பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வருகை புரிந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் செலுத்தி விட்டு, “என்ன சாமி செய்திகள்?” என கேட்டதும் கருத்து மூட்டையை அவிழ்க்க தொடங்கினார் அவர்.
“ஓரிரு தினங்களுக்கு முன்னர் பெங்களூரில் பாகிஸ்தானி ஒருவரையும் அவரது வங்கதேச மனைவியையும் மற்றும் இருவரையும் கர்நாடக காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இந்தியாவின் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்ட போலியான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது போலவே, சில தினங்களுக்கு முன்பு மும்பையிலும் போலியான ஆவணங்களுடன் இருந்த பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தியாவுக்குள் பாகிஸ்தானியர்கள் ஊடுருவியுள்ளது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தானதாக உள்ளது“ என்றார் வாக்காளர் சாமி. “தமிழகத்தில் இத்தகைய ஊடுருவல்கள் இல்லாமல் இருப்பது நிம்மதியை தருகிறது சாமி!” இன்று நான்.
“அவசரப்படாதே. அடுத்த செய்தியை கேள். இரண்டு நாட்களுக்கு முன்பு நாமக்கல்லில் நான்கு வங்காள தேசத்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களும் இந்தியர்களுக்கு வழங்கப்படுவதை போலவே ஆவணங்களை தயாரித்து வைத்துள்ளது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களது வாக்குமூலத்தில் வங்காளதேச இந்திய எல்லையில் பாதுகாப்பு படையினருக்கு லஞ்சம் கொடுத்து இந்தியாவில் ஊடுருவியதாக தெரிவித்திருப்பது எல்லை பாதுகாப்பின் அலட்சியத்தை காட்டுவதாக அமைந்துள்ளது” என்றார் வாக்காளர் சாமி. “இந்தியா முழுவதும் பாகிஸ்தானியர்களும் வங்காளதேசத்தவர்களும் எத்தனை நபர்கள் ஊடுருவி இருப்பார்களோ தெரியவில்லை சாமி” என்று கூறிவிட்டு வரும்போது இஸ்ரேலில் குண்டு போட்டால் இந்தியாவில் சத்தம் கேட்கிறது என முணுமுணுத்தீர்களே, அது எப்படி?” என்றேன் நான்.
“ஓரிரு நாட்களுக்கு முன்னர், லெபனானில் இருந்து ஏவப்பட்ட 15 ராக்கெட்டுகள் இஸ்ரேல் நாட்டின் துறைமுக நகரமான ஹைஃபா-வை தாக்கியுள்ளது. ஹைஃபா துறைமுகத்திற்கும், இந்திய வர்த்தக நிறுவனமான அதானி குழுமத்திற்கும் மிக முக்கியமான தொடர்பு உள்ளது. இந்த ஹைஃபா துறைமுகத்தை தனியார்மயமாக்கும் 1.18 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஏல திட்டத்தை அதானி குழுமத்துடன் இணைந்து கடோட் குழுமம் வென்றது. அதானி போர்ட்ஸ் நிறுவனம் இஸ்ரேல் அரசுக்கு சுமார் 785 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது இந்த நிலையில் ஹைஃபா துறைமுக நகரில் குண்டு வெடித்தால் இந்தியாவில் சத்தம் கேட்க தானே செய்யும்” என்றார் வாக்காளர் சாமி.
“அது மட்டுமா, லெபனான், ஈரான், சிரியா ஆகிய நாடுகள் மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரால் உலகம் முழுவதும் சத்தம் கேட்கிறது. நடைபெறும் போரில் பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு வழங்கி வந்த நிபந்தனையற்ற ஆதரவை திரும்ப பெற யோசிக்க தொடங்கிவிட்டன. ரஷ்யா, சைனா போன்ற நாடுகள் ஈரானுக்கு ஆதரவை வழங்குகின்றன. தங்களை ஆதரிக்காத ஐ.நா. சபை பொதுச் செயலாளர், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை மிரட்டும் பாணியில் இஸ்ரேல் கண்டிப்பதும் பல அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் அபாயம் மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் போரினால் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது என்பதை காட்டிலும் இந்தப் போர் உலகப்போராக மாறிவிடுமோ? என்ற அச்சமும் உலக நாடுகளிடையே தோன்றியுள்ளது” என்றார் வாக்காளர் சாமி. “உலகச் செய்திகளாகவே மூட்டைகளை அவிழ்த்து விடுகிறீர்கள். உள்ளூர் செய்திகள் இல்லையா? சாமி” என்றேன் நான்.
“தட்டுங்கள் திறக்கப்படும் என்பது போல தமிழக முதல்வர் புது தில்லி சென்று பிரதமரை சந்தித்து தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கேட்டார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் சென்னையில் மெட்ரோ திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆளுநர் தரப்பில் முயற்சித்து கேபினட் செயலாளரிடம் பேசி ஆளுநர் நிதி பெற்று தந்ததாக ஒரு கருத்து ஊடகங்களில் உருவாக்கப்பட்டுள்ளது என்னதான் அரசியலோ? என்ற வாக்காளர் சாமி அவரே தொடர்ந்தார். “ஓபிஎஸ் தற்போது புது தில்லிக்கு சென்றுள்ளது அவர் பிஜேபியில் சேருவதற்கு என்ற கருத்து சமூக ஊடகங்களும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும். அதற்கு முன்னதாக யூகித்து செய்தியை வெளியிடுவது வழக்கமான ஒன்றுதானே. ஆனால், 2025 ஆம் ஆண்டு முடிவதற்கு முன்பாக இத்தகைய முடிவுகள் எதனையும் அவர் மேற்கொள்ள மாட்டார் என்று நான் கருதுகிறேன்” என்றார் வாக்காளர் சாமி.
“சாமி! தீபாவளி நெருங்குகிறதே” என்றேன் நான். “சென்னையிலும் வெளியூர்களிலும் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு விமான கட்டணம் அளவுக்கு ஆம்னி பேருந்துகளுக்கு செலவு செய்ய வேண்டியது வருமே என்ற கவலை இப்போதே தோன்றி விட்டது. இப் பிரச்சனையை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்” எனக் கூறி விட்டு விடைபெற்றார் வாக்காளர் சுவாமி.
தனியார் அறக்கட்டளைகள் நடத்தும் ஆன்மீக மையங்களுக்கு செல்லும் போது கூறப்படும் தல வரலாறு உண்மையா? என்பதை அறிவது அவசியம் https://theconsumerpark.com/consumer-court-judgement-dr-v-ramaraj