இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய தற்போதைய நாடுகள் ஒன்றாகவே இருந்தன. இந்த மூன்று நாடுகளும் ஒரே இந்தியாவாக சுதந்திரத்திற்கு பின்னர் இருந்திருக்க வேண்டிய நிலையில் சுதந்திரத்தின் போது தனி பாகிஸ்தான் கோரிக்கையை முகமது அலி ஜின்னா முன் வைத்ததன் காரணமாக சுதந்திரம் வழங்கிய பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவைப் பிரித்து இந்தியா, பாகிஸ்தான் என்ற நாடுகளை உருவாக்கி சுதந்திரத்தை வழங்கியது. சுதந்திரம் வழங்கப்பட்ட போது பாகிஸ்தான் நாட்டின் ஒரு பகுதியாகவே கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில் தற்போதைய வங்கதேசம் உருவானது.
நமது நாட்டிற்கு மேற்கிலும் தென் கிழக்கிலும் பாகிஸ்தான் இருந்து வந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் அரசாங்கம் கிழக்கு பாகிஸ்தானாக விளங்கியதாக வங்கதேச மாகாணத்தை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்தி வந்தது. 1947 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானின் பகுதியாக வங்கதேசம் இருந்து வந்த நிலையில் கடந்த 1971 ஆம் ஆண்டில் மக்களின் புரட்சி மூலமாக பாகிஸ்தான் ராணுவத்தையும் பாகிஸ்தான் அரசமைப்புகளையும் வங்கதேசத்திலிருந்து துரத்தியது. வங்கதேச புரட்சியாளர்களுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் நடைபெற்ற போரில் இந்தியா நேரடியாக பங்கேற்று வங்கதேச சுதந்திரத்திற்கு உதவியது என்பதை சரித்திரத்தால் எந்த காலத்திலும் மறுக்க இயலாது. இன்று வங்கதேசம் என்ற ஒரு நாடு இருக்கிறது என்றால் அதற்கு இந்தியாதான் காரணம் என்று உலக நாடுகள் ஒப்புக்கொள்ள ஒருபோதும் தயங்குவதில்லை.
வங்கதேசத்துடன் இந்தியா 4,906 கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. மேற்குவங்கம், திரிபுரா, மேகாலயா, அசாம், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்கள் வங்கதேசத்தின் எல்லையாக இருந்து வருகின்றன. வங்கதேசம் சுதந்திரம் பெற்ற பின்னர் இந்தியாவுடன் தொடர்ந்து நல்ல நட்பையே பேணி வந்துள்ளது. இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவில் ஒவ்வொரு ஆண்டும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் சார்பில் வங்கதேசத்தில் வறுமை ஒழிப்பிற்கும் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தி மக்களின் வளர்ச்சிக்கும் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்திய ஆதரவு வங்கதேச அரசு வங்கதேசத்தில் நீடித்து இருப்பதை பாகிஸ்தான் விரும்பாததால் வங்கதேசத்தில் சதி வேலைகளை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தொடர்ந்து நிறைவேற்றி வந்துள்ளது என்பதை சரித்திரம் காட்டுகிறது. வங்கதேச சுதந்திரத்துக்கு காரணமாக இருந்தவரும் வங்கதேசத்தின் முதலாவது பிரதமருமான தற்போது பிரதமராக இருந்து பதவி விலகிய தந்தையான ஹசீனாவின் தந்தையான முஜிபுர் ரஹ்மானை திட்டமிட்டு பயங்கரவாதிகள் படுகொலை செய்தார்கள். இதன் தொடர்ச்சியாக இரண்டு முறை வங்கதேசத்தில் ராணுவ ஆட்சியில் ஏற்பட்டன. புரட்சிகர எழுச்சியின் மூலமாக ஆட்சியைப் பிடித்த ஹசீனா ஐந்து முறை வங்கதேசத்தின் பிரதமராக பதவி வகித்துள்ளார்.
இந்தியாவின் நட்பு நாடாக வங்கதேசம் இருப்பதை பொறுக்க இயலாத பாகிஸ்தானின் உளவு அமைப்பு சீனாவின் துணையோடு பல்வேறு சதிகளை செய்து வந்தது. இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர் போராட்டம் தற்போது வங்கதேசத்தில் ஏற்பட்டிருக்க ஆட்சி மாற்றத்திற்கு காரணம் என்று பொதுவாக கூறப்படுகிறது. ஆனால், இந்த போராட்டத்திற்கு பின்னால் பெரிய சர்வதேச சதி வலை பின்னப்பட்டிருக்கிறது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் உள்ள உறவை முற்றிலும் அழிக்க திட்டமிட்டு மாணவர் போராட்டத்தை உருவாக்கி அதனை பயன்படுத்தி வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் நாடகத்தை அரங்கேற்றியதாக பாதுகாப்பு நிபுணர்கள் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் நடந்தவுடன் பாகிஸ்தான் ஆதரவாளரான சிறையில் இருந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். பாகிஸ்தான் ஆதரவு அரசியல் கட்சியின் அமைப்புகளிலும் இயக்கங்களிலும் இருந்து வந்து குற்றச் செயல்களுக்காக தண்டனை பெற்ற பலர் சிறைச்சாலைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். வங்கதேசத்தில் இந்தியாவிற்கு எதிரான மனநிலை உருவாக்கப்பட்டு இருக்கிறது. வங்கதேச மக்களிடையே இந்திய பொருட்களை புறக்கணிக்கின்ற சூழ்நிலையை மாணவர் போராட்டங்கள் உருவாக்கி இருக்கின்றன.
வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தின் மூலம் மக்களாட்சி தூக்கி எறியப்படும் என்பதை இந்தியா கவனிக்க தவறிவிட்டதா? அல்லது தடுக்க இயலாமல் போய் விட்டதா? என்பதை தற்போது கூற இயலாது. எவ்வாறு இருப்பினும் வங்கதேசத்தில் ஏற்பட்டு உள்ள ஆட்சி மாற்றம் இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது என்று கூற இயலும். இந்தியா வங்காளதேசத்திலிருந்து வெளியே வந்துவிட்டது – அங்கே பாகிஸ்தானும் சீனாவும் கைகோர்த்து உள்ளே சென்று விட்டது என்று சிலர் வருணிக்கிறார்கள். இந்த வர்ணனைகளை தகுந்த ராஜதந்திர நடவடிக்கையின் மூலமாக உடைத்து தெற்காசியாவில் சிறந்த நண்பனாக விளங்கிய வங்கதேசத்தை மீண்டும் மக்களாட்சி வழியில் கொண்டு செல்லவும் சிறந்த நண்பனாக மாற்றவும் தகுந்த நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும்.
தெற்கு ஆசியாவில் உள்ள வங்காளதேசம், இலங்கை, மாலத்தீவுகள், பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட இந்தியாவைச் சுற்றியுள்ள அண்டை நாடுகள் அனைத்தும் சீனாவின் நெருங்கிய நட்பு நாடுகளாக மாறி இருப்பதும் இந்தியாவுக்கு கவலை தரக்கூடிய அம்சமாகும். இந்திய வெளியுறவுக் கொள்கையை சீர்தூக்கி ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்க தவறினால் சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்கள் அதிகரிப்பதை தடுத்து நிறுத்த இயலாது.