1918 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதற்கு எதிராக உலகின் முக்கிய அறிவியல் அறிஞர்கள் போர்க்கொடி தூக்கினார்கள் சிலர் நோபல் பரிசு வழங்கும் விழாவையும் புறக்கணித்தனர். இதற்கான காரணம் ஜெர்மனிய வேதியியலாளர் பிரிட்ஸ் ஹேபருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதுதான்.
1918 ஆம் ஆண்டு உலகின் மக்கள் தொகை சுமாராக 8 பில்லியன். இந்த மக்கள் தொகையை இன்றளவும் உயிர்ப்புடன் வைத்திருக்க விவசாய உணவுகளை விளைபொருட்களை ஹேபரின் கண்டுபிடிப்பால்தான் நாம் இன்றளவும் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம். பசியால் அழிந்திருக்க வேண்டிய மனித இனத்தை பாதுகாத்து அடுத்த கட்ட நிகழ்வுகளுக்கு எடுத்துச் சென்றது இவரின் கண்டுபிடிப்பு.

1898 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் வேதியியலாளர் வில்லியம் கிரூக்ஸ் என்பவரால் தான் நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் உலகத்தில் மக்கள் தொகை என்பது அளவுக்கு அதிகமாக வளர்ந்து கொண்டு உள்ளது. அதற்கு ஏற்ற அளவில் உணவு நம்மிடம் இல்லை. இந்த நிலை இப்படியே நீடித்தால், இன்னும் 30 வருடங்களில், மனித இனம் நைட்ரஜன் தட்டுப்பாடு காரணமாக உணவு பற்றாக்குறையால் அழிந்து விடும் எனும் கூற்றை முன் வைத்தார்.
நம்மைச் சுற்றி உள்ள காற்றில் 75% நைட்ரஜன் உள்ளது. தாவரங்களின் வளர்ச்சிக்கு நைட்ரஜன் இன்றியமையாதது. காற்றில் இருக்கும் நைட்ரஜனை தாவரங்களால் உடைக்க முடியாது. அதற்கு தேவையான நைட்ரஜனை நிலத்தில் இருந்துதான் அது எடுத்துக் கொள்ளும். காற்றில் இருக்கும் நைட்ரஜன் அளவு நிலத்தில் இருக்காது. ஒரு நாட்டிற்கே தேவையான அளவு உணவை உற்பத்தி செய்ய தாவரங்களுக்கு நைட்ரஜனை நிலத்தால் அவ்வளவு சீக்கிரம் உற்பத்தி செய்ய முடியாது.

இந்த நைட்ரஜன் தட்டுப்பாட்டை சரி செய்ய ஆராய்ச்சியாளர்கள் பல வழிகளில் முயற்சி செய்து கொண்டிருந்த போது தான் ஹேபர்ஸ் 1909 ஆம் ஆண்டு ஹேபர்ஸ் செயல் முறையை (Haber’s process) கண்டுபிடித்தார். அது என்ன இந்த செயல்முறை என்று பார்த்தால், வெப்பநிலை மற்றும் அழுத்தத்தை அதிகப்படுத்தி அந்த சமயத்தில் நைட்ரஜன் (Nitrogen) மற்றும் ஹைட்ரஜனையும் (Hydrogen) செயல்முறைக்கு உட்படுத்தினால் அம்மோனியா (Ammonia) உருவாகும். அதோடு ஆஸ்மியத்தையும் (Osmium) சேர்த்தால் அம்மோனியாவின் உருவாக்கம் அதிவிரைவில் நடக்கும் இந்த செயல்முறைக்கு இந்த அமோனியாதான் நாம் தற்போது விவசாயத்திற்கு பயன்படுத்தும் முதன்மை உரமாகும். இவரது கண்டுபிடிப்பு இல்லாமல் உரம் என்ற பொருள் உருவாகி இருக்காது.
தாவரங்களுக்கு நைட்ரஜனை வழங்கக்கூடிய உரத்தை கண்டுபிடிக்கும் செயல்முறை உருவாக்கப்பட்டதே விவசாய விளைவு பொருட்களின் உற்பத்தி உயர்வுக்கு காரணமாக அமைந்தது. “காற்றில் இருந்து உணவை உற்பத்தி செய்கிறார் ஹேபர்” என்று நாளிதழ்கள் புகழாரம் சூட்டியது. இந்த நிகழ்வுக்கு பின்னர் ஹேபர் தனக்கென்று ஒரு இரசாயன தொழிற்சாலையை உருவாக்கினார் அதிலிருந்து உணவுக்கான உரங்களை உற்பத்தி செய்யத் தொடங்கினார்.

முதலாம் உலகப் போர் தொடங்கிய தருணத்தில் உலகமே இரண்டு அணிகளாக பிரிந்து யுத்தத்தில் ஈடுபட்டது. யுத்தத்தின் கோர முகத்தை பார்த்த பல முக்கிய விஞ்ஞானிகள் தங்களது கண்டுபிடிப்புகள் அமைதிக்காகவே பயன்படுத்த வேண்டும் என்று யுத்தத்தில் பங்கெடுக்க மறுத்துவிட்டனர். ஜெர்மனியை சார்ந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும் ஜெர்மனிக்காக எந்த உதவியும் செய்ய முடியாது என்று கூறி பின் வாங்கினார். ஆனால் ஹேபரோ தன் நாட்டிற்காக போர்க்களம் செல்ல தயாரானார். தனது அறிவினை கொண்டு ஜெர்மனிக்கு உதவி செய்ய தன்னுடைய இரசாயன தொழிற்சாலையை ஆயுதங்கள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையாக மாற்றினார் ஹேபர், உலக நாடுகளுக்கு உணவை உற்பத்தி செய்ய உதவிய தொழிற்சாலை ஜெர்மனிக்கு ஆயுதங்கள் தயார் செய்ய தொடங்கியது.
போரை முடிவுக்கு கொண்டு வர எண்ணிய ஹேபர், குளோரின் புகை குண்டுகளை கண்டுபிடித்தார். காற்றைக் காட்டிலும் இரண்டு மடங்கு அடர்த்தி அதிகம் கொண்ட குளோரின் புகையை சுவாசித்தால் நம்முடைய நுரையீரல்களை நேரடியாக தாக்கி செயல் இழக்க செய்யும் மிகவும் வலி மிகுந்த மரணத்தை கொடுக்கும். இப்படிப்பட்ட புகை குண்டை ஜெர்மன் ராணுவம் போரில் பயன்படுத்த தொடங்கியது, கிட்டத்தட்ட ஒன்றிலிருந்து இரண்டு லட்சம் பேர் இந்த புகை குண்டால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த அழிவிற்கு வித்திட்ட கண்டுபிடிப்பை கேள்வி எழுப்பியவர்களுக்கு ஹைபர் கொடுத்த பதில் “போரை எவ்வளவு விரைவாக முடிவுக்கு கொண்டு வருகிறோமோ அவ்வளவு உயிர்களை நம்மால் காப்பாற்ற முடியும்” என்று கூறினார்.
முதலாம் உலகப் போர் முடிவுற்று ஜெர்மனி தோல்வியை தழுவிய நிலையில் 1918 ஆம் ஆண்டு உணவு உற்பத்தி வளர்ச்சிக்கான கண்டுபிடிப்புக்காக ஹேபருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இவ்வளவு போர் குற்றங்களை செய்த ஒருவருக்கு இந்த உயரிய விருதை வழங்கக் கூடாது என்று சக விஞ்ஞானிகள் நோபல் பரிசை புறக்கணித்தனர். நோபல் கமிட்டியில் உள்ளவர்களோ ஹேபரிடம் கைகுலுக்க கூட மறுத்து விட்டனர். அதற்கு நோபல் பரிசு கொடுக்காமலே இருந்திருக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இவரின் கண்டுபிடிப்புகள் மிகவும் முக்கியமான ஒன்றாகும் இன்றளவும் அமோனியாவை உருவாக்க இவரின் ஹேபர்ஸ் செயல்முறையை (Haber’s process) நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் சுமாராக 131 மெட்ரிக் டன் அம்மோனியா உற்பத்தி செய்யப்படுகிறது. அதைக் கொண்டு தான் நாம் உணவு உற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம்
கட்டுரையாளர்: இரா.இராஜஹரிஹரன், திருச்சி சட்டக் கல்லூரி மாணவர் மற்றும் பூங்கா இதழ், நுகர்வோர் பூங்காவின் பயிற்சி கட்டுரையாளர்
பூங்கா இதழ் (The News Park) கருத்து: அறிவியல் வளர்ச்சி நன்மைகளையும் தீமைகளையும் வழங்கினாலும் அறிவியல் கண்டுபிடிப்புகள் நன்மைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் உலகம் உறுதியாக இருக்க வேண்டும்!

பூங்கா இதழ் நுகர்வோர் பூங்கா வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்! இணைய இங்கே தொடவும். Click Here!
அருமையான தகவல். கட்டுரை மிகவும் சிறப்பாக உள்ளது.