Advertisement

நவம்பர் 26 ஆம் தேதியில் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுவது ஏன் என்று தெரிந்து கொள்ளுங்கள்! அனைவருக்கும் அனுப்புங்கள்!

ஒரு நாடு எவ்வாறு இயங்க வேண்டும்? என்பதை தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ள வாழ்க்கை முறைதான் அரசியலமைப்பாகும். அரசு எவ்வாறு செயல்பட வேண்டும்? என்பதையும் மக்கள் எவ்வாறு ஆளப்பட வேண்டும்? என்பதையும் வரையறுப்பது தான் அரசியலமைப்பு. அரசியலமைப்புக்கு ஒவ்வொரு நாட்டின் அரசும் அந்த நாட்டின் மக்களும் கட்டுப்பட்டவர்கள். அரசியலமைப்புச் சட்டமானது அரசாங்கத்தின் அதிகாரங்கள் மற்றும் கடமைகள், அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் மக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பான விதிகளைக் கொண்டுள்ளது.

உயர்ந்த சட்டம் (Supreme Law)

அரசியலமைப்புதான் ஒரு நாட்டில் பாராளுமன்ற ஆட்சி முறை நிலவ வேண்டுமா? அதிபர் ஆட்சி முறை நிலவ வேண்டுமா? கூட்டாட்சி இருக்க வேண்டுமா? ஒற்றை ஆட்சி முறை இருக்க வேண்டுமா? என்பதை வரையறுக்கிறது. இதே போலவே, சட்டம் இயற்றும் அமைப்புகளான மத்தியில் பாராளுமன்றம், மாநிலங்களில் சட்டமன்றங்கள் எவ்வாறு இருக்க வேண்டும்? என்பதையும் மத்திய, மாநில அரசுகள் எவ்வாறு இருக்க வேண்டும்? என்பதையும் நீதித்துறை எவ்வாறு இருக்க வேண்டும்? என்பதையும் அரசியலமைப்பு வரையறை செய்கிறது. இந்திய தேசத்தின் உயிர்நாடியாக, உயர்ந்த சட்டமாக விளங்கும் அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட நாள் நவம்பர் 26, 1949.  அரசியலமைப்பு உருவான சரித்திரத்தின் அடிப்படை அம்சங்களை ஒவ்வொரு இந்தியரும் தெரிந்து கொள்வது அவசியமாகும். 

அரசியலமைப்பு வளர்ச்சி

இந்திய துணை கண்டம் பல்வேறு மன்னர்களாலும் குறுநில பிரபுக்களாலும் ஆட்சி செய்யப்பட்டு வந்த நிலையில் இந்தியாவுக்கு வணிகம் புரிய வந்த இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் சில பிரதேசங்களில் ஆட்சி நடத்தி தொடங்கியது.  இதனை ஒழுங்குபடுத்தும் விதமாக இங்கிலாந்து பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட 1773 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஒழுங்குமுறை சட்டமும் 1784 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பிட்ஸ் இந்தியா சட்டமும் (Regulations Act, 1773 & Pitt’s India Act, 1784) இந்திய அரசியலமைப்பு சரித்திரத்தின் தோற்றமாக கருதப்படுகிறது. 

கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்த இங்கிலாந்து அரசு இந்தியாவின் ஆட்சிப் பணிகளை நேரடியாக எடுத்துக் கொள்ளும் வகையில் இங்கிலாந்து பாராளுமன்றத்தால் 1813 ஆம் ஆண்டு சட்டம் இயற்றியது. இதனைத் தொடர்ந்து இந்திய அரசின் பணிகளை நெறிப்படுத்தும் விதமாக 1833, 1853, 1858, 1861, 1892, 1909, 1919, 1835 ஆகிய ஆண்டுகளில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்தியாவிற்கான ஆட்சி முறை சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்த சட்டங்களின் வாயிலாகவே இந்தியாவில் சட்டம் இயற்றும் அமைப்புகளும் அரசாங்கத்தின் வடிவங்களும் தோற்றுவிக்கப்பட்டன. 

அரசியலமைப்பு நிர்ணய சபை

முதன்முதலாக 1934 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய தேசிய காங்கிரஸ் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முன்வைத்தது. 1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்த கிரிப்ஸ் மிஷன் குழுவினர் இந்திய அரசியல் நிர்ணய சபையை அமைக்க சம்மதம் தெரிவித்தனர். இந்திய அரசியல் நிர்ணய சபைக்கு 292 உறுப்பினர்கள் மாகாண சட்டமன்றங்கள் மூலமும் 93 உறுப்பினர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் இயங்கி வந்த  சுதேச அரசுகளின் மூலமும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பலுசிஸ்தான், கூர்க், அஜ்மீர்-மேர்வாரா மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளுக்கு நான்கு உறுப்பினர்கள் தேர்வானார்கள். இவ்வாறு 389 உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இந்திய அரசியல் நிர்ணய சபையானது பாகிஸ்தானுக்கு தனியான அரசியல் நிர்ணய சபையை உருவானதன் காரணமாக 296 உறுப்பினர்கள் கொண்ட அவையாக மாறியது.

டாக்டர் ராஜேந்திர பிரசாத்

இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் 1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி தற்காலிக தலைவர் டாக்டர் சச்சிதானந்த சின்கா தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத்தும் துணைத் தலைவராக பேராசிரியர் ஹரேந்திர குமார் முகர்ஜியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்திய அரசியலமைப்பின் ஒவ்வொரு பகுதியையும் உருவாக்குவதற்காக 17 துணை குழுக்கள் நியமனம் செய்யப்பட்டது. இக்குழுக்களின் தலைவர்களாக டாக்டர் ராஜேந்திர பிரசாத். ஜவர்கலால் நேரு. வல்லபாய் படேல் உள்ளிட்டோர் பணியாற்றினார். 

பெனகல் நர்சிங் ராவ்

1946 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதில் புகழ்பெற்ற சட்ட நிபுணர் சர் பெனகல் நர்சிங் ராவ் அரசியலமைப்பு சபையின் அரசியலமைப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அரசியலமைப்பின்   ஜனநாயக கட்டமைப்பிற்கு அரசியலமைப்பின் ஆரம்ப அசல் வரைவை தயாரித்து 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையில் இவர் சமர்ப்பித்தார். 

டாக்டர் பி ஆர் அம்பேத்கார்

சர் பெனகல் நர்சிங் ராவ் சர்வதேச நீதிக்கான நிரந்தர நீதிமன்றத்தில், ஹேக்கில் நீதிபதியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி டாக்டர் பி. ஆர். அம்பேத்கார் தலைமையிலான அரசியலமைப்பு வரைவு குழு அமைக்கப்பட்டது. ஆலடி கிருஷ்ணசுவாமி ஐயர், என்.கோபாலசுவாமி, கே.எம் முன்ஷி, முகமது சாதுல்லா, பி.எல். மிட்டர் மற்றும் டி.பி. கைதான் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றிருந்தனர். அக்டோபர் 1947 மற்றும் பிப்ரவரி 1948 க்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு குழுக்கள் வழங்கிய பரிந்துரைகளையும் ராவ் அவர்கள் சமர்ப்பித்த அசல் அரசியலமைப்பு வரைவையும் ஆய்வு செய்து இந்திய அரசியலமைப்பை டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான வரைவு குழு இறுதி செய்தது.

பெரும்பாலான பகுதிகள்

இங்கிலாந்து பாராளுமன்றம் இயற்றிய இந்திய அரசு சட்டம் 1935-ன் பெரும்பாலான பகுதிகள் இந்திய அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ளது. பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவை முறை இங்கிலாந்து அரசியலமைப்பிலிருந்தும் கூட்டாட்சி முறை கனடா அரசியலமைப்பிலிருந்தும் அவசரகால பிரகடன முறை ஜெர்மனி அரசியலமைப்பிலிருந்தும் தழுவி இந்திய அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்டது.  உச்ச நீதிமன்ற அமைப்பு முறை, அடிப்படை உரிமைகள் மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான சட்டத்தை செல்லாது எனக் கூறும் அம்சம் போன்றவை அமெரிக்க அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. அரசின் நெறிமுறை கோட்பாடுகள் மற்றும் குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்யும் முறை போன்றவை அயர்லாந்து பாராளுமன்றத்தில் இருந்து எடுக்கப்பட்ட அம்சங்கள் ஆகும்.

செலவு ரூ. 63,96,729.

அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணியை அரசியல் நிர்ணய சபை 2 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 18 நாட்களில் முடித்தது. இந்த காலகட்டத்தில், மொத்தம் 165 நாட்களை உள்ளடக்கிய பதினொரு அமர்வுகளை நடத்தியது. இதில், 114 நாட்கள் அரசியலமைப்பு வரைவு பரிசீலனைக்கு செலவிடப்பட்டது. மொத்த செலவு ரூ. 63,96,729.

நவம்பர் 26, 1949

இந்திய அரசியலமைப்பின் நிர்ணய சபையின் 284 உறுப்பினர்களால் கையொப்பம் செய்யப்பட்டு இந்திய அரசியலமைப்பு நவம்பர் 26, 1949 -ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாளையே ஒவ்வொரு ஆண்டும் அரசியலமைப்பு தினமாக இந்தியாவின் சட்ட தினமாக கொண்டாடி வருகிறோம். இந்திய அரசியலமைப்பு ஜனவரி 26, 1950 அன்று நடைமுறைக்கு வந்தது. நம் தேசத்தின் அரசியலமைப்பை மதிப்பதும் உயர்த்திப் பிடிப்பதும் ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும்.

(கடந்த 2021 நவம்பர் 26 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணி குழு சார்பில் நடைபெற்ற அரசியலமைப்பு தின விழாவில், அப்போதைய தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக இருந்தவரும் தற்போதைய நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியுமான டாக்டர் வீ. ராமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய உரையின் சுருக்கம். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகளும் வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles