மனிதன் பூமியில்தான் பிறக்கிறான்; பூமியில்தான் வாழ்கிறான்; பூமியில்தான் மரிக்கிறான்; மக்கி மண்ணோடு மண்ணாக இரண்டறக் கலந்து விடுகிறான். அவனுக்கு இந்த மண்ணோடு கொண்ட உறவு எப்போதும் மாறாது. அதிலிருந்து அவனைப் பிரிக்க இயலாது. தாய்நாட்டை தாய்மண் என்கிறோம். தாய்நாட்டுப் பற்று என்பதும் அப்படிப்பட்டதுதான். ஒவ்வொரு மனிதனும் அவரவர் மண்ணை விரும்புவது இயற்கை.
நாம் இந்த மண்ணில் பிறந்ததனால் இந்த நாட்டை நேசிக்கிறோம். நாமே வேறொரு நாட்டில் பிறந்திருந்தால், அந்த நாட்டைத்தானே நேசிப்போம். அதனால்தான் துறவிகளும் ஞானியரும் உலகளாவிய பார்வை கொண்டிருந்தனர். இதனையே “யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று சங்க இலக்கியம் பாடியது. ஒவ்வொரு மனிதனும் இந்த மண்ணை பூமாதேவி என்றே வணங்குகிறான்
தமிழக பாசன வரலாறு கூற்றின்படி தமிழகத்தில் 39,202 ஏரிகள் இருந்துள்ளன. தற்போது, உண்மையில் ஏரிகளாக இப்போது இருப்பவை எத்தனையென்று உறுதியாகக் கூற முடியாது. இருக்கும் ஏரிகளின் கொள்ளளவும் குறைந்து கொண்டே வருகிறது. காணாமல் போன ஏரிகளால் பாசனம் பெற்று நடைபெற்ற விவசாயம் என்னவாயிற்று என்பது கேள்விக்குறி. விவசாயி ஆண்டாண்டு காலமாக, பல தலைமுறைகளாக விவசாயத்தை விட்டுவிடாமலிருப்பதற்கான காரணம் என்ன? அது லாபகரமான தொழில் என்பதற்காகவா? என்ற கேள்விக்கு பதில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.
“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை’ “சுற்றிவரும் உலகம் உழவுத் தொழிலின் பின் நிற்கிறது. அதனால் எவ்வளவுதான் துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்ததாகும்’ என்று திருக்குறள் கூறுகிறது. தற்போது, உழவுத் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்பதோடு அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமைகூட அவர்களிடம் இல்லை. விவசாயிகள் உற்பத்தி செய்வது அவர்களது பயன்பாட்டிற்காக மட்டுமல்ல, அனைத்து மக்களுக்குமானது.
2006-ஆம் ஆண்டுல், மேற்கு வங்க மாநிலத்தில் ஹுக்ளி மாவட்டம் சிங்கூர் பகுதியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஆலை அமைக்க இடம் ஒதுக்கப்பட்டது. டாடாவின் நானோ கார் ஆலை அமைக்க அப்போதைய மேற்குவங்க அரசு, 997 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. விவசாய நிலத்தை தொழிற்சாலை கட்டுவதற்கு ஒதுக்கியதால் விவசாயிகள் போராட்ட களத்தில் இறங்கினர். அந்த ஆலைப் பணிகள் 70 விழுக்காடு முடிந்துவிட்ட நிலையிலும் போராட்டத்தின் தீவிரம் குறையவில்லை. இதனால் 2008, அக்டோபர், 3 அன்று சிங்கூர் ஆலைத் திட்டத்தைக் கைவிடுவதாக ரத்தன் டாடா அறிவித்தார். அந்த ஆலை குஜராத் மாநிலம் சனந்த் நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மத்திய அரசு 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல், மறுகுடியமர்த்தல் மறுவாழ்வு சட்டத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது.
விவசாயிகளுக்குச் சொத்து, சுகம், சொந்தம் எல்லாம் அதுதான். அரசாங்கமாக இருந்தாலும் அயலவர்களாக இருந்தாலும் அதிகாரத்தோடு பறிக்கவோ, ஆசைகாட்டி விற்பனைக்கோ விட்டுக் கொடுக்க அவர்கள் முன்வருவதில்லை. “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில் உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்’ என்று பாரதி பாடினார். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உழவும் வேண்டும் தொழிலும் வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், தொழில் வளர்ச்சி என்ற பெயரில் விவசாயத்தை அழிக்க முயற்சி செய்யக் கூடாது என்பதற்கு சிங்கூர் நிகழ்வுகள் சாட்சியாகும்.
“இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’ என்றார் காந்தியண்ணல். அந்த கிராமங்கள் விவசாயத்தால்தான் இதுநாள்வரை வாழ்ந்து வருகிறது. அந்த விவசாயம் அழிவதால் கிராமங்களும் அங்குள்ள பண்பாடுகளும் அழிந்து கொண்டு வருகின்றன. “சோழநாடு சோறுடைத்து’ என்னும் வழிவழி பெருமைக்குச் சொந்தக்காரர்கள் காவிரி நீருக்காகக் கையேந்தி நிற்கின்றனர்.
விவசாயிகளின் கையறு நிலையைப் பயன்படுத்திக் கொண்டு விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி கூறுபோட்டு விற்கும் மனை வணிகர்கள் பெருகிவிட்டனர். நகரப்புறங்கள் மட்டுமன்றி கிராமப்புறங்களிலும் இது தொடர்கிறது. இன்னும் கொஞ்ச நாளில் விவசாயம் செய்ய நிலமே இல்லாத நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. உணவு இறக்குமதி செய்யும் நாடு பொருளாதார நெருக்கடியில்தான் சிக்கித் தவிக்கும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்து. உணவில் தன்னிறைவு காணாத நாடு பெரும் முன்னேற்றத்தை பெற்று விட இயலாது.
நிலம் இருந்தால்தான் விவசாயிகள் இருக்க முடியும். விவசாயிகள் இருந்தால்தான் விவசாயம் இருக்கும். விவசாயம் இருந்தால்தான் உணவு கிடைக்கும் என்பதை மறந்து மறந்துவிட முடியுமா?. எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்பவர்கள்கூட பசியைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதை கட்டுப்படுத்த வேண்டிய நேரம் இதுவாகும். விவசாயத்தை விட்டு விலகிச் செல்லும் சூழலை தடுக்க வேண்டிய நேரமும் இதுவாகும். விவசாய வளர்ச்சிக்கும் விவசாயிகளின் மேம்பாட்டுக்கும் அதி முக்கியத்துவம் வழங்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமையாகும். நம் மண்ணை காப்போம்! நம் விவசாயம் காப்போம்!
படைப்பு: ஆர் வாசுகி, சட்டக் கல்லூரி மாணவி
குறிப்பு: இந்த கட்டுரை நுகர்வோர் பூங்கா பூங்காவின் வாட்ஸ் அப்புக்கு கிடைக்கப்பெற்றது. கட்டுரையாளர்கள் தங்களது படைப்புகளை [email protected] என்ற மின்னஞ்சலில் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணைத் தொடும் காலி மனை இடம், நிலத்தின் விலை – காரணம் என்ன? எப்படி கட்டுப்படுத்துவது? https://theconsumerpark.com/land-value-hike-control