Advertisement

மனநிலைதான் வாழ்க்கைக்கு முதல் படி

“மனமிருந்தால் மார்க்கமுண்டு” என்ற பழமொழியின் ஆழத்தை உணர்ந்தால் வாழ்க்கையின் எதிர்விசையின் வினாக்களை வீழ்த்தி நம் செயலால் பதிலளிக்க முடியும். எவ்வாறு வாழ்க்கை நம்மைப் புரட்டிப் போட்டாலும் அதை நாம் எப்படி கையாள்கிறோம்? என்பதில்தான் சுவாரசியமும் அனுபவமும் அடங்கி இருக்கிறது. வாழ்க்கை தேடலை சார்ந்தது என்பதை அனுபவங்கள் கற்றுத் தருகின்றன. “சராசரியை அடைவதற்காக நாம் பிறக்கவில்லை (not born to settle average), சர்வ வல்லமையும் அடையும் உரிமை நம் எல்லோரிடத்திலும் உண்டு”.

ஆழ்மனம் 

பொதுவாக, மனிதனின் மனமானது தன்னிச்சையாக செயல்படுவது அல்ல. நம்மை சூழ்ந்து இருப்பவர்களின் சிந்தனைகளும் மற்றவர்களின் மதிப்பீடும் அதனைச் சார்ந்த கருத்துருக்களின் அடிப்படையில் செயல்படும் வகையில் தான் பெரும்பான்மையில் அமைந்திருக்கிறது. ஏனெனில், சமூகம் என்ற கூட்டில் ஒற்றி வாழ்வதற்காக நம்மை நாமே உருமாற்றிக் கொள்கிறோம். அந்த பயணத்தில், நம்மோடு பயணிப்பவர்களாகிய பிறர், நம் மேல் திணிக்கும் எதிர்மறையான எண்ணங்களுக்கு செவி சாய்ப்பதும் உண்டு. ஆனால், அதனால் ஏற்படும் விளைவுகளின் பாதிப்பு நம்மைத்தான் சார்கிறது என்பதைப் பல சூழல்களில் நாம் யோசிப்பதே இல்லை. 

சில நேரங்களில் எதிர்மறைக் கருத்தானது அவர்களின் தனிப்பட்ட விமர்சனம் என்பதைக் கூட நாம் கவனிக்கத் தவறுகிறோம். பிறரின் எதிர்மறை எண்ணங்கள் ஒரு புறம் இருக்க நம்மை நாமே சில நேரங்களில் தாழ்வு மனப்பான்மையால் குறைத்து மதிப்பிட்டுக் கொண்டு கிணற்றுத் தவளையாகவே காலங் கடத்துவதும் உண்டு. எதிர்மறை எண்ணங்களை நேர்மறை எண்ணங்களாக மாற்றும் பட்சத்தில் எட்டாக்கனியாக  இருக்கும் இலக்குகளை கூட சுலபமாக அடைந்து விடலாம்.

நம் மனமானது வெறுமனே எண்ணங்களை மட்டுமே சேகரிக்குமே தவிர அது நேர்மறையானதா? எதிர்மறையானதா? என்று பகுத்துப் பார்ப்பது இல்லை; என்றாலும் நேர்மறையான எண்ணங்களை விதைப்பதே நம் கனவுகள் மெய்ப்பட ஆழ்மனதிற்கு உறுதியளிக்கிறது. நாம் எடுத்து வைக்கும் முயற்சியில் “ஜெயித்தால் வெற்றிக் கொள்கிறேன் தோற்றால் கற்றுக் கொள்கிறேன்” என்ற நேர்மறையான கையாளுதல்தான் நம்மை வாழ்க்கையில் அடுத்தப்படிக்கு அணுகச் செய்கிறது.

கழுகின் கதை

மரத்தில் இருந்த கழுகுக் கூடு ஒன்று புதரின் மேல் தவறி விழுந்தது. அத்தருணத்தில் ஒரு முட்டை மட்டும் புதரில் சிக்கிக் கொண்டது. அங்கு உளாற்றிக் கொண்டிருந்த கோழி அதனை தனது முட்டை என்று எண்ணி தொலைதூரத்திற்கு தான் வசிக்கும் கூட்டிற்கு எடுத்து சென்றுவிட்டது. அங்கு இருந்த கோழி முட்டைகளும் கழுகு முட்டையும் பொரிந்து அனைத்தும் வளரத் தொடங்கின. தன்னை எடுத்து வந்த கோழியைத் தாயாக கருதி அது சொல்லிக் கொடுத்த அனைத்தையும் கற்று அந்தக் கழுகு தன்னையும் கோழியாகவே உணர்ந்தது. சராசரி கோழிகள் போலவே அந்தக் கழுகும் தம்மிடம் உள்ள எந்த வேறுபாடுகளையும் உணராமல், தன்னால் வானுயர பறக்க இயலும் என்பதை மறந்து தரையிலேயே நடந்து கொண்டு கொக்கரிக்க முயற்சித்தது. 

நம்மில் பலரும் கழுகாக திகழ இயலும் என்றாலும் உண்மை நிலையை உணராமல் கோழியாகவே வலம் வருகிறோம். இந்தச் சமூகம் வாழும் கட்டமைப்பை அமைத்து தருமே தவிர நாம் யார்? என்பதைத் தேடி உணர்ந்து நம் மனதால் அத்தகைய அடையாளத்தை உணர வேண்டியது நம் பொறுப்பு. நமக்கான அடையாளம் நம் மனநிலையை சார்ந்தே அமைகிறது.

சிந்தனை

பல நேரங்களில் பல்வேறு குழப்பங்களோடு எவ்வாறு முடிவெடுப்பது என்பதை அறியாமல் நாம் திகைத்து நிற்பதும் உண்டு. அத்தகைய சூழலில் எவ்வளவுதான் நேர்மறையான எண்ணங்கள் இருந்தாலும் மனம் தடுமாற கூடும். மற்ற நேரங்களில் இருக்கும் தெளிவைக் காட்டிலும் அந்த மாதிரியான குழப்பமானச் சூழலில் தான் எடுத்த முடிவிலோ கருத்திலோ ஒருநிலை நிமித்தமாக என்ன நடந்தாலும் யார் என்ன சொன்னாலும் அது நன்மையில்தான் முடியும் என்று தீர்க்கமாக இருத்தல் வேண்டும். சில நேரங்களில் அது தவறும் சூழ்நிலைகளும் ஏற்பட கூடலாம்.  

“எல்லாம் நன்மைக்கே (all is well)” என்ற சொற்கள் தரும் வலிமைக்கு அளவில்லை.  நம் வாழ்க்கையில் சந்திக்கும் இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி என அனைத்துமே நம் எண்ணங்களின் வெளிப்பாடுதான். “மனநிலைதான் வாழ்க்கைக்கு முதல் படி” என்பதை உணர்ந்து கொண்டால் வாழ்க்கையின் எல்லா படிகளையும் கடந்து வெற்றிப் படிக்கட்டை அடைந்து விடலாம் என்பது நிதர்சனமான உண்மை. இத்தனை நாட்கள் எப்படியோ, இப்போது முதல் நேர்மறை எண்ணங்களோடு பயணிப்போம்!

படைப்பு: வி.கே. காவியா, நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி மாணவி

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles