எனது நண்பரின் மகள் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளை ஆன்லைன் மூலம் படித்தார். தனி அறையும் லேப்டாப், மொபைல் போன்றவற்றையும் நண்பர் மகளின் கல்வியை கருத்தில் கொண்டு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். லேப்டாப், மொபைல் போன் மூலம் ஆன்லைன் கல்வியை கற்று வந்த மகள் ஒரு கட்டத்தில் விளையாட்டு உள்ளிட்ட பல இணையதளங்களுக்கும் சமூக ஊடகங்களுக்கும் அடிமையாகி விட்டார். உணவை கூட வாங்கிச் சென்று அவரது அறையிலேயே சாப்பிட்டு அங்கேயே தூங்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டது.
கொரோனா பெருந்தொற்று காலம் முடிந்த பின்னர் 11 ஆம் வகுப்பில் பள்ளியில் மகளை சேர்த்த போது மகளால் தொடர்ந்து வகுப்பில் இருக்க இயலவில்லை. இதன் உச்சகட்டமாக பள்ளிக்குச் செல்வதையே மகள் மறுத்து விட்டார். தற்போது அறைக்குள்ளேயே தொடுதிரை/இணையதள அடிமையாகவே இருந்து வருகிறார். மகளை உளவியல் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல திட்டமிட்டாலும் அவர் வர மறுக்கிறார். இதைப் போன்ற அனுபவங்கள் பல பெற்றோர்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஒரு காவல் நிலையத்திற்கு பழைய வழக்கு விசாரணைக்காக பழைய திருடன் ஒருவனை பிடித்து வந்த இன்ஸ்பெக்டர் “ஏன் இப்போதெல்லாம் திருடுவதில்லை. வாரம் ஒரு முறையாவது திருடுவாயே” எனக் கேட்டுள்ளார். “ஒவ்வொரு வீட்டிலும் ஆளுக்கு ஒரு போனை கையில் வைத்துக் கொண்டு விடிய விடிய கொத்திக் கொண்டுள்ளார்கள். இரவில் வீட்டில் கொள்ளை அடிக்கும் பழக்கமுள்ள என்னால் இந்த தொடுதிரை அடிமைகளால் கொள்ளையடிக்க முடிவதில்லை” என அந்த பழைய திருடன் கூறியுள்ளான். இது உண்மையில் நடந்த சம்பவமாகும்.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், கல்லூரிக்குச் செல்லும் இளைஞர்கள், வேலைக்குச் செல்லும் மனிதர்கள் உள்பட பலர் காலை எழுந்தவுடன் மொபைல் போனில் தேவையற்றதை பார்த்து நேரத்தை வீணடிக்கின்றனர். சாப்பிடும் போதும், பயணம் செய்யும்போதும், வேலை பார்க்கும் போதும் மொபைல் போனை உபயோகிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. சிலருக்கு மொபைல் போன் இல்லாவிட்டால் உயிரே போய்விட்டது போல பதட்டம் ஏற்படுகிறது. பாரதி இருந்திருந்தால் என்று முடியும் இந்த தொடுதிரை அடிமைத்தனம்? என பாடியிருப்பான்.
இந்த டிஜிட்டல் யுகத்தில் மொபைல் போன் உபயோகத்தை தவிர்க்க இயலாதது. ஆனால், முழு நேரத்தையும் இதில் மூழ்கடித்து வாழ்க்கையை வீணடித்து விடக்கூடாது. மொபைல் போன் உபயோகிப்பதற்கு சில கட்டுப்பாடுகளை வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளுக்கு முப்பது நிமிடம் மட்டுமே படிப்புக்கு அல்லது வேலைக்கு தொடர்பில்லாதவற்றை பார்க்க வேண்டும் என்பது போன்ற தேவைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் படிப்பில் வெற்றி கிட்டாத நிலையும் வேலையில் நிறைவில்லாத நிலையும் சாதனையை நினைத்துப் பார்க்காத நிலையும் வாழ்க்கையில் வெற்றிடமான நிலையும் ஏற்பட்டுவிடும்.
இணையதள தொடுதிரை அடிமைத்தனம் நேரத்தை மட்டும் வீணடிப்பதில்லை. விளையாட்டு என்ற பெயரில் தற்கொலைக்கு தூண்டும் கருவியாகவும் பணத்தைப் பறிக்கும் செயலியாகவும் ஆபாசங்களுக்கு கொண்டு செல்லும் பாதையாகவும் மோசடிகளுக்கு துணைவனாகவும் உண்மைக்கு புறம்பான தகவல்களையும் வதந்திகளையும் வெறுப்புக்களையும் பரப்பும் காற்றாகவும் மொத்தத்தில் வாழ்க்கையை அழிக்கும் எமனாகவும் தொடுதிரை அடிமைத்தனம் விளங்குகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
தொடுதிரை அடிமைத்தனத்தால் “குடும்ப உரையாடல்களை அழித்து விடுகிறோம். நண்பர்களை மறந்து விடுகிறோம். வீதிக்கு வந்து நடப்பதை -விளையாடுவதை மறந்து உடல் நலத்தை கெடுத்து விடுகிறோம். தூக்கத்தை தொலைத்து விடுகிறோம். சமூக அக்கறை என்றால் என்ன விலை? என கேட்கும் நிலைக்கு உள்ளாகிறோம்”. என்று முடியும் இந்த அடிமைத்தனம்? என்று விடியும் வெற்றிக்கான பாதை?
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சமூக ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் போதை பொருள் ஒழிப்பை வலியுறுத்துவது போல தொடுதிரை அடிமைத்தனத்தை ஒழிக்கவும் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு தகுந்த திட்டங்களை வகுத்து செயல்படாவிட்டால் சமூகத்தில் பெரும்பாலானோர் அழிவை நோக்கிச் செல்வதை தடுத்து நிறுத்த முடியாது. இந்த அடிமைத்தனத்துக்கு ஆளாகாமல் இருக்கும் ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். உங்களைப் போன்றவர்கள்தான் இந்த சமூகத்தை காப்பாற்ற இயலும்.