“அமெரிக்கா முன்னிலை வகிக்கும் நேட்டோ ராணுவ கூட்டணியில் உக்ரைன் இணைய முற்பட்டதன் காரணமாகவே கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைன் மட்டும் போரை நடத்தி இருந்தால் சில வாரங்களில் உக்ரைன் முழுவதும் ரஷ்யா கைப்பற்றி இருக்கும் ஆனால், அமெரிக்கா மிகப்பெரிய ராணுவ உதவியை செய்ததோடு நேட்டோ ராணுவ கூட்டாளிகளும் உக்கரைனுக்கு ராணுவ தளவாடங்களையும் விமானங்களையும் நிதி உதவிகளையும் வழங்கியதால்தான் மூன்றாண்டு காலமாக போர் தொடர்கிறது” என்றார் வாக்காளர் சாமி.
“சாமி! அதுதான் போரை நிறுத்த டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்துகிறாரே” என்றேன் நான். “சண்டைக்காரர்கள் இருவரையும் அழைக்காமல் ரஷ்யாவை மட்டும் அழைத்து ரஷ்ய அதிகாரிகளும் அமெரிக்க அதிகாரிகளும் சவுதி அரேபியாவில் கடந்த வாரத்தில் போரை நிறுத்துவதற்கு ஆலோசனை நடத்தியுள்ளார்கள். தங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தாமல் எடுக்கப்படும் போர் நிறுத்தம் குறித்து மேற்கொள்ளப்படும் எந்த முடிவையும் ஏற்க மாட்டோம் என்று உக்ரைன் அறிவித்துள்ளது. இதனிடையே ஓரிரு நாட்களுக்கு முன்னர் உக்ரைன் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திலும் நாடுகளிடையே பிளவு ஏற்பட்டுள்ளது” என்றார் வாக்காளர் சாமி.
“இது என்ன புலிவால் பிடித்த கதையாக இருக்கிறதே சாமி!” என்றேன் நான். “நேட்டோ ராணுவ கூட்டணிஇருப்பது போல ஐரோப்பாவுக்கு என்று தனி ராணுவம் உருவாக்கப்பட வேண்டும் என்று தற்போது உக்ரைன் பேசத் தொடங்கியுள்ளது. இதற்கு ஐரோப்பிய நாடுகளிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது” என்றார் வாக்காளர் சாமி. “தோசையை பங்கு போட ஓநாயிடம் சென்ற கதையாக இருக்கிறது சாமி! நம்ம ஊர் செய்திக்கு வாருங்கள்” என்றேன் நான்.
“தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு 19 சதவீத வாக்குகளை உள்ளன. அதை வைத்துக்கொண்டு மத்தியில் எப்படி ஆட்சி அமைக்க முடியும்? கூடுதலாக 26-27 சதவீத வாக்குகளை பெற்றால்தான் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான சசி தரூர் தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சியில் புயலை கிளப்பி உள்ளது. நான்காவது முறையாக எம்பி ஆக பதவி வகிக்கும் சசி கரூர் அவ்வப்போது மத்திய அரசையும் கேரளா கம்யூனிஸ்ட் அரசியல் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி கட்சியைச் சேர்ந்த 32 எம்எல்ஏக்கள் தங்களது தொடர்பில் இருப்பதாக அம் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் தெரிவித்திருப்பது ஆம் ஆத்மியில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. ஆனால், நாங்கள் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்க மாட்டோம் என்றும் அவ்வாறு செய்தால் பிஜேபி ஆட்சி அமைக்க முற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்” என்றார் வாக்காளர் சாமி.
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)
“வழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்தை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்து பிறகும் தமிழகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்களே? சாமி!”என்றேன் நான். “மூன்று குற்றவியல் சட்டங்களையும் முற்றிலும் மாற்றி புதிய மூன்று சட்டங்களை கொண்டு வந்த போது வழக்கறிஞர்கள் போராட தொடங்கினர். நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. திடீரென கடந்த ஜூலை 1 முதல் அந்த சட்டங்களை அமல்படுத்தியது. தமிழகத்தில் வழக்கறிஞர்கள் சுமார் இரண்டு மாத காலம் நடத்திய நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் தோல்வியில் முடிவடைந்தது. தற்போது வழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்திற்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல மாநிலங்களில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் சட்ட திருத்தத்தை நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது என வழக்கறிஞர்கள் கருதுகிறார்கள். போராட்டம் நிறுத்தப்பட்டால் மீண்டும் திடீரென சட்ட திருத்தம் மசோதா சட்டமாக்கப்பட்டு விடும் என்று அவர்கள் அஞ்சுவதால்தான் தமிழக முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பை நாளை முதல் வழக்கறிஞர்கள் தொடங்குகிறார்கள்” என்றார் வாக்காளர் சாமி.
“அப்படி என்ன சாமி வழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்தில் உள்ளது? என்றேன் நான். “தற்போது இந்திய பார் கவுன்சில் மற்றும் மாநில பார் கவுன்சில்கள் சுதந்திரமானதாக இயங்குகின்றன. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்ட மசோதாவில் பார் கவுன்சில்களை மத்திய அரசு கட்டுப்படுத்தும் உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு கொண்டுவர முயற்சிப்பதாக கூறப்படுகிறது. மேலும், தற்போது இந்திய பார் கவுன்சிலில் தேர்தல் மூலம் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். புதிய மசோதாவில் உள்ள அம்சம் என்னவெனில் இந்திய பார் கவுன்சிலுக்கு ஐந்து உறுப்பினர்கள் வரை மத்திய அரசு நேரடியாக நியமனம் செய்ய வழி வைக்கிறது. மேலும், பெண் உறுப்பினர்கள் சிலரையும் நியமனம் செய்ய இந்த சட்ட மசோதா வழி வகுக்கிறது. இது மட்டுமல்லாமல் வெளிநாட்டு வழக்கறிஞர்களையும் சட்ட நிறுவனங்களையும் அனுமதிக்க இந்த சட்டம் திருத்தம் எளிமையான முறையை புகுத்துகிறது. இதனைத் தவிர தமிழ்நாடு பார் கவுன்சில் என்ற பெயரை மெட்ராஸ் பார் கவுன்சில் என்ற என மாற்றவும் இந்த மசோதா முயற்சிக்கிறது என்று கூறப்படுகிறது” என்றார் வாக்காளர் சாமி.
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)


“ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டத்தில் ஈடுபட உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது சாமி!” என்றேன் நான். “அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை பேசி தீர்க்க அமைச்சர்கள் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை முடியும் வரை போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு அரசு ஊழியர்களிடையே பேசு பொருளாகி உள்ளது. போராட்டம் நடத்தும் ஜனநாயக உரிமையை நீதிமன்றத்தில் கேட்டுப் பெற வேண்டி உள்ளது என்று அதன் தலைவர்கள் கூறுவதாக தெரிகிறது” என்றார் வாக்காளர் சாமி.
“நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியில் முன்னணி வகித்த காளியம்மாள் ஒருபுறம் அறிவிக்க, அவரைக் கட்சியில் இருந்து நீக்குவதாக சீமான் ஒரு புறம் அறிவிக்க, காளியம்மாள் எங்கே செல்வார்? என்ற விவாதங்கள் அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பாக பேசப்படுகிறது. அவரை தங்கள் கட்சியில் இணைக்க இரண்டு கட்சிகள் வலை வீசி வருவதாக தெரிகிறது” என்றார் வாக்காளர் சாமி.
“கத்திரிக்காய் முட்டினால் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்து தானே ஆகவேண்டும் சாமி!” என்றேன் நான். “நீயும் நன்றாக பேச கற்றுக் கொண்டாய்” எனக் கூறிவிட்டு தொடர்ந்தார் வாக்காளர் சாமி. “2025 ஜூலையில் நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் கமலஹாசன் கிட்டத்தட்ட எம்பி ஆவதற்கான இடத்தை உறுதி செய்து விட்டார் என்றே கூறப்படுகிறது. இருப்பினும் அவரை காத்திருக்க செய்து திமுக பிரமுகருக்கு அந்தப் பதவியை வழங்குவதற்கான முயற்சிகள் ஒருபுறம் தொடர்வதாகவும் கூறப்படுகிறது. அஇஅதிமுகவில் ராஜ்யசபா எம்பிக்கு ஒப்பந்தம் செய்துள்ள தேமுதிக எங்கே அதிமுக தமக்கு சீட் தராமல் விட்டு விடுமோ? என்ற அச்சத்தில் உள்ளதாகவும் பாமக அன்புமணிக்கு எப்படியாவது அதிமுகவுடன் பேசி ராஜ்யசபா சீட்டு வாங்கிவிட வேண்டும் (?) என்ற ஆசையும் இருப்பதாக அரசியல்வாதிகள் பேசி கொள்கிறார்கள். சென்னையில் வசிப்பவரை மயிலாடுதுறையில் சீட் கொடுத்து எம்பி ஆகிவிட்டார்கள் என்று அன்புமணி பேசியுள்ளதற்கு சென்னையில் வசிக்கும் உங்கள் மனைவிக்கு தர்மபுரியில் சீட்டு கொடுத்து தேர்தலில் நிறுத்தினீர்களே? என்று மயிலாடுதுறை எம்பி சுதா பதிலடி கொடுத்துள்ளது காங்கிரஸ் – பாமக இடையே பேசு பொருளாகி உள்ளது” என்றார் வாக்காளர் சாமி.
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)


“அதிமுகவில் உட்கட்சி பூசல் எப்படி இருக்கிறது சாமி!” என்றேன் நான். கோடிக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட இயக்கம் என்றால் உட்கட்சி பிரச்சனையில் இருக்கத்தானே செய்யும். அத்திக்கடவு அவிநாசி திட்டத்துக்கு எடப்பாடிக்கு நடத்திய பாராட்டு விழாவை புறக்கணித்த செங்கோட்டையன் தற்போது எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்ற ஜெயலலிதா நினைவு தினத்திலும் கலந்து கொள்ளாததோடு அவர் வெளியிட்ட விளம்பரங்களில் எடப்பாடி பெயரை தவிர்த்து இருப்பதும் இன்னும் மோதல் அதிகரித்திருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், செங்கோட்டையன் வேறு கட்சிகளுக்கு செல்வாரா? என்று சிலரும் காத்திருக்கின்றனர். ஆனால், அவர் அதிமுக தலைமைகளுடன் தலைமையுடன் போராட்டம் நடத்துவார் தவிர வேறு கட்சிக்கு செல்ல மாட்டார் என்று உறுதியாக சொல்லலாம். அதே வேளையில் அவர் மூலமாக கட்சித் தலைமையை மாற்றவும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும் அதே கட்சியில் சில தலைகள் வேலை செய்து கொண்டிருக்கின்றன. பாஜகவுடன் கூட்டணிக்கு செல்லக்கூடாது என்ற சில தலைகளும் அதிமுகவில் மண்டையை குழப்பிக் கொண்டுள்ளன. வெளியில் இருந்தும் முன்னாள் அதிமுக முக்கிய பிரமுகர்களான மூன்று தலைகளும் காய்களை நகர்த்தி கொண்டுள்ளன” என்றார் வாக்காளர் சாமி.
“அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில் மும்மொழி கொள்கையை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பது ஒரு கட்சிக்கு மட்டும் உள்ளுர கவலையை தந்துள்ளது. இருப்பினும் வெளிக்காட்டாமல் எதிர்ப்புக்கு தகுந்த பதிலை வழங்கி வருகிறார்கள். பெரியார் எதிர்ப்புக்கு சீமானுக்கு பாஜக தலைவர்கள் ஆதரவளித்த நிலையில் மும்மொழி கொள்கையை எதிர்த்து சீமான் முழங்குவதால் அவர் என்ன செய்கிறார் என்பதை கணிக்க இயலவில்லை என்று என்ற எண்ணம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர் ஒரு குறிப்பிட்ட வேலை திட்டத்தில்தான் பயணிக்கிறார் என்பது கைதேர்ந்த அரசியல்வாதிகளுக்கு மட்டுமே தெரியும்” என்றார் வாக்காளர் சாமி.
“மூன்று லட்சம் நபர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தில் பொறுப்பு வழங்குவர் வழங்க விஜய் திட்டமிட்டு இருப்பதாக வெளியான தகவல் பல அரசியல் கட்சிகளிடையே பேசு பொருளாகி உள்ளது. திமுகவில் நடைபெற்று வரும் அதிரடி மாவட்ட பிரிப்பு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் நியமனம் திமுகவை வலுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்று அந்த கட்சியினர் தெரிவிக்கின்றனர். இதனால் உள்கட்சி மோதல் அதிகரிக்குமா? அல்லது வலுவான தேர்தல் களத்தை உருவாக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றார் வாக்காளர் சாமி.
“அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை கூட்டணிக்கு கொண்டு வருவதற்கு பிரசாந்த் கிஷோர் மற்றும் ஆதவ் அர்ஜுன் ஆகியோர் கடுமையாக முயற்சிப்பதாக தெரிகிறது. ஆனால், கூட்டணி என்றால் அதிமுகவுக்கும் தாவெகாவுக்கும் சமமான எம்எல்ஏ சீட்டுகள் பிரிக்கப்பட வேண்டும் என்பது நிபந்தனையாக இருப்பதாக பேசிக் கொள்கிறார்கள். இத்தகைய கூட்டணி ஏற்பட்டால் கம்யூனிஸ்ட்கள் இந்த பக்கம் வந்து விடுவார்களா? என்ற பேச்சு உள்ளது. எவ்வாறு இருப்பினும் கூட்டணிக் கட்சிகளை தக்க வைத்துக் கொள்ள திமுக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவே கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் அதிமுக பாமக, பாஜக, சீமான், உள்ளிட்ட கூட்டணியை உருவாக்க முயற்சிகள் நடப்பதாகவும் தெரிகிறது எவ்வாறு இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மூன்று கூட்டணிகள் களத்தில் இருக்கும் என்பதில் மாற்றமில்லை” என்று கூறிவிட்டு விடை பெற்று சென்றார் வாக்காளர் சாமி.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: வாக்காளர் சாமியின் கருத்து மழைக்கு மிக்க நன்றி.

