Advertisement

வலைத்தளத்தில் படித்ததில் பிடித்தது: 1. கறி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து விட்டது போல கலப்படமும் அதிகரித்து விட்டதா? 2. சார்லி சாப்ளின் தத்துவங்கள்

கறி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து விட்டது போல கலப்படமும் அதிகரித்து விட்டதா?

சுமார் இருபது வருடங்களுக்கு முன்புவரை கூட மக்கள் கறிச்சோற்றுக்கு இப்படி ஆவலாய் ஆசைப்பட்டு பார்த்ததில்லை. இத்தனைக்கும் அப்போது எல்லா வீடுகளிலும் ஆடு, கோழிகள் வளர்ப்பார்கள். இப்போது போல அப்போது இவற்றுக்கெல்லாம் பெரிய விலை மதிப்பும் கிடையாது.

கிராமங்களுக்கு சென்றால் ஆட்டுப்பட்டி இருக்கும். எல்லா வீடுகளிலும் கோழிகளை அடைத்து வைக்கும் பெரிய கூடை இருக்கும். வேலைக்குச்சென்று வேலை செய்யும் இடங்களிலும் திரும்பும் வழியில், வேலிகளில் படர்ந்துள்ள கொடிகளை சேகரித்துக்கொண்டே செல்வார்கள் ஆடுகளுக்கு தீவனம் போட. அவர்கள் நினைத்திருந்தால் வாரம் ஒருமுறை என்ன, தினமும் கூட கறி சாப்பிட்டிருக்கலாம். ஆனால் அப்படிச்செய்ததில்லை. ஞாயிற்றுக்கிழமையானால் கறிச்சோறு  தின்றே ஆகவேண்டும் என்று மக்கள் அலைந்ததில்லை. 

முன்பெல்லாம் அசைவம் சாப்பிடுவதற்கான காரணங்கள் கூட மிக அரிதானவை. வராத விருந்தாளிகள் [ குறிப்பாக மருமகன் ] வந்தால் கோழி அடித்து குழம்பு வைப்பார்கள் அல்லது வீட்டில் குழந்தைகளுக்கு சளி பிடித்து ரொம்பவும் தொந்தரவு செய்தால் இளம் கோழிக்குஞ்சு சூப் வைத்துக்கொடுப்பார்கள் அவ்வளவே. சாமிகளுக்கு நேர்ந்துகொண்டு அவரவர் வீட்டிலேயே பொங்கல் வைத்து படையல் போடுவது உண்டு சேவல் கட்டில் பலியாகும் சேவல் கறி. மற்றபடி, ஆட்டுக்கறி சமையல் என்பது குலதெய்வம் அல்லது அவரவர்கள் ஊரிலுள்ள சிறு தெய்வ வழிபாட்டின் போது கோவில்களுக்கான நேர்ந்து கொண்டு வளர்க்கப்படும் கிடாய் வெட்டும்போதுதான்.   உற்றார், உறவினர் எல்லோரும் வந்து சாப்பிட்டுவிட்டுப் போனது போக மீதமிருக்கும் கறியை [ பெரும்பாலும் தொடைக்கறியை  ] தனியாக எடுத்து  உப்புக்கண்டம் போட்டு  கம்பிகளில் கோர்த்து வெயிலில் காயவைத்து எடுத்துவைத்துக்கொள்வார்கள். 

முன்பெல்லாம், அசைவ உணவு சமைக்க தனியான பாத்திரங்கள் வைத்திருப்பார்கள்… அசைவம் சமைத்த அன்று இரவே சுத்தமாக கழுவி சுத்தம் செய்துவிட்டு அடுத்த நாள் காலை எழுந்தவுடன் வீட்டை மாட்டுச்சாணம் போட்டு மெழுகிய [ வளிச்சு உடறது ] பிறகே அன்றைய வேலைகளை ஆரம்பிப்பார்கள்.

மிக சமீபகாலமாக மக்கள் உணவுப்பழக்கத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்ற‌ம் வியக்கவைக்கிறது. ஞாயிற்றுக்கிழமையானால் கறி சாப்பிட்டே ஆகவேண்டும் என்பது தவிர்க்கவே முடியாத விஷயமாகிவிட்டது. கறிக்கடைகளில் கூட்டம் நெறிபடுகிறது. திரும்பிய பக்கமெல்லாம் அசைவ ஹோட்ட‌ல்கள். முன்பெல்லாம், பெரிய ஊர்களில் எங்காவது ஒரே ஒரு பிரியாணிக்கடை இருக்கும். இன்று  அதன் எண்ணிக்கை பலமடங்கு.

கிராம மக்கள் நகரங்களை நோக்கி நகரும் இந்தக்காலத்தில் ஆடுவளர்ப்பு கணிசமாக குறைந்துவிட்டது. திருப்பூர் மாவட்டம் – கன்னிவாடி  ஆட்டுச்சந்தை தமிழகத்தின் மிகப்பெரிய ஆட்டுச்சந்தைகளில் ஒன்று.  இருபது வருடங்களுக்கு முன்பு வரை சந்தைக்கு வந்துகொண்டிருந்த ஆடுகளின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒருபங்கு கூட இப்போது வருவதில்லை. சென்னையைப் பொருத்த வரைக்கும் ஆந்திராவிலிருந்துதான் ஆடுகள் வந்து கொண்டிருக்கிறது அங்கு மட்டும் என்ன இதேநிலைதான் உற்பத்தி குறைவு. கோழிகளைப்போல ஆடுகளை பண்ணைகளில் வளர்க்கும் முறையும் இன்னும் அதிகரிக்கவில்லை. பின் நாள்தோறும் புற்றீசல் போல முளைக்கும் இத்தனை அசைவ ஹோட்டல்களுக்குத் தேவையான கறி எங்கிருந்து கிடைக்கும்? 

கறியில் கலக்கப்படும்…எக்கச்சக்கமான மசாலாக்கள், நிறமிகள், பிரிசர்வேட்டிவ்கள் கலக்கப்படுவதால் நம்மால் வித்தியாசம் கண்டுபிடிக்கவும் முடியாது. தப்பிக்க ஒரே வழி, குறைந்தபட்சம் அசைவ உணவுகளைப் பொறுத்தவரைக்குமாவது நம் நம்பிக்கைக்கு பாத்திரமான கடைகள் அல்லது நம் மரபு சார்ந்த பழக்க வழக்கங்களுக்கு திரும்புவது மட்டும்தான்.

நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறியதாக வலைத்தளத்தில் வலம் வரும் 25 தத்துவங்கள் 

1. இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை. உங்கள் பிரச்சினைகள் உட்பட.

2. சிாிக்கத் தவறும் ஒவ்வொரு நாளும் பயனற்றது.

3. சிரிப்புதான் வலிக்கு மருந்து! சிரிப்புதான் வலிக்கு நிவாரணம், சிரிப்புதான் உன் வலியை தீர்த்துவைக்கும்.

4. கனவுகள் எல்லாம் நனவாகும். நிறைய காயங்களுக்குப் பிறகு.

5. உன் மனம் வலிக்கும் போது சிரி. பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை…!

6. இதயம் வலித்தாலும் சிரி. அது உடைந்தாலும் சிரி.

7. என் வலி சிலருக்கு சிரிப்பைத் தரலாம். ஆனால், நிச்சயம் என் சிரிப்பு யாருக்கும் வலியைத் தராது.

8. எனக்கு நிறைய பிரச்சினைகள் உண்டு, ஆனால் என் உதட்டுக்கு அதெல்லாம் தெரியாது. அது சிரித்துக்கொண்டுதான் இருக்கும்.

9.  பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம். ஆனால் வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றை பணத்தால் திருப்பி தர முடியாது.

10. கண்ணாடி என் நண்பன் ஏனென்றால், நான் அழும்போது அது சிரிப்பதில்லை.

11. ஆசைப்படுவதை மறந்து விடு. ஆனால், ஆசைப்பட்டதை மறந்து விடாதே.

12. உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.

13. போலிக்கு தான் பரிசும் பாராட்டும். உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே.

14. எப்போதும் மழையில் நனைந்தபடியே நடக்கப் பிடிக்கிறது. என் கண்களில் கண்ணீரை யாரும் பார்க்க முடியாது என்பதால்.

15. நீ எப்போதும் வானவில்லைக் காண முடியாது… உன் பார்வை கீழ் நோக்கியே இருந்தால்!

16. நண்பர்களின் சிரிப்பைப் பார்க்கும் போது கண்ணீரை மறக்கிறேன், நண்பர்களின் கண்ணீரைப் பார்க்கும்போது சிரிப்பை மறக்கிறேன்.

17. வாழ்க்கை அர்த்தம் தேடிக்கொண்டிருப்பதற்கல்ல, அனுபவிப்பதற்கு.

18. நீ மகிழ்ச்சியாய் இல்லாத போது வாழ்க்கை உன்னைப் பார்த்து சிரிக்கிறது. நீ மகிழ்ச்சியாய் இருக்கும்போது உன்னைப் பார்த்து புன்னகை செய்கிறது. ஆனால், நீ அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்தும்போது வாழ்க்கை உன்னை வணங்குகிறது.

19. உங்களை தனியாக விட்டாலே போதும்… வாழ்க்கை அழகானதாகத்தான் இருக்கும்.

20.  கெடுதல் செய்யத்தான் அதிகாரம் தேவைப்படும். மற்றபடி அன்பிருந்தால் எதையும் சாதிக்கலாம்.21. விவாதங்கள், மோதல்கள் அல்லது பிரச்சினைகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. வானமே இடிந்தாலும் அதிலிருந்து புதிய உலகம் பிறக்கும். வாழ்க்கை இப்படித்தான்.

22.  ஒரு முறையாவது உங்களைப் பற்றி முழுமையாகச் சிந்தித்துப் பாருங்கள். வாழ்க்கையின் மிகச்சிறந்த நகைச்சுவையைத் தவறவிட்டுவிடுவீர்கள்.

23. நண்பனுக்கு உதவுவது சுலபமானதுதான். ஆனால், உங்கள் நேரத்தை அவனுக்காக கொடுக்கும் வாய்ப்பு மிகவும் அரிதானது.

24. அதிகமா சிந்திக்கிறோம். மிகக் குறைவாகவே உணர்கிறோம்.

25. புன்னகைத்துப் பாருங்கள்… வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்!

நா.சின்னச்சாமி
நா.சின்னச்சாமி
நா.சின்னச்சாமி, பணி நிறைவுபெற்ற வருவாய்துறை அலுவலர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles