Advertisement

நீதிமன்றங்களின் அமைப்பு முறையை தெரிந்து கொள்ளுங்கள்

இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றும் அமைப்புகளாக தேசிய அளவில் நாடாளுமன்றத்தையும் மாநிலங்களில் சட்டமன்றங்களையும் உருவாக்கியுள்ளது. சட்டத்தை அமல்படுத்தும் செயல் துறை அமைப்பாக மத்திய  அரசும் மாநில அரசுகளும் செயல்படுகின்றன.   

சட்டம் வழங்கியுள்ள உரிமைகளில் பிரச்சனை ஏற்படும் போதும், தனி நபர்களுக்கு இடையேயும், தனி நபர்களுக்கும் அரசு இடையேயும்,   மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையேயும்,   ஒரு மாநில அரசுக்கும் மற்றொரு மாநில அரசுக்கும் இடையேயும் பிரச்சனைகள் ஏற்படும் போதும்  சட்டப்படி விசாரணை செய்து தீர்ப்பு வழங்கும் அமைப்பாக அரசியலமைப்பால் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நீதிமன்றங்களின் அமைப்பு முறையை அறிந்து கொள்வது அவசியமானதாகும்.

தேசிய அளவில் உயர்ந்த அமைப்பாக உச்ச நீதிமன்றமும் (supreme court) மாநில அளவில் உயர்ந்த அமைப்பாக உயர்நீதிமன்றமும் (high court) கீழமை நீதிமன்றங்களாக மாவட்ட நீதிமன்றங்களும் (district court)  இதர   கீழமை நீதிமன்றங்களும் (subordinate courts) அமைந்துள்ளன.

சிவில் நீதிமன்றங்கள்

டிஸ்ட்ரிக்ட் முன்சீப் கோர்ட் (district munsiff court) என்று அழைக்கப்படும் மாவட்ட உரிமையியல் நடுவர் நீதிமன்றமானது ஒவ்வொரு தாலுகாவிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றத்தில்   ரூபாய் ஒரு லட்சம் வரையிலான மதிப்புள்ள சிவில் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. சப்-கோர்ட் என்று அழைக்கப்படும் சார்பு நீதிமன்றமானது ரூபாய் பத்து லட்சம்  வரையிலான மதிப்புள்ள சிவில் வழக்குகளை விசாரிக்கிறது.  டிஸ்ட்ரிக்ட் கோர்ட் என அழைக்கப்படும் மாவட்ட நீதிமன்றமானது ரூபாய் 10 லட்சத்துக்கும் மேல் மதிப்புள்ள சிவில் வழக்குகளை  விசாரிக்கிறது.

ஒவ்வொரு தாலுகாவிலும் மாவட்ட முன்சீப் கோர்ட் செயல்படுவதைப் போல ஒவ்வொரு தாலுகாவிலும் அல்லது இரண்டு தாலுகாக்களுக்கு ஒரு இடத்திலும் சப்-கோர்ட் அமைக்கப்பட்டுள்ளது. அதிக வழக்குகள் உள்ள தாலுகாக்களின் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்ட முன்சீப் கோர்ட்டுகளும் சப்-கோர்ட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இது போலவே மாவட்ட தலைநகரங்களில் முதன்மை மாவட்ட நீதிமன்றம் (principal district court) செயல்படுகிறது. அதிக வழக்குகள் உள்ள சூழ்நிலையில் மாவட்ட தலைநகரங்களில் கூடுதல் மாவட்ட நீதிமன்றங்களும் (additional district court)  மாவட்ட தலைநகரம் அல்லாத முக்கிய தாலுகாக்களிலும் கூடுதல் மாவட்ட நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

சொத்துக்களின் மதிப்பு, சொத்து அமைந்துள்ள இடம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு டிஸ்ட்ரிக்ட் முன்சீப் கோர்ட், சப் கோர்ட்,   டிஸ்ட்ரிக்ட் கோர்ட் ஆகியவற்றில் எதில் வழக்கு தாக்கல் செய்வது? என்பதை முடிவு செய்ய வேண்டும். இந்த நீதிமன்றங்களில் பாகப்பிரிவினை, சொத்து தகராறு,   கடன் வசூல் போன்ற சிவில் வழக்குகளை  தாக்கல் செய்யலாம். 

குற்றவியல் நீதிமன்றங்கள்

ஒவ்வொரு தாலுகாவிலும் மேஜிஸ்திரேட் கோர்ட் (magistrate court) எனப்படும் நீதித்துறை குற்றவியல் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றத்தில் 3 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க கூடிய வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு தாலுகாவிலும் அல்லது இரண்டு தாலுகாவிற்கு ஒரு இடத்திலும் அசிஸ்டன்ட் செசன்ஸ் கோர்ட் (assistant sessions court) எனப்படும் உதவி அமர்வு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. 

பெரும்பாலும் சப் -கோர்ட் மற்றும் அசிஸ்டன்ட் செசன்ஸ்   கோர்ட் ஆகியன ஒன்றாகவே செயல்படுகிறது. அதாவது இந்த நீதிமன்றங்கள் சிவில் வழக்குகளை விசாரிக்கும் போது சப் கோர்ட் என்றும் கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் போது அசிஸ்டன்ட் செசன்ஸ் கோர்ட் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கக்கூடிய குற்றவியல் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.

டிஸ்ட்ரிக்ட் செசன்ஸ் கோர்ட் என அழைக்கப்படும் மாவட்ட அமர்வு நீதிமன்றங்கள் அனைத்து வகையான குற்றவியல் வழக்குகளையும் விசாரிக்கின்றன இந்த நீதிமன்றமானது ஆயுள் தண்டனையை வழங்கும் அதிகாரத்தையும் கொண்டுள்ளது. இந்த நீதிமன்றத்தால் தூக்கு தண்டனையும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்படலாம். ஆனால், அவ்வாறு விதிக்கப்படும் தூக்கு தண்டனை உயர் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

வழக்குகளின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு ஒவ்வொரு   தாலுகாவிலும் ஒரு  மேஜிஸ்ட்ரேட் கோர்ட் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதைப்போலவே தேவைப்படும் இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட அசிஸ்டன்ட்   செசன்ஸ் கோர்ட்டுகளும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவைப்படும் இடங்களில் கூடுதல்   செசன்ஸ் கோர்ட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலும் டிஸ்ட்ரிக்ட் -கோர்ட் மற்றும்   செசன்ஸ்   கோர்ட் ஆகியன ஒன்றாகவே செயல்படுகிறது. அதாவது இந்த நீதிமன்றங்கள் சிவில் வழக்குகளை விசாரிக்கும் போது டிஸ்ட்ரிக்ட் கோர்ட் என்றும் கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் போது   செசன்ஸ் கோர்ட் என்றும் அழைக்கப்படுகிறது.  இந்த நீதிமன்றங்களுக்கு பல்வேறு வகையான சட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள பிரச்சனைகளை விசாரிக்கும் அதிகாரமும் தீர்வு வழங்கும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு நீதிமன்றங்கள்

இந்து திருமண சட்டம், காசோலை வழக்கு தொடர்புடைய மாற்று  முறை ஆவணச் சட்டம், மனித உரிமை பாதுகாப்பு சட்டம், போக்சோ சட்டம் போன்ற சிறப்பு   சட்டங்கள் குறித்த பிரச்சனைகளை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட   சட்டம் தொடர்பான சிறப்பு நீதிமன்றங்கள் பெருநகரங்களில் மட்டுமே செயல்படுகின்றன.  மாவட்டங்களில்  இதே சட்டம் தொடர்பான பிரச்சனையில் விசாரிப்பதற்கான அதிகாரமானது ஏற்கனவே மாவட்டங்களில் செயல்படும் மாவட்ட நீதிமன்றம் அல்லது சார்பு நீதிமன்றம் அல்லது மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அல்லது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு கூடுதலாக வழங்கப்படுகிறது.

உதாரணமாக, இந்து திருமணம் தொடர்பான பிரச்சனைகளை விசாரிக்க பெருநகரங்களில் அல்லது அதிக வழக்குகள் உள்ள மாவட்டங்களில் குடும்ப நல நீதிமன்றங்கள் (family court) அமைக்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் இந்து திருமணம் தொடர்பான பிரச்சனைகளை விசாரிக்கும் நீதிமன்றமாக சார்பு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பெருநகரங்களிலும் அதிக வழக்குகள் உள்ள மாவட்டங்களிலும் காசோலை மோசடி வழக்குகளுக்காக மேஜிஸ்ட்ரேட் கோர்ட் அளவிலான விரைவு நீதிமன்றங்கள் (fast track courts) அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான விரைவு நீதிமன்றங்கள் இல்லாத இடங்களில் ஏற்கனவே உள்ள மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டுகளில் கூடுதலாக காசோலை மோசடி வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.

தொழிலாளர் நல சட்டம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க (labout court) மாவட்ட நீதிபதி அளவிலான   தனியாக சிறப்பு நீதிமன்றங்கள் தனியாக அமைக்கப்பட்டுள்ளன.  இதைப்போலவே மாநகராட்சி உள்ள இடங்களில் வரி தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களும் செயல்படுகின்றன. 

அரசியலமைப்பு நீதிமன்றங்கள்

மேலே கூறப்பட்ட அனைத்து நீதிமன்றங்களும் மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களின் வகைகளை சார்ந்தவை ஆகும். இந்திய அரசியலமைப்பு இந்திய நாட்டில் உச்ச நீதிமன்றம் தேசிய அளவில் உயர் அமைப்பாகவும் மாநிலங்களில் உயர் நீதிமன்றம் உயர்ந்த நீதித்துறை அமைப்பாகும் அமைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளதால் உச்ச நீதிமன்றத்தையும் உயர்நீதிமன்றங்களையும் அரசியலமைப்பு நீதிமன்றங்கள் என்று அழைக்கிறோம். இந்த நீதிமன்றங்களின் பணிகள் மற்றும் அதிகாரங்கள் குறித்து இன்னொரு கட்டுரையில்  விரைவில் பார்ப்போம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles