நம் தேசத்திலிருந்து வெள்ளையனை வெளியேற்றுவதற்கான சுதந்திரப் போரில் வெற்றி பெற்று 77 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன. தற்போது மக்களை வாட்டி வதைக்கும் பிரச்சனையிலிருந்து முழுமையான விடுதலை கிடைத்து விட்டதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டிய தருணம் இதுவாகும்.
வறுமை
இந்தியாவில் 2022- 2023 – ல், வறுமை விகிதம் 11.28 சதவீதமாகும். என்று நிதி ஆயோக்கின் விவாதக் கட்டுரையை (discussion paper) மேற்கோள்காட்டி, இந்தியாவில் இன்னும் 16 கோடி மக்கள் வறுமையில் உள்ளனர் என இந்திய அரசின் செய்தி குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. இத்தகைய வறுமையில் இருந்து விடுதலை பெறுவதே உண்மையான சுதந்திரம் ஆகும்.
பசி
கலோரி உள்ளடக்கத்தின் அடிப்படையில், உலகின் இரண்டாவது பெரிய உணவு உற்பத்தியாளராக இந்தியா இருந்தபோதிலும் சமீபத்தில் வெளியிடப்பட்ட உலகளாவிய பசி குறியீட்டில் 125 நாடுகளில் 111 ஆம் இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இது இந்தியாவின் மக்கள்தொகையில் பசியின் அளவை “தீவிரமானது” என்று குறிப்பிடுகிறது. இந்த அறிக்கையின்படி சுமார் 19 கோடி பசியுடன் வாழும் மக்களை இந்தியா கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. இத்தகைய பசியை போக்க பசி முற்றிலும் அகற்றப்படும் வரை போர் கால நடவடிக்கை தேவையானது.
ஊட்டச்சத்து குறைபாடு
இந்திய அரசு 2021 ஆம் ஆண்டில் வெளியிட்ட செய்தி குறிப்பில், ஊட்டச்சத்து குறைபாடு 32.1 சதவீத குழந்தைகளுக்கும் 15 வயது முதல் 49 வரையான பெண்களில் 18.7 சதவீத பெண்களுக்கும் நிலவுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக இந்திய மக்களின் 25 சதவீதத்தினர் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக வசிப்பதாக அறியப்படுகிறது. தேசத்தில் வாழும் மக்கள் அனைவரும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாதவர்களாக உருவாக்க வேண்டிய விடுதலைப் போர் இன்னும் முடிவடையவில்லை.
வீடு இல்லாதவர்
இந்தியாவில் சுமார் 17 லட்சம் மக்கள் வீடு இல்லாதவர்களாக வசித்து வருவதாக இணையதள தரவுகள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பகுதியினர் நகரங்களில் வசித்து வரக்கூடியவர்கள் ஆவார்கள். வீடு இல்லாதவர்களின் வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க இயலாத ஒன்றாக இருக்கிறது. கடந்த 2023 நவம்பர் மாதத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வீடு இல்லாதவர்களின் நிலையை மாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.
வேலையில்லா திண்டாட்டம்
இந்திய பொருளாதாரத்தை கண்காணிப்பு அமைப்பு தரவுகளின்படி கடந்த 2024 ஜூன் மாதத்தில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 9.2. இரண்டு சதவீதமாகும். முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் டாக்டர் கௌசிக் பாசு கருத்துப்படி, இந்தியாவின் இளைஞர் வேலையின்மை விகிதம் உலகிலேயே மிக அதிகமாக உள்ளது, மேலும், இந்தியாவின் இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 45.4 சதவிகிதம் என்ற ஆபத்தான நிலையை எட்டியுள்ளது. வேலையின்மை என்ற கொடுமையில் இருந்து விடுதலை பெறுவதற்கான போரை நடத்தி வென்றாக வேண்டும். இல்லாவிட்டால் மக்களின் வாழ்க்கை தரம் மோசமாவதோடு வேலையில்லாதவர்கள் தீய வேலைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
குற்றங்கள் அதிகரிப்பு
இந்திய அரசின் தேசிய குற்ற ஆவண காப்பக தரவுகளின்படி, இந்தியாவின் 19 பெருநகரங்கள் மக்கள்தொகையில் 8.12 சதவிகிதம் வசிக்கின்றன, ஆனால் 14.65 சதவிகித குற்றங்கள் இந்த நகரங்களில் மட்டுமே பதிவாகியுள்ளன. பெரிய நகரங்களில் குற்ற விகிதங்கள் தேசிய குற்ற விகித சராசரியை விட அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் உள்ள நகரங்களில் கடந்த 2023 ஆம் ஆண்டு பதிவான விவரங்களின்படி கொலைகள் – 28,522, ஆள் கடத்தல் – 1,07,588, பொது அமைதிக்கு எதிரான குற்றங்கள் – 57,082, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் -4,45,256, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் -1,62,449, முதியோருக்கு எதிரான குற்றங்கள் – 28,545 பொருளாதார குற்றங்கள் – 1,93,385 சைபர் குற்றங்கள் -65,893 சொத்துகளுக்கான குற்றங்கள் -8,39,252 என புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்த தரவுகளை ஆய்வு செய்யும் போது கடந்த 10 ஆண்டுகளில் நகரங்களில் குற்ற நிகழ்வுகள் அதிகரித்து இருக்கின்றன என்பதை அறிய முடிகிறது. இதே போலவே கிராமப் பகுதிகளிலும் கடந்த 10 ஆண்டுகளில் நகர பகுதிகளில் அதிகரித்த குற்ற நிகழ்வுகளை விட குறைவாக ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆண்டு சராசரி குற்ற நிகழ்வுகளுக்கு அதிகமாக குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான தீர்வு வழங்கப்பட்டிருக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும் மக்களுக்கு குற்றங்களிலிருந்து விடுதலையும் குற்றங்கள் நிகழ்வுகளால் ஏற்படும்பாதிப்புக்கான தீர்வும் உடனடித் தேவை ஆகும் தேவையாகும்.
விடுதலைப் போர்
வறுமை, பசி, ஊட்டச்சத்து குறைபாடு, வீடு இல்லாமை, வேலையில்லாமை, குற்றங்கள் அதிகரிப்பு போன்றவற்றிலிருந்து இந்திய மக்கள் விடுதலை பெறுவதற்கான இரண்டாவது சுதந்திர போராட்டத்தை தீவிரமாக தொடங்க வேண்டிய தருணம் இதுவாகும். அரசும் அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் இந்த போரில் களம் கண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.