ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியில் ஒழுக்க நெறிமுறைகள், ஒற்றுமை, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல காரணிகள் அங்கம் வகிக்கின்றன. இவை மனித வாழ்வில் மகிழ்ச்சியையும் உலகில் அமைதியையும் நிலைநாட்ட காரணமாக அமைகின்றன. மனித குல வளர்ச்சியும் உலக அமைதியும் ஒரு மனிதனின் இரண்டு கண்களைப் போல இருக்க வேண்டியவை ஆகும்.
போதை பொருட்கள், பாலியல் அத்துமீறல்கள், இணைய அடிமைத்தனம் ஆகிய முப்பெரும் சக்திகள் சமூக வளர்ச்சிக்கான பாதையில் தடை கற்களாக துல்லிய தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. சமுதாயத்தில் வளர்ச்சிக்கான பாதையில் ஏற்படும் தடை கற்கள் சமுதாயம் வழி மாறி சென்று விடுமோ என்ற அச்சத்தை தற்காலம் உருவாக்கியுள்ளது. வளர்ச்சியில் உள்ள தடைகளை தடுப்பதும் தடைகளின் மூலங்களை கண்டறிந்து வேரோடு களைவதும் அரசாங்கத்தின் கடமையாகும்.
மதுவுக்கும் போதை பொருட்களுக்கும் பள்ளி பருவ குழந்தைகள், இளைஞர்கள் நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைவரும் அடிமையாகி விடுவார்களோ? என்ற பயம் ஏற்படக்கூடிய சூழல்கள் அதிகரித்து வருகின்றன. மது மற்றும் போதை பொருட்களின் அடிமைத்தனம் தனிமனித பொருளாதார பின்னடைவு, சமுதாய வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்படுவதோடு குற்றங்களின் எண்ணிக்கையும் தனிமனிதனின் உடல்நல பிரச்சனைகளையும்அதிகரிக்க செய்கிறது. மதுவும் போதை பொருட்களும் ஒழுக்கமற்ற பொருளாதாரத்தை சீரழிக்கின்ற ஆரோக்கியத்துக்கு உலை வைக்கின்ற வேலைகளை செய்து கொண்டிருக்கின்றன.
பெண்கள் மீதான ஆபாச தாக்குதல்கள், பாலியல் வன்முறைகள் போன்ற குற்றங்கள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தொடங்கி அனைத்து தரப்பு பகுதிகளிலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய குற்றங்களை புரிவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் சமுதாயத்தில் ஒழுக்கம் சீரழிவதோடு பெண்களிடையே மிகுந்த அச்சத்தை உருவாக்கும்.
பள்ளிக் குழந்தைகளின் பெரும்பாலானோர் மொபைல் போன் மூலம் இணையதளங்களை பயன்படுத்தும் போக்கு மிக அதிகரித்துள்ளது. மாணவர்களிடையே இணையதள அடிமைத்தனமும் அதிகரித்து உளவியல் பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இளைஞர்களும் பொதுமக்களும் தேவையற்ற இணையதள பயன்பாடுகளின் மூலம் நேரத்தை வீணடிப்பது அதிகரித்துள்ளது. இத்தகைய போக்கு மக்களின் மன அழுத்தத்திற்கும் சமூக மேம்பாட்டின் வளர்ச்சிக்கும் ஆபத்தாக முடியும்.
போதை பொருட்கள், பாலியல் அத்துமீறல்கள், இணைய அடிமைத்தனம் ஆகிய சமுதாய சீரழிவு கருவிகளை முற்றிலும் தடுப்பதும் மூலத்தை கண்டுபிடித்து வேரறுப்பதும் தற்போதைய அவசிய தேவையாகும். இதனை செய்ய தவறினால் நாளைய தேசம் சீரழிவுக்கு உள்ளாகும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.