Advertisement

அதானியை, இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய முடியுமா?  மத்தியிலும் முடங்கிக் கிடக்கும் குழந்தைகள் கமிஷன், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வழி உள்ளிட்டகருத்து மூட்டையுடன்  வாக்காளர் சாமி.

இன்று காலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வருகை புரிந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் செலுத்தி விட்டு, “அதானியை கைது செய்ய அமெரிக்க நீதிமன்றமும் இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் வாரண்ட் பிறப்பித்துள்ளதாக செய்தி வருகிறதே! இதெல்லாம் நடக்குமா, சாமி?” என கேட்டதும் கருத்து மூட்டையை அவிழ்க்க தொடங்கினார் அவர். 

“அமெரிக்க நீதிமன்றம் ஒன்று இந்திய குடிமகனை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தால் வாரண்ட் உத்தரவை சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் நிறுவனத்துக்கும் இந்திய அரசின் உள்துறைக்கும் அனுப்பி வைப்பார்கள். இரண்டு நாடுகளுக்கு இடையே கைது மற்றும் கைதிகளை பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தம் இல்லாத போது, அமெரிக்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவதும் அமல்படுத்தாததும் இந்திய அரசின் விருப்பமாகும். அதே சமயத்தில் கைது செய்யுமாறு உத்தரவு  பிறப்பிக்கப்பட்ட இந்தியர் வெளிநாட்டுக்கு சென்றால் அமெரிக்க உத்தரவின்படி கைது செய்வதும் செய்யாததும் அந்த நாடுகளின் விருப்பமாகும். ஆனால் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளுக்கு செல்லும் போது கைது செய்யப்படலாம்” என்றார் வாக்காளர் சாமி. 

“இஸ்ரேல் பிரதமர் கைது செய்யப்படுவாரா? சாமி!” என்றேன் நான். “சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அமைப்பை ஏற்றுக்கொண்டு 124 நாடுகள் கையொப்பம் செய்துள்ளன. இதில் இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கையொப்பம் செய்யவில்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக் கொண்டுள்ள பிரிட்டன் பிரான்ஸ் இத்தாலி உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேல் பிரதமர் தங்கள் நாட்டுக்கு வந்தால் கைது செய்யப்படுவார் என்று அறிவித்துள்ளன. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனையும் தாண்டி இஸ்ரேல் பிரதமர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை கடுமையாக கண்டித்து உள்ளார். இதே இஸ்ரேல் பிரதமர் ஐக்கிய நாடுகளின் அமைதி படையை லெபனானில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கேட்டவர்தான். சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரையும் கண்டித்தார். சுருங்கக் கூறின், இஸ்ரேல் பிரதமர் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறார்” என்றார் வாக்காளர் சாமி.

“சர்வதேச அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்க இயலாதா? பாலஸ்தீனத்தின் காசா மீதான தாக்குதல்கள் இனப்படுகொலையா? சாமி !” என்றேன் நான். 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று உலகளாவிய மனித உரிமைகள் பிரகடன தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை இயற்றியது. இதைப்போலவே, ஒரு நாள் முன்னதாக 1948 டிசம்பர் 9 அன்று இனப்படுகொலைக்கு எதிரான உலகளாவிய பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தியது. இலங்கையில் உள்நாட்டு போரில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போதும் தற்போது காசாவில் பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதல்களிலும் இனப்படுகொலை என்ற குற்றச்சாட்டு ஒரு சாரார் தரப்பில் முன் வைக்கப்படுகிறது. காசாவில் நடைபெறும் தாக்குதல்கள் இனப்படுகொலையின் வடிவம் என்று போப் உட்பட பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய நாடுகளும் இத்தகைய கருத்துக்களை கொண்டுள்ளன. ஆனால், சர்வதேச அமைப்புகள் மீதான தாக்குதல்கள் மற்றும் இனப்படுகொலை போன்ற விவகாரங்களை விசாரிக்க வேண்டிய ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக்குழு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. ஏனெனில், அமெரிக்காவின் வீட்டோ அதிகாரம் காரணமாக எந்த தீர்மானத்தையும் பாதுகாப்பு குழுவில் மேற்கொள்ள அமெரிக்க அனுமதிக்கப் போவதில்லை என்பதுதான்” என்றார் வாக்காளர் சாமி. 

“மழை வருமா? என்று கேட்டால் வரும்! ஆனால் வராது! என்பது போலவே கருத்து கூறுகிறீர்கள் சாமி. நாம் உள்நாட்டுக்கு வருவோம்” என்றேன் நான். “இந்திய குடியரசுத் தலைவர் நேற்று நீலகிரி மாவட்டத்தில் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வருகை புரிந்துள்ளார் கோயம்புத்தூரில் இருந்து ஹெலிகாப்டரில் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது மோசமான வானிலை காரணமாக பலத்த பாதுகாப்புகளுடன் சாலை மார்க்கமாக அவர் நேற்று ராணுவ பயிற்சி கல்லூரியை சென்றடைந்துள்ளார்” என்றார் வாக்காளர் சாமி. வரும்போது ஏதோ குழந்தைகளைப் பற்றி பாடிக்கொண்டு வந்தீர்களே? சாமி!” என்றேன் நான்.

“சர்வதேச ஒப்பந்தத்தில் குழந்தைகள் பாதுகாப்புக்காக இந்தியா கடந்த 1986 ஆம் ஆண்டு கையொப்பம் செய்தது. இதன் காரணமாக இந்தியாவில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கு தேசிய அளவிலும் மாநில அளவிலும் கமிஷன்களை அமைக்க 2005 ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டது. 2005 ஆம் ஆண்டு முதல் தேசிய குழந்தைகள் கமிஷன் இயங்கி வருகிறது தற்போது ஓரிரு மாதங்களாக இந்த கமிஷனில் இருக்க வேண்டிய தலைவரும் ஆறு உறுப்பினர்கள் பதவிகளும் காலியாக உள்ளன. எத்தனை காலம்தான் இப்படியே அந்த கமிஷன் முடங்கி இருக்கப் போகிறதோ? இதே போலவே தமிழகத்திலும் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இல்லாத நிலையில் உள்ள மாநில குழந்தைகள் கமிஷனுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க ஓரிரு தினங்களில் அரசால் விளம்பரம் வெளியிடப்படும் என்று கருதப்படுகிறது. 10 மத்திய தகவல் ஆணையர்கள் இருக்க வேண்டிய மத்திய தகவல் ஆணையத்தில் இருவர் மட்டுமே உள்ளனர். புதியவர்களை தேர்ந்தெடுக்க நடைமுறைகள் தொடங்கி சில மாதங்கள் கடந்தும் இன்னும் எவரும் நியமிக்கப்படவில்லை. இதனால் மத்திய தகவல் ஆணையத்தில் அதிக வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. இதே நிலைதான் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திலும் நீடிக்கிறது” என்றார் வாக்காளர் சாமி.

“விலைவாசியை கொரோனாவுக்கு முன்பு, கொரானாவுக்கு பின்பு என்று பிரித்துக் கொள்ளலாம் கொரோனா தொற்றுக் காலத்தில் ஏறிய விலைவாசி கொரோனா முடக்கத்துக்கு பின்னர் அதே உச்சத்தில் நின்று கொண்டது மட்டுமல்லாமல் வழக்கம்போல ஏறிக்கொண்டே உள்ளது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கிறார்கள். இதனால் விலைவாசியை கட்டுப்படுத்த பொருட்கள் மற்றும் சேவைகளையும் விலைகளை நிர்ணயம் செய்யும் வேலையை அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்தமான் அருகே ரூ  36,000/- கோடி மதிப்புள்ள மெத்தாம்பெட்டமின் என்ற போதை பொருளை இந்திய கடலோர பாதுகாப்பு படை கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.” எனக் கூறி விட்டு விடைபெற்றார் வாக்காளர் சாமி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles