இந்திய திருநாட்டில் பதினெட்டாம் மக்களவைக்கான தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய தலைமை தேர்தல் ஆணையராக டி. என். சேஷன் பதவி வகித்த போது தேசிய வாக்காளர் விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தில் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய பழனி அருகே உள்ள கணக்கன்பட்டியைச் சேர்ந்த டாக்டர் வீ. ராமராஜ் அவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல்கள், வாக்காளர் உரிமைகள், பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர், மாநில அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் முறை போன்றவற்றை ஆய்வு செய்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்ட இவரது கருத்துக்கள் முன்னணி நாளிதழ்களில் வெளியாகி உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தமிழர் சொன்ன கருத்துக்கள் சமூகத்தில் எப்படி பிரதிபலித்து உள்ளது என்பதை தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
பாராளுமன்றத்தின் மக்களவை தேர்தலையும் சட்டமன்றத்துக்கான தேர்தலையும் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஒரே நாடு- ஒரே தேர்தல் என்ற கொள்கையை அமல்படுத்த பரிந்துரைத்த அறிக்கையை மத்திய அரசிடம் சமீபத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையை அமல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பாக அனைத்து அரசியல் கட்சிகளையும் மாநில முதல்வர்களையும் அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும். மேலும், இது குறித்து தகுந்த கருத்துரையை (seeking opinion) வழங்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் கேட்க வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக ஒரே நாடு – ஒரே தேர்தல் என்ற முழக்கம் அதிகரித்துள்ள நிலையில் இந்த கொள்கையை அமல்படுத்துவது சாத்தியமா? என்பது குறித்து 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை சேர்ந்த டாக்டர் வீ. ராமராஜ் ஆய்வு செய்துள்ளதோடு முன்னணி தமிழ் நாளிதழ் ஒன்றில் “ஒரே நாடு – ஒரே தேர்தல்” என்ற கட்டுரையை எழுதியுள்ளார் (12-08-2003 – தினமணி).
பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க மத்தியில் லோக்பால், மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த 2011 ஆம் ஆண்டில் அண்ணா ஹசாரே உள்ளிட்டோர் போராட்டங்களை நடத்தினர். கடந்த 2013 ஆம் ஆண்டில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்பட்டது. பலரும் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா என்பது வட நாட்டைச் சேர்ந்த அண்ணா ஹசாரவின் யோசனை (idea) என்று கருதி வருகின்றனர். ஆனால், கடந்த 2007 ஆம் ஆண்டிலேயே தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் வீ. ராமராஜ் எழுதிய “ஊழலை ஒழிக்க உயர்நிலை அமைப்புகள்” என்ற கட்டுரையில் (03-05-2007 – தினமணி) லோக்பால், லோக் ஆயுக்தா அமைப்புகளை ஏற்படுத்த வலியுறுத்தியுள்ளார்.
மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்கள் தேர்தல்கள் நடைபெற்று முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் வெற்றி பெற்றது செல்லாது என்றும் வெற்றி பெற்றவர் தகுதியுடையவர் அல்ல என்றும் நாடு முழுவதும் பல வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. இந்த வழக்குகள் வெற்றி பெற்றவர்களின் பதவிக்காலம் முடிவதற்குள்ளாக தீர்த்து வைக்கப்படுவதில்லை. தேர்தல் வழக்குகளை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வழி செய்யும் வகையில் “தேவை தேர்தல் தீர்ப்பாயங்கள்” என்ற கட்டுரையை பிரபலமான இதழில் (இந்தியா டுடே, 1 மார்ச் 2000) கடந்த மார்ச் 2000 ஆண்டில் டாக்டர் வீ. ராமராஜ் எழுதியிருந்தார். கடந்த 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்திய அரசின் இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையம் அரசிடம் சமர்ப்பித்த அறிக்கையில் விரைவில் தேர்தல் வழக்குகளை முடிக்க தேர்தல் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தது. ஆனால், இன்று வரை தேர்தல் தீர்ப்பாயங்களை அமைப்பதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்படவில்லை.
மத்திய அரசு கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 25 ஆம் தேதியை வாக்காளர் தினமாக அறிவித்தது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் தினத்தை நாம் கொண்டாடி வருகிறோம். இவ்வாறு வாக்காளர் தினம் அறிவிக்கப்படுவதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, 2000 ஆம் ஆண்டிலேயே மத்திய அரசு வாக்காளர் தினத்தை அறிவித்து அதனை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட வேண்டும் என்று பிரபல தமிழ் நாளிதழில் (03-02-2000 – தினமலர்) டாக்டர் வீ.ராமராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக டாக்டர் வீ. ராமராஜ் பணியாற்றி வந்த போது குழந்தைகளுக்கு தனி துறை ஏற்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் சட்டமன்றத்தில் கடந்த (2024) வரவு செலவு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போது தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறையின் பெயரை குழந்தைகள் பாதுகாப்புத் துறை என மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசியல் இன்றி சமூகத்தில் அணுவும் அசையாது என்ற நிலையில் தேர்தல் நேரங்களில் மட்டுமே வாக்காளர்கள் முக்கியமானவர்களாக பார்க்கப்படும் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. வாக்காளர்கள் குறித்த தனிக்கல்வி எதுவும் இல்லை என்ற நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்பே வாக்காளரியல் (voterology) என்ற வார்த்தையை முதன்முதலாக டாக்டர் வீ. ராமராஜ் பயன்படுத்தியதோடு இந்திய வாக்காளர்கள் கல்வி மையத்தையும் தொடங்கினார். இவரது “மதிப்பிற்குரிய வாக்காளருக்கு” என்ற நூலில் வாக்காளரின் உரிமைகள் குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே இவர் ஆய்வு செய்து கூறிய கருத்துக்கள் தற்போது சமூகத்தில் எதிரொலிக்க தொடங்கியுள்ளன. மனித உரிமை நீதிமன்றங்களை பற்றிய இவரது கட்டுரை தேசிய நீதித்துறை அகடமியில் பாடமாக அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது. சட்டம் மற்றும் ஆட்சியியல் தொடர்பாக 12 பட்டங்களை பெற்றுள்ளதோடு சுமார் பத்து நாடுகளில் சட்ட ஆய்வுகளுக்காக பயணம் செய்துள்ள இவரது கருத்துக்களை கவனிக்காமல் கடந்து செல்ல இயலாது.இவரது 50-க்கும் மேற்பட்ட கட்டுரைகளிலும் வாக்காளர் உரிமைகள் எதிரொலித்துள்ளன. 20-க்கும் மேற்பட்ட சட்ட முதுநிலை சட்ட மாணவர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாகவும் இவர் செயல்பட்டுள்ளார்.
தேசிய அளவில் உரிய இடத்தை இவருக்கு வழங்கியிருந்தால் இவரது சமூக கருத்துக்கள் மக்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியாக இருந்திருக்கும். தமிழர் என்பதாலோ என்னவோ, அரசியல் சார்பற்ற நடுநிலையாளராக இருப்பதாலோ என்னவோ, தேசிய அளவிலான லோக்பால் போன்ற அமைப்புகளில் தகுதி இருந்தும் இவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. ஓரிரு மாதங்களுக்கு முன்பு லோக்பால் அமைப்பிற்கான தேடுதல் குழுவிற்கு தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் குழுமத்தின் முக்கியமான பதவியை வகிப்பவர் இவருக்காக விண்ணப்பம் (nomination) செய்திருந்த நிலையில் இவரது பெயர் பரிசீலனைக்கு இடம்பெற்றதா? என்பது தெரியவில்லை. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தமிழக லோக் ஆயுக்தா தேர்வில் இறுதிவரை இவர் பெயர் இருந்தும் கடைசி நேரத்தில் திரை மறைவு பரிந்துரைகளின் காரணமாக வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தற்போதும் தமிழக லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் இரண்டு இடங்களுக்கு தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.