2022 ஜனவரி 1 ஆம் தேதி நிலவரப்படி, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பெல்ஜியம், பிரேசில், சிலி, லக்சம்பர்க், வடகொரியா, சிங்கப்பூர், எகிப்து, தாய்லாந்து உள்ளிட்ட 22 நாடுகளில் மக்கள் வாக்களிப்பது கட்டாயமாகப்பட்டுள்ளது. இவற்றில் சில நாடுகளில் அரசியலமைப்புச் சட்டத்திலேயே கட்டாய வாக்களிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது சில நாடுகளில் பாராளுமன்ற சட்டங்கள் மூலம் கட்டாய வாக்களிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தச் சட்டங்களில் வாக்களிப்புக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டவர்களின் பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது.
கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற சட்டத்தை அமல்படுத்தியுள்ள நாடுகளில் வாக்களிக்காதவர்களுக்கு வெவ்வேறு விதமான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. சில நாடுகளில் வாக்களிக்க தவறும் வாக்காளர் சரியான காரணத்தை தெரிவிக்காவிட்டால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. சில நாடுகளில் வாக்களிக்க தவறும் போது சிவில் உரிமைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. சில நாடுகளில் வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் செலுத்த வகை செய்யப்பட்டுள்ளது. சில நாடுகளின் சட்டங்களில் வாக்களிக்காதவர்களுக்கு சிறை தண்டனை விதிக்க கூட வழி செய்யப்பட்டு இருப்பினும் அவ்வாறு எந்த நாட்டிலும் இதுவரை சிறை தண்டனை விதைக்கப்பட்டதில்லை.
ஆஸ்திரேலியாவில் தேர்தலில் வாக்களிக்க தவறுபவர்களுக்கு ரூபாய் ஆயிரம் முதல் பத்தாயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள 2.6 கோடி மக்களில் வாக்குரிமை படைத்த 92% வாக்காளர்கள் கடந்த தேர்தலில் வாக்களித்துள்ளார்கள். உடல்நலம் பாதித்தவர்கள், வெகுதூரப் பயணத்தில் இருப்பவர்கள், எந்த முகவரியும் இல்லாதவர்கள், வாக்காளராக பதிவு செய்யாதவர்கள் ஆகியோருக்கு உள்ளிட்டோருக்கு கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
1893 ஆம் ஆண்டு முதல் பெல்ஜியத்தில் கட்டாய வாக்களிப்பு நடைமுறையில் உள்ளது. பெல்ஜியத்தில் வாக்களிக்க தவறினால் அரசு பணிகளில் வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
1932 ஆம் ஆண்டு முதல் பிரேசிலில் கட்டாயம் வாக்களிப்பது சட்டமாக உள்ளது. பிரேசிலில் வாக்களிக்க தவறினால் பாஸ்போர்ட், பல்கலைக்கழகங்களில் சேர்க்கை, அரசு வேலை வாய்ப்பு, வங்கியில் கடன் முதலானவற்றை பெற இயலாது.
கட்டாய வாக்களிப்பு நடைமுறையில் உள்ளதால் கொரோனா தொற்று பரவி இருந்த 2020 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற தேர்தலில் 95 சதவீத வாக்காளர்கள் வாக்களித்தனர். சிங்கப்பூரில் வாக்களிக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றன. சரியான விளக்கம் அளித்தால் மட்டுமே மீண்டும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க முடியும். வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட இயலாது.
எகிப்தில் கட்டாய வாக்களிப்பு சட்டம் அமலில் உள்ளது. வாக்களிக்க தவறினால் அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்க இந்த சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த சட்டத்தின்படி வாக்காளர்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை.
ஆஸ்திரியா, பல்கேரியா, இத்தாலி, லெபனான், நெதர்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கட்டாய வாக்களிப்பு சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் நீக்கப்பட்டு விட்டது.