இன்று காலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வருகை புரிந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் செலுத்தி விட்டு, “யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என ஒரு மாகாணத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்பதும் வாடகை மனைவிகள் அமர்த்திக் கொள்ளும் பாலில் பாலியல் சுற்றுலா என்பதும் குறித்த செய்திகள் கடந்த வாரத்தில் றெக்கை கட்டி பறந்தனவே, சாமி” என கேட்டதும் “நாட்டுக்கு இது இப்ப ரொம்ப தேவை. அதைப் பற்றி கடைசியில் சொல்கிறேன்” என செல்லமாக கோபித்துக் கொண்டு வாக்காளர் சாமி கருத்து மூட்டையை அவிழ்க்க தொடங்கினார் அவர்.
“ஒரு நண்பர் எனக்கு நேற்று சொன்ன தகவலை சொல்கிறேன் கேள். துறையூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் சமீபத்தில் ஐடி நிறுவனத்தில் நல்ல வேலைக்கு சென்றுள்ளார். ஓரிரு நாட்களுக்கு முன்னர் அவருக்கு வீடியோ காலில் ஒரு போன் வந்துள்ளது. அதில் உயர் போலீஸ் அதிகாரிக்கான சீருடையில் ஒருவர் இருந்துள்ளார். தங்களது மொபைல் போன் போதை பொருள் கடத்தும் கும்பலுடன் தொடர்புடையதாக உள்ளது என கூறி பேச ஆரம்பித்துள்ளார். தம்மை மத்திய அரசின் போதை பொருள் தடுப்பு உயர் போலீஸ் அதிகாரி என கூறிக் கொண்டவர் டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருப்பதாக அந்த இளைஞரிடம் தெரிவித்துள்ளார். வீடியோ காலை ஆப் செய்தால் உங்கள் வீட்டுக்கு தகவல் சொல்வோம், பேப்பர், டிவியில் உங்கள் பெயர் வரும் என்று மிரட்டி அந்த இளைஞரை வீடியோ காலில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்காமல் 9 மணி நேரம் இருக்க வைத்துள்ளார். தாங்கள் கூறுகிற வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பினால் வழக்கிலிருந்து விடுவித்து விடுவதாக மிரட்டி இளைஞரின் வங்கி கணக்கிலிருந்து ரூபாய் இரண்டு லட்சத்தை இறுதியாக பறித்து விட்டார். பயந்து போன இளைஞர் பணத்தை பறி கொடுத்துவிட்டு வீட்டுக்கு தகவல் சொன்ன பின்னர்தான் மோசடி கும்பலால் தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்ந்துள்ளார். இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாகவே தெரிய வருகிறது. அரசு தரப்பிலும் பத்திரிகைகளிலும் டிஜிட்டல் அரெஸ்ட் என்று ஒன்று கிடையாது என விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் சிலர் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஏமாறும் மக்களை விட ஏமாற்றும் மனிதர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது சைபர் கிரைம் போலீசாரின் கடமையாகும்” என்றார் வாக்காளர் சாமி.
“பேஸ்புக்கில் போலியாக ஒரு நபரின் கணக்கை உருவாக்கி அசல் பேஸ்புக்கில் உள்ள நண்பர்களுக்கு நட்பு வேண்டுகோளை அனுப்பி அவர்கள் அதனை ஏற்றதும் ரூபாய் 10 ஆயிரம் அனுப்பி வையுங்கள், ரூபாய் 20 ஆயிரம் அனுப்பி வையுங்கள், திடீரென அவசரம் 3 மணி நேரத்தில் பணம் தந்து விடுகிறேன் என்ற மோசடிகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறு பேஸ்புக்கில் எவர் தொடர்பு கொண்டு பணம் கேட்டாலும் கட்டாயம் அனுப்பக் கூடாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதைப்போலவே ஈமெயிலில் நீதிமன்றம் தாங்கள் ஆபாச இணையதளங்களை பார்த்ததற்காக அல்லது மோசடி வங்கி பணவர்த்தனை செய்வதற்காக வாரண்ட் பிறப்பித்துள்ளது என்று போலியான மிரட்டல் தகவல்களை அனுப்பி ஒரு கும்பல் பணம் பறித்து கொண்டுள்ளது. இவ்வாறான இமெயில்களை நம்பாதீர்கள்” என்றேன் நான்.
“சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் திரைப்பட விமர்சனங்கள் நடுநிலையாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. படம் குறித்த விமர்சனங்களை பத்திரிகைகளும் ஊடகங்களும் வெளியிடும் முன்பே, படம் வெளியாகும் நாள் அன்றே, அந்தப் படம் மிக மோசமானது என்பது போல சித்தரித்து நல்ல படங்களை கூட தோல்வியடைய சமூக ஊடகங்கள் மூலம் சில அரசியல்வாதிகளும் சில வர்த்தகர்களும் செயல்படுகிறார்கள் என்பது திரைப்பட தயாரிப்பாளர்களின் வேதனையாக உள்ளது. புதிய படங்களை முதல் மூன்று நாட்கள் விமர்சனம் செய்ய தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தங்களது அரசியல் அல்லது வர்த்தக சாம்ராஜ்யத்துக்கு போட்டியாக எந்த ஒரு தயாரிப்பாளரும் அல்லது நடிகரும் உருவாகி விடக்கூடாது என்பது தவறாக வழி நடத்தும் விமர்சனங்களை சமூக ஊடகங்களில் உருவாக்கும் நபர்களின் திட்டமாக உள்ளது” என்றார் வாக்காளர் சாமி.
“சாமி! தவறாக வழி நடத்தும் (misleading advertisement) வர்த்தக விளம்பரங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்ட்ரல் கன்ஸ்யூமர் புரொடக்சன் அத்தாரிட்டி புதிய விதிகளை சில நாட்களுக்கு முன்பு அமல்படுத்தியுள்ளது. இதே போலவே, தவறாக வழிநடத்தும் திரைப்பட விமர்சனங்களை கட்டுப்படுத்த சென்ட்ரல் கன்ஸ்யூமர் புரொடக்சன் அத்தாரிட்டி நடவடிக்கை எடுக்கலாமே?” என்றேன் நான்.
“நீயும் நன்றாகத் தான் யோசிக்கிறாய். நேற்று திடீரென தென்கொரியாவில் அரசால் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் எமர்ஜென்சி அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியா, ரஷ்யா, சைனா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலருக்கு பதிலாக புதிய பணத்தை உருவாக்கி தங்கள் நாடுகளுக்கு இடையே வர்த்தகம் செய்து கொள்ளும் திட்டத்தை உருவாக்கி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு விரைவில் அதிபராக உள்ளவர் பிரிக்ஸ் நாடுகள் புதிய நாணயத்தை அறிமுகம் செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று மிரட்டி உள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆசியாவில் இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர், ஐரோப்பாவின் உக்ரைன் – ரஷ்ய போர் போன்றவை சர்வதேச அளவில் பதட்டத்தை தொடர்ந்து வைத்துக் கொண்டுள்ளன. வளரும் மற்றும் ஏழை நாடுகளில் பொருளாதாரப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும் போது 2025 ஆம் ஆண்டு உலக அளவில் அரசுகளுக்கும் மக்களுக்கும் சவால் நிறைந்ததாக இருக்கும்” என்றார் வாக்காளர் சாமி.
“சாமி! நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இல்லையே!” என்றேன் நான். “உன்னுடைய கேள்விகளுக்கு காரணம் பொருளாதார பிரச்சனைகள் என்பதை ஏற்கனவே சுட்டிக்காட்டி விட்டேன். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடுகளில் பாலியல் சுற்றுலா என்பது பெருமளவில் நடைபெற்று வருகிறது. தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு பணம் வைத்திருப்பவர்கள் இன்பம் பெறுவதற்காக சுற்றுலா செல்லுகிறார்கள். சமீபகாலமாக வளர்ந்து இருப்பது வாடகை மனைவிகள் என்ற வர்த்தகம். அந்த நாட்டுக்கு விமான நிலையத்தில் சென்றடைந்ததும் ஏஜெண்டுகள் மூலமாக வாடகை மனைவிகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அந்த நாட்டிலிருந்து வரும் வரை அந்த பெண்கள் இவர்களுக்கு வாடகை மனைவிகளாக இருக்கிறார்கள். தற்போது இந்த வரிசையில் ஜப்பான் நாட்டிலும் பாலியல் சுற்றுலாத் தொழில் வளர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. நாட்டின் பொருளாதாரம் மோசம் அடையும் போது, மக்களின் வறுமை காரணமாகவே இத்தகைய பாலியல் தொழில்கள் வளர்கின்றன என்பதை ஆளும் அரசுகள் மறந்துவிடக்கூடாது” என்றார் வாக்காளர் சாமி.
அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட சட்டத்தில் கணவனுக்கு தெரியாமல் மனைவியோ அல்லது மனைவிக்கு திரும்பியாமல் கணவனோ திருமணத்தை மீறிய உறவில் இருப்பது குற்றம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. திருமணத்தை மீறிய உறவில் கணவனுக்கு தெரியாமல் மனைவியோ, மனைவிக்கு தெரியாமல் கணவரோ இருப்பது தவறல்ல. யார் வேண்டுமானாலும் யாரோடு வேண்டுமானாலும் உறவு வைத்துக் கொள்ளலாம் என்ற சட்ட மசோதாவில் சில தினங்களுக்கு முன்பு நியூயார்க் கவர்னர் கையொப்பம் செய்துள்ளார். இத்தகைய சட்டங்கள் பண்பாடுகளை சீரழித்து விடும் என்பதை மக்கள் உணர்ந்து கொள்வார்களா என்பது தெரியவில்லை” எனக் கூறி விட்டு விடைபெற்றார் வாக்காளர் சாமி.