இன்று காலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வருகை புரிந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் செலுத்தி விட்டு, “என்ன சாமி செய்திகள்?” என கேட்டதும் கருத்து மூட்டையை அவிழ்க்க தொடங்கினார் அவர்.
“அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுதான் தற்போது உலகம் முழுவதும் முக்கிய செய்தியாகும். இதனால், இந்தியாவுக்கு நட்பு ரீதியாக எவ்வித பாதகமும் ஏற்படப்போவதில்லை என்பது நல்ல செய்தி. அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான இறக்குமதி வரியை இந்திய அரசு குறைக்காவிட்டால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா கடுமையான உயர்த்தும் என்பது தொழில் இந்திய தொழிலதிபர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் உள்ள பயமாகும். இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு சென்று வேலை பார்ப்பது, அங்கேயே குடியுரிமை பெறுவது போன்றவற்றிலும் இந்தியர்களுக்கு பாதிப்பு இருக்கும் என்று கருதப்படுகிறது” என்றார் வாக்காளர் சாமி.
“கனடா நாட்டின் அரசாங்கம் வெளியிட்ட ஆவணம் ஒன்றில் கனடாவின் இணையதளங்கள் மீது இந்தியாவில் இருந்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு, இணையதள குற்றங்கள் புரியப்படுவதால் இந்தியா இணையதள குற்றங்கள் வகையில் கனடாவுக்கு எதிரி நாடு என்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே, ரஷ்யா, சீனா, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளை இவ்வாறான பட்டியலில் கனடா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது” என்றார் வாக்காளர் சாமி.
“சாமி! உலக செய்திகள் போதும், உள்ளூர் செய்திகளுக்கு வாருங்கள்” என்றேன் நான். “1936 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்தித் தருவதாக இந்திய அரசின் சார்பில் ஒலிம்பிக் கமிட்டியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது முதலே பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் மிகப் பெரிய நாடாக இந்தியா இருந்தபோதிலும் ஒலிம்பிக் பதக்க பட்டியலில் சிறிய நாடுகளை காட்டிலும் பின்தங்கியே இருந்து வருகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு முன்னதாக இந்தியாவில் திறமையான விளையாட்டு வீரர்களை தயாரிப்பதற்கான பணியிலும் ஈடுபட வேண்டும். கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் இந்தியாவின் கிரிக்கெட் வாரியம் (BCCI) அரசின் கட்டுப்பாட்டிற்கு இல்லை. இந்த வாரியம் சங்கங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட ஒன்றாகும். இதைப்போலவே, பல்வேறு விளையாட்டுகளுக்கான சங்கங்கள் சங்கங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட்டு உள்ளன. விளையாட்டு வீரர்கள் மட்டுமே இருக்க வேண்டிய சங்கங்களில் விளையாட்டுக்கு சம்பந்தமில்லாத அரசியல்வாதிகள் தலைவராகவும் செயலாளராகவும் இருந்து கொண்டு அவர்களது விருப்பப்படி செயல்பட்டு வருகிறார்கள். இந்த சங்கங்கள் சார்பில்தான் சர்வதேச விளையாட்டுகளுக்கு போட்டிகளுக்கு இந்தியாவின் சார்பில் வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவ்வாறு சங்கங்களின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய விளையாட்டுக்களை முடிவுக்கு கொண்டு வந்து விளையாட்டு நிர்வாகத்தை அரசே நேரடியாக எடுத்துக் கொள்ளலாம். மருத்துவ கவுன்சில், வழக்கறிஞர்கள் கவுன்சில் சட்டங்கள் மூலமாக அந்த கவுன்சில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது போல அனைத்து விளையாட்டுகளும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கவுன்சிலின் கீழ் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பது பலருடைய கருத்தாக உள்ளது. அரசியல்வாதிகளை அகற்றி சம்பந்தப்பட்ட விளையாட்டு வீரர்களை மட்டுமே உள்ளடக்கிய அரசின் கட்டுப்பாட்டில் கவுன்சில்களை அமைக்க விளையாட்டு சங்கங்களில் பதவியில் உள்ள அரசியல்வாதிகள் சுலபமாக விட்டு விட மாட்டார்கள்” என்றார் வாக்காளர் சாமி.
“சாமி! தமிழக செய்திகள் கொஞ்சம் கூறுங்களேன்” என்றேன் நான். “எம்ஜிஆர் இருந்தபோது கலைஞருக்கு கூடாத கூட்டமா? இருந்த போதிலும் எம்ஜிஆர் இருக்கும் வரை கலைஞரால் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. இதை போலவே, வைகோ திமுகவிலிருந்து பிரிந்த போது அவருக்கு கூடிய கூட்டம் ஓட்டாக மாறவில்லை. நடிகர் விஜய்க்கு அவரது அரசியல் பிரவேசத்தின் முதல் மாநாட்டில் மகத்தான கூட்டம் கூடியது என்பது உண்மை என்றாலும் இந்த கூட்டம் ஓட்டாக மாறுமா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இருந்தபோதிலும் விஜய்யின் அரசியல் வருகையால் 2026 சட்டமன்ற களத்தில் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரச்சார உத்திகள் போன்றவற்றில் புதிய வியூகங்கள் தோன்றக்கூடும் என்பதில் ஐயமில்லை” என்றார் வாக்காளர் சாமி.
“சாமி! கடந்த வாரம் நீங்கள் தெரிவித்த வீடியோ கால் விபரீதங்கள் குறித்த கட்டுரையை பல ஆயிரக்கணக்கானவர்கள் படித்துள்ளதாக கூகுள் அனலிடிக்ஸ் தெரிவித்துள்ளது” என்றேன் நான்.
“சைபர் கிரைம் குறித்து இரண்டு தகவல்களை சொல்கிறேன், கேட்டுக் கொள். சிலருக்கு மொபைல் போனில் அழைப்பு வருகிறது. எதிரில் பேசும் நபர் தான் தவறுதலாக உங்கள் போனுக்கு ரூ 500/- கூகுள் பே மூலம் அனுப்பிவிட்டேன். எனது மகளுக்கு மருத்துவமனைக்கு செல்வதற்காக வைத்திருந்த பணம். தயவு செய்து திருப்பி அனுப்புங்கள் என கேட்கிறார்கள். தாங்களும் மனிதாபிமானத்துடன் உடனடியாக பணத்தை எந்த நம்பரில் இருந்து பணம் வந்ததோ அந்த மொபைல் போனுக்கு அனுப்பி வைக்கிறீர்கள். இவ்வாறு தாங்கள் செய்யும் போது தங்கள் மொபைல் போனில் உள்ள வங்கி கணக்கு விவரங்களை திருடி தங்களது பணத்தை அபகரிக்க ஒரு கூட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை போலவே, அவசர உதவிக்காக ஒரு போன் செய்ய தங்களது போனை கொடுக்க முடியுமா? என்று அடையாளம் தெரியாத நபர்கள் கேட்கிறார்கள். பாவம் என பரிதாபப்பட்டு அவர்களிடம் நீங்கள் மொபைல் போனை கொடுத்தால் அவர்கள் பயன்படுத்தும் ஓரிரு நிமிடங்களில் தங்களது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும் மோசடி செய்து விடுகிறார்கள். இதனால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது. ஆனால், கொடுமை என்னவென்றால் உண்மையான உதவி தேவைப்படுபவருக்கு கூட உதவி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டு விடுகிறது. யாராவது உங்களுக்கு பணம் அனுப்பி உள்ளேன், திருப்பி அனுப்புங்கள் என்றால் காவல் நிலையத்திற்கு அனுப்பி விடுகிறேன், நீங்கள் அங்கு சென்று வாங்கி கொள்ளுங்கள் என தெரிவிப்பதே உத்தமம் என்று தோன்றுகிறது” என கூறி விட்டு விடைபெற்றார் வாக்காளர் சாமி.
வழக்கு தாக்கல் செய்வதில் நுகர்வோருக்கு உள்ள சவால்கள் https://theconsumerpark.com/challenges-to-approach-consumer-court