Advertisement

அதிக வருமானம் தரக்கூடிய கண்வலி கிழங்கு விவசாயத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன?

மனதை கொள்ளை கொள்ளும் அழகை   கொண்ட செங்காந்தள் மலர்தான் தமிழகத்தின் மாநில மலராகும். இந்த மலரே ஜிம்பாவே நாட்டின் தேசிய மலராகும். மிக அதிகமாக கார்த்திகை மாதத்தில் இந்த பூ மலர்வதால் இதனை கார்த்திகை பூ என்றும் அழைக்கின்றனர். சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை பத்துப்பாட்டு போன்றவற்றிலும் செங்காந்தள் மலர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.  

குளோரிசா சூப்பர்பா (Gloriosa Superba) என்பது இதன்  தாவரவியல் பெயராகும். காந்தள் பேரினத்தைச் சேர்ந்த இந்த தாவரம் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டதாகும்.  இந்த தாவரம் இயற்கையாகவே தென் கிழக்கு ஆசியாவில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் வேலிகளிலும் பாதை ஓரங்களிலும் கொடியாக படர்ந்து காட்சியளிக்கிறது.

`கோல்ச்சிசின்’ (Colchicine) என்ற அல்கலாய்டுகள் செங்காந்தள் மலர்ச் செடியின் அனைத்துப் பாகங்களிலும் அதிகமாக  உள்ளதால் இந்த தாவரம் நச்சுத்தன்மை உடையதாகும்.   இதன் இலை, தண்டு போன்றவை தோளில் பட்டால்   அரிப்பு ஏற்படக்கூடும். குறிப்பாக இந்த தாவரத்தின்   வேரை உட்கொண்டால் மரணம் சம்பவிக்க கூடிய அளவிற்கு   நச்சுத்தன்மை   உள்ளது.  

செங்காந்தள் செடியின் வேர்ப்பகுதியே கலைப்பைக் கிழங்கு, வெண்தோன்றிக் கிழங்கு, கார்த்திகைக் கிழங்கு என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது  இந்த பூவை உற்றுப் பார்த்தால் கண் வலி வரும் என்று சொல்லப்படுவதால் இந்த   தாவரத்தில் உருவாகும் கிழங்கை தமிழக  விவசாயிகள் கண்வலி கிழங்கு என அழைக்கின்றனர்.  இந்தியாவில் கண்வலி கிழங்குகானது யுனானி, ,ஆயுர்வேத மருத்துவங்களில் பயன்படுத்தப்படுகிறது.  

கோல்ச்சிசின், சூப்பர்பைன் மருத்துவக் கூறுகள் இந்த கிழங்கில் உள்ளதால் ஆங்கில மருந்துகள் தயாரிக்க அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்துகள் கீல்வாதம், ஆஸ்துமா, மூலம், அஜீரணம்,   பாம்பு கடி மற்றும் தொற்று உள்ளிட்ட பல   பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது.  தோல் பிரச்சினைகள், தொழுநோய் மற்றும் உடலில் உள்ள ஒட்டுண்ணிகளை அகற்ற கண்வலிக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் பயன்படுகின்றன.  புற்று நோய் சிகிச்சைக்கான மருந்துகளை தயாரிப்பதற்கு இந்த கிழங்குகள் பயன்படுவதாக கூறப்படுகிறது.  இதனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து கண்வலி கிழங்குகளை வாங்குகின்றனர்.

வடிகால் வசதியுடைய செம்மண், பொறை மண் நிலத்தில் (மண்ணின் பி. எச் மதிப்பு 6.0 முதல் 7.0 வரை) மழைப்பொழிவு அதிகம் இல்லாத தட்பவெட்ப நிலையில்   கண்வலி கிழங்கு அதிகம் விளைகிறது. தமிழகத்தில் ஒட்டன்சத்திரம் வட்டத்திலும் மூலனூர் வட்டத்திலும் விவசாயிகள் கண்வலி கிழங்கு பயிரிடுகின்றனர் தமிழகத்தில் வேறு பகுதிகளில் கண்வலி கிழங்கு விவசாயம் பெருமளவில் இருப்பதாக தெரியவில்லை. செங்காந்தள் தாவரமானது   அருகில் உள்ள மரத்தை பற்றி கொண்டு அதனைச் சுற்றி வளரும்   கொடி ஆகும்.   கண்வலி கிழங்கு விவசாயம் செய்யும் போது ஐந்து அல்லது ஆறடி உயரத்தில் விவசாய நிலத்தில் பந்தல் அமைப்பது அவசியமாக உள்ளது.  

ஒரு ஏக்கர் நிலத்தில் கண்வலி கிழங்கு விவசாயம் செய்ய உரம், மருந்து போன்றவை வாங்கவும் தொழிலாளர்களின் கூலிக்காகவும் ரூபாய் ஒரு லட்சம் தேவைப்படுகிறது.  முதன் முதலில் இந்த விவசாயத்தை தொடங்கும் போது ஒரு ஏக்கர் நிலத்திற்கு பந்தல் அமைக்கவும் மூலப்பொருளான   கிழங்கு வாங்கவும் ரூபாய் 4 லட்சம் தோராயமாக செலவு   ஏற்படும். 

பொதுவாக, ஆடி மாதத்தில் இந்த கிழங்கு பயிரிடப்பட்டு ஆறு மாதத்தில் அறுவடைக்கு வருகிறது.  பூக்கள் பூக்கும் போது செயற்கை முறையிலான மகரந்த சேர்க்கையை   செய்யும் பணி மிக முக்கியமானதாகும்.  இதற்கு வேலை ஆட்கள் கிடைப்பது சிரமமானதாக இருக்கிறது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  ஒரு ஏக்கர் நிலத்தில் 500 கிலோ    கண்வலி கிழங்கை அறுவடை செய்யலாம். நச்சுத்தன்மை படைத்த தாவரத்தில் கிடைக்கும் கிழங்கை எடுத்து விற்பனை செய்ய விவசாயிகள் தயாராக இருக்கும்போது உரிய விலை கிடைக்காமல் போவதும் பிரச்சனையாக உள்ளது.  கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கிலோ ரூ  3,000/- க்கு விற்கப்பட்ட இந்த கிழங்கு கடந்த மூன்று ஆண்டுகளாக மிகவும் விலை குறைந்து கிலோ ரூ  1,200/- க்கு மட்டுமே விற்பனையானது.  ஓரிரு வியாபாரிகளே இந்த கிழங்கை விவசாயிகளை அணுகி வாங்கும் நிலையில்   கடந்த சில ஆண்டுகளில் ரூ  1,200/- க்கு  கூட உடனடியாக பணத்தை கொடுத்து எடுத்துச் செல்லாத நிலைமை ஏற்பட்டது.  தற்போதைய நிலவரப்படி இந்த கிழங்கு கிலோ ரூ 2,800/- க்கு  வியாபாரிகளால் வாங்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  

கண்வலி கிழங்கு விவசாயத்தை செய்தால் நல்ல வருமானம் உள்ளது என கருதும் நிலையில் தங்களிடம்   கிழங்கை வாங்க வரும் வியாபாரிகளின் மொத்த வியாபாரி யார்?   இந்த கிழங்கு எங்கு செல்கிறது?  உள்ளிட்ட விவரங்கள் ஒட்டன்சத்திரம் மற்றும்   மூலனூர் பகுதி விவசாயிகளுக்கு தெரியாத ஒன்றாகவே இன்றளவும் இருக்கிறது.  கிழங்கின் விலையை நிர்ணயிப்பது ஓரிரு வியாபாரிகளின் ஏகபோக உரிமையாக (monopoly) இருப்பதால் கண்வலி கிழங்கு விவசாயத்தை   பலர் விட்டு விட்டனர்.  விளைவிக்கப்படும் கண்வலி கிழங்கின் விற்பனையை உறுதி செய்யும் வகையில் கண்வலி கிழங்கு விவசாய உற்பத்தி – விற்பனை கூட்டுறவு சங்கத்தை அரசு நிறுவ வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles