அதிகாலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் கூறி “என்ன சாமி செய்திகள்” என்றேன் நான். “செய்திகளுக்கா பஞ்சம்? கடந்த ஒரு வாரமாக அரசியல் செய்திகள் தமிழகத்தில் சுனாமியாக வீசுகின்றன” எனக் கூறி விட்டு கருத்து மூட்டைகளை அவிழ்த்தார் வாக்காளர் சாமி.
“அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் வியாபாரி, அடுத்ததுதான் அரசியல்வாதி என்பது உலகுக்கு தெரியும். வெளிநாட்டு ஊழல் நடைமுறை சட்டம், 1977 ஐ 180 நாட்களுக்கு நிறுத்தி வைத்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும் வெளிநாட்டு பெரு முதலாளிகளுக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க வழி ஏற்பட்டுள்ளது. இதனால் நம்ம ஊரு அதானி மீதான வழக்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்றார் வாக்காளர் சாமி.
“சட்டவிரோதமாக குடியேறி அமெரிக்காவில் வசிப்பவர்களை வெளிநாடுகளுக்கு சொந்த நாடுகளுக்கு அமெரிக்க அனுப்பி வருகிறது. கொலம்பியா, மெக்சிகோ, அர்ஜெண்டனா போன்ற நாடுகள் கூட அவர்களது குடிமகன்களை அமெரிக்காவில் இருந்து ஏற்றிக்கொண்டு வரும் அமெரிக்க ராணுவ விமானங்களை அவர்களது நாட்டில் தரை இறங்க அனுமதி தராமல் சொந்த விமானங்களைக் கொண்டு அமெரிக்காவிலிருந்து அவர்களது குடிமகன்களை அவர்களது நாட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள். இந்நிலையில் இந்தியர்களுக்கு கை விலங்கிட்டு அமெரிக்கவில் இருந்து ராணுவ விமானம் இந்திய நாட்டில் தரையிறங்க அனுமதித்துள்ளது இந்தியா முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபரை அமெரிக்கா சென்று உள்ள இந்தியாவின் பிரதமர் சந்திக்க உள்ளார்” என்றார் வாக்காளர் சாமி.
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)
“அமெரிக்கவில் மட்டுமா சட்ட விரோத குடியேறிகள் உள்ளார்கள்? இந்தியாவில் குடியேறிய வங்கதேச நாட்டவர் கைது செய்யப்படும் செய்தி தினமும் வந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் வங்கதேசம் நாட்டவர்களின் சட்ட விரோத ஊடுருவல்களை தடுத்து இங்கு சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினரை அவர்களது நாட்டுக்கு அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றேன் நான்.
“நீ கூறுவது உண்மைதான் தமிழகத்தில் சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசம் நாட்டவர்களின் கூடாரமாக திருப்பூர் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறுபவர்களுக்கு பொருளாதார ரீதியாக நன்றாக வாழ வேண்டும் என்பதை எண்ணமாக இருக்கும். ஆனால், வங்கதேசத்தினர் என்ற போர்வையில் இந்தியாவில் சட்டவிரோதமாக நுழைவது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தானது. வங்கதேசம் பாகிஸ்தானுடன் மிக நெருங்கி உறவாடும் நிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கதேச நாட்டவர்களையும் கண்டறிந்து நாடு கடத்த வேண்டும்” என்றார் வாக்காளர் சாமி.
“அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களை நாடு கடத்துவதை கிறிஸ்தவர்களின் முக்கிய தலைவரான போப் கண்டித்து உள்ளது கவனிக்கத்தக்கதாக உள்ளது” என்றேன் நான்.
“பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை கவிழ்க்க பிஜேபி கட்சி சதி செய்வதாக கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் அவருக்கு ஏற்பட்ட தோல்வியில் இருந்து இன்னும் அவர் மீளவில்லை ஆனால், டெல்லி மாநில தேர்தல் வெற்றி பிஜேபிக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் கூட்டணி சேர்ந்திருந்தால் ஹரியானாவிலும் டெல்லியிலும் பிஜேபி வெற்றி பெற்றிருக்க இயலாது என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள். எதிர்கட்சிகள் இடையே உள்ள பலவீனம் தான் பிஜேபியின் பலம். நாங்கள் செலுத்தும் வரி ஏற்ப எங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்று தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கூறுவது சரியானது அல்ல என்று மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால், இதே கோரிக்கையை தற்போதைய பிரதமர் குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது கடுமையாக வலியுறுத்தி வந்த விவரத்தை தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக ஆளும் கட்சித் தலைவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்” என்றார் வாக்காளர் சாமி.
“தனக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என திரைப்பட வசனம் போல சண்டை தொடர்கிறது சாமி” என்றேன் நான்.
“பழனி முருகன் கோவிலில் கீழிருந்து மேலே செல்ல யானை பாதை வழியும் படிக்கட்டு பாதை வழியும் உள்ளது. தைப்பூச திருவிழாவில் காவடி எடுத்து வருவோர் யானை பாதை வழியாக செல்லும்படி ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், நம்ம பிஜேபி தலைவர் அண்ணாமலை அந்த வழியாக செல்ல முடியாது எனக் கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ள படிக்கட்டு பாதை வழியாக காவடி எடுத்துச் சென்றுள்ளார். ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட 40 சென்ட் பஞ்சமி நிலத்தை விலைக்கு வாங்கி சட்டவிரோதமாக தனது பெயரில் பட்டா ஏற்படுத்திக் கொண்டதாக கூறி ஓபிஎஸ்-க்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் ஓரிரு நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டுள்ளது. இத்தகைய மோசடியை புரிந்ததற்கு ஓபிஎஸ் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது” என்றார் வாக்காளர் சாமி.
“தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் 12 கேள்விகளை எழுப்பி உள்ளதாக தெரிகிறதே சாமி” என்றேன் நான். “ஆளுநருக்கு இதெல்லாம் சகஜமப்பா” என கூறிவிட்டு கருத்துவெடிகளை தொடர்ந்தார் வாக்காளர் சாமி.
“விஜயுடன் ஆதவ் அர்ஜுன் சேர்ந்துள்ளதும் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தமிழகம் வந்து விஜயை சந்தித்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமியையும் பிரசாந்த் கிஷோர் ரகசியமாக சந்தித்ததாக கூறப்படுகிறது பிரசாந்த் கிஷோரும் ஆதவ் அர்ஜுனும் எடப்பாடி பழனிச்சாமி, விஜய், தொல். திருமாவளவன் ஆகிய மூவரையும் ஒரு கோட்டில் இணைத்து கூட்டணியை உருவாக்க முயற்சிப்பதாக தெரிகிறது. அதே சமயத்தில் எப்படியாவது அதிமுகவை வழிக்கு கொண்டு வந்து அதிமுக பிஜேபி, பாம,க தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியை வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு உருவாக்க பாஜக முயற்சிக்கிறது. இந்தக் கூட்டணியில் சீமானும் வரலாம். திமுக தனது கூட்டணியை தக்க வைத்துக் கொண்டு கூட்டணி பேரத்தின் மூலம் அதிக இடங்களில் போட்டியிட்டு 200 இடங்களில் வெற்றி பெற்று விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. எவ்வாறு இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மூன்று கூட்டணிகள் களமிறங்க போகின்றன” என்றார் வாக்காளர் சாமி.
“தேர்தல் வியூக பொறுப்பாளரை விஜய் சந்தித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீமான் பணம் இருப்பதால் கொழுப்பு என விஜய்யை வம்புக்கு இழுத்துள்ளார். டெபாசிட் இழப்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுவதும் திரள் நிதிக்காகவே கட்சி நடத்துவதும் சீமானின் வேலை என்று தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி ஒருவர் பதிலடி கொடுத்துள்ளார்”. என்றேன் நான்.
“ஒவ்வொரு தேர்தலிலும் கூடும் இலவச திட்ட வாக்குறுதிகளால் அரசின் செலவும் வரிவிதிப்பும் அதிகரிப்பதாக நடுத்தர மக்களிடையே கருத்து உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இலவச ரேஷன், இலவச திட்டங்கள் காரணமாக மக்கள் அதிகமாக உழைப்பதில்லை என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது தேர்தலில் மோசடி நடைபெற்றதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் செய்யப்பட்ட பதிவுகளை அழித்து விடாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்கிவிட்டு சட்டம் இயற்றப்பட்டது செல்லாது என கூறுகின்ற தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.” என்றார் வாக்காளர் சாமி.
“தற்போது தமிழக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால் பிஜேபி தனித்துப் போட்டியிட்டால் ஒரு இடத்தை கூட வெல்ல முடியாது என்று இந்தியா டுடே சி ஓட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றேன் நான்.

“பிஜேபி எதற்கு தனித்துப் போட்டியிடப் போகிறது? உள்கட்சி விவகாரத்தையும் சின்ன ஒதுக்கீட்டையும் தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது என்பது பொதுவான செய்தி. ஆனால், தேர்தல் ஆணையத்தை கருவியாக பயன்படுத்தி இரட்டை இலை முடக்கப்படும் என்றும் இரட்டை இலை முடக்கப்பட்ட பின்னர் செங்கோட்டையனை கருவியாக பயன்படுத்தி அதிமுகவில் குழப்பத்தை உருவாக்கி அவரை அக் கட்சிக்கு பொதுச் செயலாளராக கொண்டு வந்து சசிகலா, ஓபிஎஸ், தினகரன் ஆகியோர் அடங்கிய ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்கி அதனுடன் கூட்டணி சேர்ந்து பிஜேபி போட்டியிட ஒரு குழுவினர் போர்க்கால அடிப்படையில் வேலை பார்த்து வருவதாக வதந்திகள் உலா வருகின்றன. நெருப்பு இல்லாமல் புகையுமா?” என்று கூறிவிட்டு விடை பெற்று சென்றார் வாக்காளர் சாமி.
