Advertisement

சொல்கிறார்கள் சட்டக் கல்லூரி மாணவர்கள் – சிறுவர்களையும் இளைஞர்களையும் குறிவைக்கும் போதை பொருள்

பல்கீஸ் பீவி. மு, சட்டக் கல்லூரி மாணவி

மாணவர்களுடைய போதை பொருள் பழக்கம் என்பது தமிழகத்தில் மட்டும் நிலவக்கூடிய ஒன்று அல்ல. இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய பிரச்சினையாகும். செய்திகளில் நாள்தோரும் போதைப்பொருள் சார்ந்த செய்திகளை நாம் கடந்து செல்கின்றோம். தற்போது பள்ளி பருவத்திலேயே தொடங்கிவிடும் இந்த போதை பழக்கம், அவர்களோடு இணைந்த இளைய சமூகத்தையும் நாசமாக்கிவிடுகிறது. சுய ஒழுக்கம் இல்லாமல் ஆர்வக் கோளாறாலும், சேரக்கூடாத நண்பர்களின் செயற்கையாளும் சிலர் தூண்டப்பட்டு இந்த கொடூர பழக்கத்திலிருந்து மீள முடியாமல் திணறுகின்றனர். அவர்களை மீட்டெடுக்கும் வழி தெரியாமல் நிறைய பெற்றோர்கள் பரிதவிக்கின்றனர்.ஆண் பெண், சிறார், பெரியோர் என பாகுபாடு இல்லாமல் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிப்போனவர்கள் தங்கள் உடல்நலனை கெடுத்துக்கொள்வதோடு , மனநலனையும் தொலைத்து, நிரந்தர நோயாளிகளாகி விடுவதைக் காண்கின்றோம். மேலும், அவர்கள் தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதோடு, குடும்பத்தில் அனைவரின் மகிழ்ச்சியையும் சூறையாடுகின்றனர்; இதனால் வருங்கால இந்தியாவின் மனித வளம் விரயமகிவிடுகிறது!

போதைப்பழக்கத்துக்கு பொதுச்சமூகம்தான் இடம் கொடுக்கிறது. அரசின் சட்ட விதிகளின்படி சில கட்டுப்பாடுகள் இருந்தாலும் அவை முறையாக பின்பற்றப்படுவதில்லை. அனைத்து விதிகளும் வெறும் ஏட்டளவில்தான் உள்ளதா! வீட்டில் பெற்றோர்கள், பிள்ளைகளை கண்காணிக்க வேண்டியது அவதியம். பள்ளியிலும் கல்லூரியிலும் மாணவர்கள் போதைக்கு அடிமையாகாமல் நிறுவனங்கள் நல்வழிப்படுத்த வேண்டும். 

டி. கீர்த்தனா, சட்டக்கல்லூரி மாணவி

மூளையை மழுங்கச் செய்து, புத்தியை தடுமாறச் செய்யும் ஒருவித கிறக்கமே போதை. போதைப் பொருட்களினால், தனிமனித வாழ்வு சீரழிவதோடு, நாட்டின் பொருளாதாரமும் சீர்குலைகிறது. போதைப் பொருள் இல்லாத உலகை படைக்க அனைவரும் முன்வர வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு தெரியாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் போதைப்பழக்கம் ஏற்படுகிறது. இதை நாம் முழுமையாக தடுக்க வேண்டும். போதைப் பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு தெரிய வந்தால் உடனடியாக காவல்துறை அல்லது பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். அத்தோடு போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாணவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கே ஸ்ரீ நித்யா, சட்டக்கல்லூரி மாணவி

“இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்”, ஆனால், போதை பழக்கத்தின் காரணமாக இது எப்படி சாத்தியமாகும்? என்பது தான் தெரியவில்லை. இப்பொழுதெல்லாம் போதைப் பொருளானது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்தே விநியோகம் செய்யப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் 12 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களே அதிக போதை பழக்கத்திற்கு உள்ளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் நடைபெறும் குற்றங்களில் சரி பாதி அளவு போதை பொருட்களை உட்கொள்வதின் விளைவாகவே நடக்கிறது.  போதை பொருள் தடுப்புச் சட்டங்கள் மேலும் கடுமையானதாக மாற்றப்பட வேண்டும். ஏற்கனவே, போதை பொருளால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்கான சீர்திருத்த நடைமுறைகள் மற்றும் விழிப்புணர்வு ஆகியவைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்திற்கும் மேலாக போதை பொருள் விநியோகத்தை நாடு முழுவதும் தடை செய்வதால் மட்டுமே போதை பொருள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.

ஆர். லக்ஷிதா, சட்டக் கல்லூரி மாணவி

இன்றைய இளைஞர்களின் பாதையை மாற்றுகிறது போதை. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து உள்ளது. ஏன்? ஆசிரியர்களே மதுபோதையில் வகுப்புக்கு வருகிறார்கள். இன்றைய இளைஞர்கள் போதையை தேடி வாழ்க்கையை இழக்கிறார்கள். பெண்களும் கூட போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளன. இதனைக் கட்டுப்படுத்த திரைப்படங்களில் “புகை பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் புகையிலை உயிரை குடிக்கும்”, “மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு” என்று போடுவதல் மற்றும்  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் மட்டும் போதாது. அவர்களை மீட்டு எடுக்க போதுமான மறுவாழ்வு மையங்களை அமைக்க வேண்டும். “மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு”, “மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதிர்”, என்ற வாசகங்களை நாம் நாள் தோறும் கடந்து செல்கிறோம். இருப்பினும் வாகன விபத்து, குடும்ப பிரச்சினை, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முதன்மை காரணமாக போதை பழக்கமே இருக்கிறது. 

ஷர்வேஷ்ராம். டி,  சட்டக் கல்லூரி மாணவர்

உள்ளுர் வியாபாரிகள் மற்றும் ஒரு‌ சில மாணவ‌ விற்பனையாளர்கள் மூலமாகவும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் கல்லூரிகளில் மட்டும் அல்லாமல் பள்ளிகளிளும் சட்டவிரோதமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்திய அரசானது, கல்வி நிறுவனங்கள் அருகில் போதைப்பொருட்களின்,  விற்பனையைத் தடை செய்தாலும், பல கடைகளில் போதைப்பொருட்கள் விநியோகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சட்டம் மாணவர்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டாலும், சில கடைகள் இதை மீறி விநியோகத்தை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கஞ்சா, ஹான்ஸ், குட்கா, போதைப்பொருள் கலந்த சாக்லேட், போதை மருந்து ஊசி போன்ற பல்வேறு வகைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தாவிட்டால் நாளைய இந்தியாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles