப்பொழுதும் அலைந்து கொண்டும் கிறுக்குதனமாக எப்பொழுதும் யோசித்துக் கொண்டே இருப்பவன். நம் வெளி மனத்தை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியமானதாகும்.
2. நம் ஆழ்மனம்: நம் வெளி மனம் கூறுவதை நிறைவேற்றுவதற்காக திட்டங்களை தீட்டுபவன் இருப்பினும் இவன் தனது கருத்துக்களையும் வெளியிடுவான் ஆழ்மனதை செம்மைப்படுத்தி வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
3. கோழை மனம்: இவர்தான் நமக்குள் இருக்கும் எதிர்மறை எண்ணங்களின் இயக்குனர் ஆவார் எதிர்மறை எண்ணங்கள் மறைய கோழைத்தனத்தை விட்டு ஒழிக்க வேண்டும்.
வெளி மனத்தை கட்டுப்படுத்தி ஆழ்மனத்தை செம்மைப்படுத்தி எதிர்மறை எண்ணங்களை கைவிட்டு வளமாக வாழ்வோம். மேலும் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் எத்தகையவர்கள் என்பதையும் அறிந்து கொள்வது அவசியமானதாகும்.
தவிர்க்க வேண்டிய 7 வகையான மனிதர்கள்:
1. உப்புமூட்டை மனிதர்கள்: இந்த நபர்கள் உங்கள் ஆற்றலை குறைக்கிறார்கள். அதோடு உங்கள் நேரத்தையும் வீணடிப்பவர்கள். உங்கள் தேவைகளைக் கருத்தில் கொள்ளாமல் அவர்களுக்காக எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் உங்கள் ஆற்றல், நேரம் மற்றும் வளங்களை சுரண்டுவோர்.
2. கொசு மனிதர்கள்: இந்த நபர்கள் உங்கள் வாழ்க்கையில் எதிர்மறையை செலுத்தினாலும் உங்களிடமிருந்து நன்மைகளைப் பெற விரும்புகிறார்கள். அவர்கள் வழங்குவதற்கு நல்ல விசயம் எதுவும் அவர்களிடம் இருக்காது. ஆனால், எப்போதும் மற்றவர்களிடமிருந்து என்ன எடுக்க முடியும் என்பதிலேயே முறையாக இருப்பார்கள்.
3. ஆதிக்க மனிதர்கள்: இந்த நபர்கள் பெருமையை தேடுபவர்கள் மற்றும் பிறரை கட்டுப்படுத்துபவர்கள். அவர்கள் ஒருமுறை உங்களுக்கு உதவினாலும், உங்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த விரும்புபவர்கள். அவர்கள் உங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உங்கள் சுதந்திரத்தை கட்டுப்படுத்தவும் விரும்புபவர்கள்.
4. முதலை மனிதர்கள்: இவர்கள் உண்மையான நோக்கங்கள் இல்லாத பாசாங்கு மனிதர்கள். அவர்கள் உங்களின் ரகசியங்களை அறிந்து கொள்வதற்காக உங்களுடன் நெருங்கி பழகுவார்கள். மேலும், உங்களுக்குள் பிரச்சனை ஏற்படும் போது அந்த தகவலை உங்களுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய கொடியவர்கள். அவர்கள் பொய்யர்கள், முதுகில் குத்துபவர்கள்.
5. பச்சோந்தி மனிதர்கள்: இந்த பொறாமை கொண்ட நபர்கள் உங்களுடன் ஆரோக்கியமற்ற போட்டியில் இருப்பவர்கள். அவர்கள் எதிர்மறையான நோக்கங்களுடன் உங்கள் முன்னேற்றத்தை ரகசியமாக கண்காணித்து, உங்கள் வெற்றிகளை ஆதரிக்காமல் அல்லது கொண்டாடாமல் உங்கள் தவறுகளை பெரிதாக்குபவர்கள். கொஞ்சம் அசந்தால் உங்களை குற்ற உணர்வில் தள்ளி விடுவார்கள்.
6. கனவுக் கொலையாளிகள்: இந்த வகை மனிதர்கள் உங்கள் கனவுகளை பாராட்டவோ அல்லது ஆதரிக்கவோ மாட்டார்கள். அவர்கள் உங்கள் தோல்விகளை விரும்புபவர்கள். அதை மனதார ரசிப்பவர்கள். எப்போதும் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்குபவர்கள். தீர்வுகளுக்குப் பதிலாக அதிக சிக்கல்களை உருவாக்குகிறார்கள்.
7. குப்பை மனிதர்கள்: இந்த நபர்கள் எதிர்மறை மற்றும் கெட்ட செய்திகளைக் கொண்டு வருகிறார்கள். அவர்களின் வாழ்க்கை குப்பைகளால் நிரம்பியுள்ளது, அதோடு அவர்கள் உங்கள் ஊக்கத்தை கெடுத்து, மனச்சோர்வை ஏற்படுத்தும் தகவல்களை பரப்புபவர்கள். துரதிர்ஷ்டவசமாக பிறர் இதயத்தை நொறுக்கி, அதை செய்தியாக்கி, அதில் சந்தோசப்பட்டு வளர்கிறார்கள்.
உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களை மதிப்பீடு செய்து, நீங்கள் நேர்மறையான தாக்கங்களால் சூழப்பட்டிருப்பதை உறுதி செய்வது உங்கள் பொறுப்பு. நீங்கள் நேர்மறையான மனிதர்களுடன் பழகும்போதும், எதிர்மறையானவர்களிடமிருந்து உங்களை துண்டித்துக்கொள்ளும் போதும் உங்கள் வாழ்க்கை வெற்றிக்கான சரியான திசையில் நகரும்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: நம் மனதை கட்டுப்படுத்தி நம் திட்டத்தை செயல்படுத்தினால் வெற்றி நம் கைகளில்.