Advertisement

வந்த வீடியோகால்… …  மாணவியை மிரட்டி நிர்வாண படம்… … தொடரும் பாலியல் தொந்தரவு… … ஆணோ, பெண்ணோ உஷாராக இருக்க தெரிந்து கொள்ள வேண்டிய சங்கதிகளுடன் வாக்காளர் சாமி.அனைவருக்கும் அனுப்பி உதவுங்கள்.

இன்று காலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வருகை புரிந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் செலுத்தி விட்டு, “என்ன சாமி செய்திகள்?” என கேட்டதும் கருத்து மூட்டையை அவிழ்க்க தொடங்கினார் அவர். 

“நேற்று, எனக்கு வாட்ஸ் அப்பில் 9—- – -8- என்ற எண்ணில் இருந்து ஹாய் என்ற மெசேஜ் வந்தது. நான் பதிலளிக்கவில்லை. இதே போலவே, ஓரிரு மாதங்களுக்கு முன்னர் வாட்ஸ் அப்பில் போலீஸ் உடைய அணிந்த டிபியை வைத்துக் கொண்டிருந்தவர் அழைத்தார். நான் எடுக்கவில்லை. இதை போலவே மூன்று மாதங்களுக்கு முன்னர் வீடியோ கால் வந்தது எடுக்கவில்லை. மீண்டும் இரண்டு மூன்று முறை வந்தது எடுக்கவில்லை என்றார்” வாக்காளர் சாமி . “என்ன சாமி! ஒருவர் நம்மை அழைக்கிறார், நமக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்புகிறார் என்றால் பதில் அனுப்புவது தானே நாகரீகம்” என்றேன் நான். 

“இப்படித்தான் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் தெற்கு பகுதி மாவட்டம் ஒன்றில் உள்ள கலைக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவிக்கு வீடியோ கால் வந்துள்ளது. அதனை எடுத்து அவர் பேசியுள்ளார். அதில் அழைத்தவரின் முகம் தெரியவில்லை. நீங்கள் இன்னார்தானே? என்று அவர் கேட்டுள்ளார். இல்லை ராங் நம்பர் எனக் கூறி இவர் வைத்து விட்டார். அந்த வீடியோ காலில் அந்தப் பெண்ணின் ஒளிப்படம் பதிவாகிவிட்டது. சுமார் அரை மணி நேரத்தில் ஏற்கனவே அழைத்தவரிடம் இருந்து ஒரு புகைப்படம் வாட்ஸ் அப்புக்கு வந்தது. அதில் அந்தப் பெண்ணின் உடல் மார்பிங் செய்யப்பட்டு நிர்வாணமாக அவரது தலையுடன் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் மீண்டும் அந்த நபரிடம் இருந்து போன் வந்தது.  நிர்வாண படத்தை அழித்து விடுமாறு எவ்வளவோ கெஞ்சுகிறார். ஆனால், அவனோ நான் எதுவும் செய்ய மாட்டேன். நீ நிர்வாணமாக ஒரு படம் எடுத்து எனக்கு அனுப்பிவிடு என்று கேட்கிறான். ஆனால், இந்த பெண்ணோ மறுக்கிறார். ஓரிரு வாரம் தொடர்ந்து மிரட்டல். இறுதியாக அனுப்பாவிட்டால் இந்த படத்தை உங்கள் பெற்றோர் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டல். இதனால் பயந்து போன மாணவி குளிக்கும் அறைக்குச் சென்று நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அந்த நபருக்கு அனுப்பி விடுகிறார். இதற்குப் பின்னர் தான் பிரச்சனையே ஆரம்பமானது. ஏற்கனவே இந்த மாணவியுடன் சமூக வலைத்தளத்தில் உள்ள ஒருவன் இந்த புகைப்படத்தை அனுப்பி மிரட்ட ஆரம்பிக்கிறான். இந்த மாணவியை கிளம்பி வரச் சொல்கிறான். சமூக வலைத்தளத்தில் அறிமுகமான அந்த நபர் தற்போது இந்த பெண்ணின் மொபைல் ஃபோனை ஹேக் செய்து கொண்டு இந்த மாணவியுடன் படிக்கும்  ஓரிரு நண்பர்களுக்கும் புகைப்படத்தை அனுப்பி தற்போது மிரட்ட தொடங்கி இருக்கிறான். இவ்வாறு பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மாணவியின் பிரச்சனையைக் கேட்டு பரிதாபப்படுவதை விட இவ்வாறு செயல்படும் கயவர்கள் மீது கோபம் வருகிறது. அதைப்போலவே சமூக வலைத்தளத்தில் தேவையில்லாமல் அறிமுகம் இல்லாதவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொண்டு தீயவர்களின் எண்ணத்துக்கு பலியாகும் இத்தகைய பெண்கள் மீதும் கோபம் வருகிறது. இத்தகைய கயவர்கள் தினமும் பல மாணவிகளிடமும் சிறுமிகளிடமும் இதே பாணியில் வேலையை செய்து அவர்களை மிரட்டி கடத்திச் சென்று விற்றுவிடும் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் “என்றார் வாக்காளர் சாமி.

“சாமி! கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிரபல தமிழ் நாள்களில் நானும் ஒரு செய்தியை படித்தேன். கல்லூரி மாணவிகளின் புகைப்படங்களை தவறாக மார்பிங் செய்து இணையதளத்தில் பதிவிட்டு பணம் கேட்டு மிரட்டிய இருவரை மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இதே போலவே சில தினங்களுக்கு முன்பு வாரம் இருமுறை வெளியாகும் பத்திரிகை ஒன்றிலும் ஒரு செய்தியை படித்தேன். இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமாகி பெண்களின் புகைப்படத்தை எடுத்து ஆபாசமாக மாற்றி அந்த பெண்களுக்கு அனுப்பி மிரட்டி பணம் கேட்கும் ஒருவரை வேலூர் மாவட்ட சைபர் கிராம் கிரைம் பிரிவினர் கைது செய்துள்ளனர்” என்றேன் நான்.

“பெண்களுக்கு மட்டும் இந்த பிரச்சனை இல்லை. சைபர் கிரைம் குற்ற கும்பல்கள் திட்டமிட்டு ஆண்களை வீடியோ காலில் அழைக்கிறார்கள். ஆண்கள் எடுத்துப் பேசும்போது அங்கே நிர்வாணமாக ஒரு பெண் தோன்றுகிறாள். சில ஆண்கள் ஓரிரு நிமிடம் பேச்சை தொடர்கிறார்கள். சிலர் உடனே வீடியோ காலை கட் பண்ணி விடுகிறார்கள். எவ்வாறு இருப்பினும் இவர்களுக்கு அந்த கும்பிடமிருந்து மீண்டும் அழைப்பு வருகிறது. நிர்வாண பெண்ணோடு பேசியதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொண்டு அதனை அனுப்பி மிரட்டுகிறார்கள். எவ்வளவு பணம் வாங்க முடியுமோ, அவ்வளவு பணத்தை வாங்கி விடுகிறார்கள்” என்றார் வாக்காளர் சாமி.

“இன்னொரு கும்பலோ வாட்ஸப் மூலமாக அல்லது இமெயில் மூலமாக தகவல் அனுப்புகிறார்கள். அதில் நீங்கள் சிறுமிகளின் ஆபாச படங்கள் உள்ள இணையதளத்தை பார்வையிட்டுள்ளீர்கள். இதனை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். நாங்கள் சிபிஐ அல்லது மத்திய அரசின் சைபர் கிரைம் பிரிவு. உங்களுக்கு வாரண்ட் அனுப்பியுள்ளோம் சரண்டர் ஆக வேண்டும் அல்லது உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும். இல்லை என்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று மிரட்டி பணம் பறிக்கிறார்கள். சிலரோ நீங்கள் டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டுள்ளீர்கள் என்று மிரட்டி பணம் பறிக்கிறார்கள்” என்றார் வாக்காளர் சாமி.

“இதற்கு என்னதான் சாமி தீர்வு?” என்றேன் நான். சமூக வலைத்தளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டு மிக நெருங்கிய நண்பர்களாக மாறக்கூடாது. அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து வீடியோ கால் வந்தால் எடுக்க கூடாது.  மிரட்டல் இமெயில் அல்லது வாட்ஸ் அப் தகவல்கள் வந்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் செய்ய வேண்டும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நிர்வாகங்கள் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகளும் இத்தகைய சைபர் குற்றங்களை தடுக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் பாதுகாப்பை வழங்குவதும் குற்றம் புரிவோரை விரைவில் அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியமாகும்” என கூறி விட்டு விடைபெற்றார் வாக்காளர் சாமி. அனைவருக்கும் அனுப்பி உதவுங்கள்.

விழாக் காலங்களில் தலை தூக்கும் ஆம்னி பஸ் கட்டண உயர்வுகள் – நியாயமற்ற வர்த்தக நடைமுறையா? https://theconsumerpark.com/omni-bus-regulation

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles