ஆன்மிக கூட்டம் ஒன்றில், ஒரு இளைஞன் குருஜியிடம், “வாழ்க்கையில் மறக்க முடியாதது எது?” என கேட்டான்.
குருஜி அந்த இளைஞனிடம் கேட்டார், ”நீங்கள் மும்பையில் இருக்கும், ஜுஹூ கடற்கரையில் நடந்து கொண்டு இருக்கிறீர்கள். உங்களை நோக்கி ஒரு அழகான இளம் பெண் நடந்து வந்து கொண்டு இருக்கிறாள். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?“ வாலிபன், “எனது கண்கள், அவள் போகின்ற திசையிலேயே, செல்லும்; நான் அவளைப் பார்த்துக்கொண்டே இருப்பேன்.”
குருஜி, “அந்தப் பெண் உங்களைக் கடந்து வேகமாக செல்கின்ற நிலையில், நீங்கள் திரும்பிப் பார்ப்பீர்களா?“ அவன், “ஆமாம், என்னுடைய மனைவி மட்டும் என்னோடு இல்லாமல் இருக்க வேண்டும்”. இதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் சிரித்துவிட்டார்கள்.
குருஜி, “எவ்வளவு நேரம், நீங்கள் அந்த அழகான முகத்தை ஞாபகத்தில் வைத்து இருக்க முடியும்?“ இளைஞன், “5 முதல் 10 நிமிடங்கள் செல்லும்; அல்லது, அடுத்த அழகான இன்னொரு முகம் தெரிகின்ற வரைக்கும்.”
குருஜி, “இப்பொழுது நீங்கள் ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு போய்கொண்டு இருக்கிறீர்கள்; நான் உங்களிடம் ஒரு புத்தகப் பார்சலைக் கொடுத்து அதை, மும்பையில் இருக்கும், ஒரு கனவானிடம் கொடுத்திட, கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் மும்பையில் அவர் வீட்டுக்குச் சென்று, புத்தகப் பார்சலைக் கொடுக்கப் போகிறீர்கள். அந்த வீட்டைப் பார்த்ததும், அது பெரிய பணக்காரக் குடும்பம் என்பதை உணர்ந்து கொள்கிறீர்கள். அங்கே கார்கள் நிறுத்தப்பட்டு நிறைய காவல்காரர்கள் நின்றுகொண்டு இருக்கிறார்கள்.
புத்தகப் பார்சல் பற்றிய தகவலை நீங்கள் உள்ளே அனுப்பியபோது, அந்த கனவான் வெளியே வந்து, உங்களிடம் இருந்து பார்சலைப் பெற்றுக்கொள்கிறார். அவர் உங்களை வீட்டுக்கு உள்ளே அழைத்து சூடான உணவு பரிமாறச் செய்கிறார். நீங்கள் கிளம்பும்போது, அவருடைய கார் டிரைவரிடம், நீங்கள் சேர வேண்டிய இடத்தில் விட்டுவிடக் கூறுகிறார். நீங்கள் உங்கள் இடத்தை அடைந்ததும், அந்த கனவான் உங்களை ஃபோனில் அழைத்து, ‘சகோதரரே, நீங்கள் வசதியாக உங்களது இடத்தை சென்றடைந்துவிட்டீர்களா?’
இப்பொழுது, எனக்குக் கூறுங்கள், “அந்த மனிதரை, எவ்வளவு நாள்கள், நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இருப்பீர்கள்?” இளைஞன், “குருஜி! என்னுடைய வாழ்க்கையின் இறுதி நாள் வரைக்கும், அந்த மனிதரை மறக்கவே முடியாது.” அந்தக் கூட்டத்தில், குருஜி, சொல்ல வந்தது, “இதுதான், வாழ்க்கையின் எதார்த்தம். அழகான முகம் சிறிது நேரமே ஞாபகத்தில் இருக்க முடியும்; ஆனால் அழகான நடத்தை, வாழ்க்கை முழுவதும் ஞாபகத்தில் இருக்க முடியும். உண்மையிலேயே, மரியாதை என்பது உங்களது உள்ளன்பு ஆகும். நீங்கள் அன்புடன் இருக்கும்போது, பகைவர் உங்கள் முன்னால் வந்தாலும், நீங்கள் அவரைப் பார்க்கும் பார்வையில், அவரே இனியும் பகைவராக இருக்க முடியாது என உணர்ந்திடுவார்.
எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
ஒருமுறை ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒருவர் சென்று ஆயிரம் பொற்காசுகளை அன்பளிப்பாக கொடுப்பதாக கூறினார். பரமஹம்சர் மறுத்தும் கூட அவர் விடவில்லை. வற்புறுத்தலை தாங்க முடியாத பரமஹம்சர்” சரி நான் வாங்கிக் கொள்கிறேன். ஆனால் அதை நான் நினைத்தபடி செலவழிப்பேன் சரியா?” என்றதற்கு அந்தப் பணக்காரர் ஒப்புக் கொண்டார்.
“அந்த ஆயிரம் பொற்காசுகளையும் கங்கை நதிக்கரையில் எறிந்து விட்டு வா “என்றார் பரமஹம்சர். அதிர்ந்து போன அந்த செல்வந்தர் ஒவ்வொரு பொற்காசாக எடுத்து மனம் இல்லாமல் நதியில் எறிந்தபடி நின்றார். அங்கு வந்த பரமஹம் ஷர் “என்ன முட்டாள்தனம்? ஒரேடியாக வீசி எறிந்து விட்டு விரைவாக திரும்பாமல் ஏன் ஒவ்வொன்றாக வீசுகிறாய் என்று கேட்க நான் சேமித்த நாணயங்களை ஒரே கணத்தில் எறிந்து விட மனம் வரவில்லை அதனால் தான் ஒவ்வொன்றாக வீசுகிறேன் என்றார்.
பரமஹம்சர் சொன்னார், ” இழப்பதற்கு முடிவெடுத்து விட்டால் ஒரே கணத்தில் இழந்து விட வேண்டும் “. நம்ம மனசு இந்த பணக்காரனை போல ஒவ்வொன்றாக இழப்பதற்கு கூட மனம் வருவதில்லை. அதனால் தான் நிம்மதி என்பது நம்மிடம் நிரந்தரமாக இருப்பதில்லை. எனவே, தேவையில்லாதவற்றை இழப்பதற்கு மனம் வந்தால் நிம்மதி நிரந்தரமாக நம்மோடு இருக்கும் .
பூங்கா இதழ் (The News Park) கருத்து: உங்களுடைய முகம் மற்றும் உடல் அழகை விடவும் உங்கள் நடத்தையின் அழகில் அதிக கவனம் செலுத்திட வேண்டும். வாழ்க்கையானது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவும், அடுத்தவர்களுக்கு மறக்க முடியாத உத்வேகத்தைத் தருவதாகவும் மாறிவிடும்.