Advertisement

குழந்தைகள் உரிமைகள் குறித்த தேர்தல் அறிக்கை – அரசியல் கட்சிகளுக்கு சில கேள்விகள்! படியுங்கள்!  பிடித்தால் அனைவருக்கும் அனுப்புங்கள்! 

கடந்த 1990 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் உரிமைகளுக்கான பிரகடனம் வெளியிடப்பட்டது. இதனை கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாளில் இந்தியா ஏற்று கையொப்பம் செய்தது. இந்தியாவில் கடந்த   2005 ஆம் ஆண்டு   தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டம் இயற்றப்பட்டது. இதன் விளைவாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் மாநிலங்களில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்களும் மாவட்ட அளவில் மாவட்ட குழந்தைகள் நீதிமன்றங்களும் ஏற்படுத்தப்பட்டன.

இந்நிலையில் கீழ்கண்ட கேள்விகள் குறித்து மக்களவைத் தேர்தல் களத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பதிலளிக்க வேண்டியது அவசியம் ஆகும். இதுவே குழந்தைகள் உரிமைகள் குறித்த தேர்தல் அறிக்கையாகும்.

1. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவராக குழந்தைகள் பாதுகாப்புக்கான விவகாரங்களை கவனிக்கும் மத்திய  அமைச்சரும் உறுப்பினர்களாக   அரசின் பிரதிநிதிகளும் உள்ளார்கள். இத்தகைய நிலை காரணமாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட அரசியல் ஆதரவு தேவைப்படுகிறது.  இதனை மாற்றி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவராக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் உறுப்பினர்களாக மூத்த இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் கொண்ட தேர்வு குழுவை அமைக்கும் வகையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டத்தை திருத்தம் செய்ய அரசியல் கட்சிகள் நடைபெறும்   தேர்தல் களத்தில் வாக்குறுதி அளிப்பார்களா? அல்லது   தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவிற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைவராக இருப்பதைப் போல தேர்வு குழுவாவது குறைந்தபட்சம் அமைக்க அரசியல்   கட்சியினர் ஆதரவளிப்பார்களா?

2. மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு  ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவராக குழந்தைகள் பாதுகாப்புக்கான விவகாரங்களை கவனிக்கும் மாநில  அமைச்சரும்  உறுப்பினர்களாக   அரசின் பிரதிநிதிகளும் உள்ளார்கள்.. இத்தகைய நிலை காரணமாக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு  ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட அரசியல் ஆதரவு தேவைப்படுகிறது.  இதனை மாற்றி மாநில   குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு  ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவராக சம்பந்தப்பட்ட மாநிலத்தின் உயர்   நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் உறுப்பினர்களாக மூத்த இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் கொண்ட தேர்வு குழுவை அமைக்கும் வகையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டத்தை திருத்தம் செய்ய அரசியல் கட்சிகள் நடைபெறும்   தேர்தல் களத்தில் வாக்குறுதி அளிப்பார்களா? அல்லது   மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவிற்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைவராக இருப்பதைப் போல தேர்வு குழுவாவது குறைந்தபட்சம் அமைக்க அரசியல்   கட்சியினர் ஆதரவளிப்பார்களா?

3. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் கீழும் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்கள் மாநில அரசுகளில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் நலனை கவனிக்கும் துறையின்   கீழும் செயல்படுகின்றன. இதனால்   தேசிய மற்றும் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்களுக்கு தன்னாட்சி இல்லாத நிலை இருப்பதாகவே கருதப்படுகிறது.  இந்நிலையை மாற்றிட தேசிய மற்றும் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சட்ட துறையின் கீழ் செயல்படும் வகையில் சட்ட திருத்தத்தை மேற்கொள்ள   தேர்தல் களத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பார்களா?

4. பல மாநிலங்களில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் செயலாளராக அரசு செயலாளர் அந்தஸ்தில் பிரத்யோகமான அலுவலர் (independent secretary) நியமனம் செய்யப்படாமல் மகளிர் மற்றும் குழந்தைகள் விவகாரங்களை கவனிக்கும் துறையின் உயர்   அலுவலரே   ஆணைய செயலாளர் பொறுப்பை  வகிக்கிறார்கள்.  ஒரு நீதிபதி தனது வழக்கிற்கு நீதிபதியாக இருக்க முடியாது என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அரசின்   உயர் அலுவலர் ஒருவர் அரசின் குழந்தை உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணையத்தின் செயலாளராக இருக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படுமா?

5. குழந்தைகள் உரிமைகள் மீறல்களையும் குழந்தை பாதுகாப்பு குறித்த புகார்களையும் விசாரிக்கும் தேசிய மற்றும் மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையங்களில் விசாரணை நடத்துவதற்கான நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிமுறைகள் (One nation, One adjudication procedure) ஏற்படுத்த அரசியல் கட்சிகள் முன்வருவார்களா?

6. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் குறைந்தது இரண்டு உறுப்பினர்கள் பதவிகள்   தொடர்ந்து காலியாக உள்ளன. இதைப்போலவே தமிழகத்தில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக தலைவர் மற்றும் உறுப்பினர்கள் யாரும் இல்லை. தேசிய மற்றும் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்   பதவிகள்  காலியிடம் ஏற்படும்போது வெகு நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது வருடங்கள் அந்தப் பதவிகளில் உரிய நபர்களை நியமிக்காமல் இருப்பது தொடர்கதையாக உள்ளது.  இதனை மாற்றும் வகையில் தேசிய மற்றும் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு பாதுகாப்பு ஆணையங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர்களை சம்பந்தப்பட்ட அரசு நியமனம் செய்யாவிட்டால் பதவி இடம் காலியானதிலிருந்து ஒரு மாதத்திற்குள் உயர்நீதிமன்றங்கள் மூலமாக விண்ணப்பம் வரவேற்கப்பட்டு நியமனம் செய்யப்படும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படுமா?

7. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உள்ளது போல சிறப்பு புலனாய்வு பிரிவு பல்வேறு மாநில மனித குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்களில் அமைக்கப்படாமல் உள்ளதை நிவர்த்தி செய்யும் வகையில்   தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்திலேயே இத்தகைய குழுக்கள் கட்டாயம் என்ற வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படுமா?

8. பல்வேறு மாநிலங்களில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகுகளில் பல ஆண்டுகளாக பணியாற்றும் ஊழியர்கள் தற்காலிக   ஊழியர்களாகவே பணியாற்றும் நிலைமை இருந்து வருவது மாற்றப்பட்டு பல ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களின் பணி நிரந்தரப்படுத்தப்படுமா?

9. தேசிய மற்றும் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்களுக்கு உரிய கட்டமைப்பு வசதிகளும் நிதி ஒதுக்கீடும்   ஆட்சிக்கு வந்தால் செய்து தருவோம் என்று தேர்தல் களத்தில் உள்ள கட்சிகள்  வாக்குறுதி அளிப்பார்களா?

10. குழந்தைகள் பாதுகாப்புக்காக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்கள் சட்டம், இளையோர் நீதி சட்டம், குழந்தை திருமண தடுப்புச் சட்டம், விடுதிகள் நெறிப்படுத்துதல் சட்டம் போன்ற பல சட்டங்கள் உள்ள நிலையில் இவற்றை ஒருங்கிணைத்து குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் (Children’s Code) இயற்றப்படுமா?

11. மாவட்டங்களில் குழந்தை பாதுகாப்புக்கு விசாரணை அமைப்பாக செயல்படும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு குழுக்கள் (District Child Welfare Committees) மாநில அரசின் கீழ் இல்லாமல் மாநில குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணையத்தின் கீழ் இயங்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள முன்வருவார்களா?

12. மாநில அரசுகள் அரசின் ஆணை மூலம் ஏற்படுத்தியுள்ள மாவட்ட அளவிலான, ஒன்றிய அளவிலான, ஊராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்களையும் பேரூராட்சி அளவிலான, நகராட்சி அளவிலான, மாநகராட்சி  அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்களையும்   வலுப்படுத்தவும் இதை போலவே குழந்தைகள்   சபைகளை வலுப்படுத்தவும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையச் சட்டத்தை திருத்தி இந்த அமைப்புகளுக்கு சட்ட அந்தஸ்து வழங்கப்படுமா?

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles